மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லையா?: நாளுக்கு நாள் அதிகரிக்கும் நீரிழிவு நோய்

மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லையா?: நாளுக்கு நாள் அதிகரிக்கும் நீரிழிவு நோய்
மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லையா?: நாளுக்கு நாள் அதிகரிக்கும் நீரிழிவு நோய்

நீரிழிவு நோய் என்பது இப்போது சர்வசாதாரணமாக ஆகிவிட்டது. கிராமம் நகரம் என அனைத்து தரப்பு மக்களுமே நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆங்காங்கே கேள்விப்பட்ட நீரிழிவு, இப்போது ஊரெங்கும் பரவிக் கிடக்கின்றன. அதற்கு என்ன காரணம்? மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளை மற்றும் Dundee பல்கலைக்கழகம் இணைந்து கிராமப்புற நீரிழிவு நோய் ஆய்வு குறித்த கருத்தரங்கத்தை சென்னையில் நடத்தியது. இதில் மருத்துவர்கள், பேராசிரியர்கள் என பலர் கலந்துகொண்டனர். இந்தக் கருத்தரங்கில் ஒரு அதிர்ச்சித்தகவல் கூறப்பட்டது.

அது கிராமப்புறங்களில் நீரிழிவு நோய் பாதிப்பு, கடந்த 15 ஆண்டுகளில் 13.5 சதவீதமாக உயர்ந்துள்ளது என்பதே. அந்தக் கருத்தரங்கில் கூறப்பட்ட தகவலின்படி, 2006-ஆம் ஆண்டு சூனாம்பேடு கிராமத்தில் நடத்திய ஆய்வில் 4.9 சதவிகிதமாக இருந்த நீரிழிவு நோய், 2011-ல் 8 சதவிகிதமாக உள்ளது. தற்போது காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் அருகே 25 கிராமங்களில் நடத்திய ஆய்வில், 13.5 சதவிகிதமாக அதிகரித்துள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக 2019-ல் NOVA NORDISK EDUCATION FOUNDATION என்ற அமைப்பு 28 நகரங்களில் வசிக்கும் சுமார் ஒரு லட்சத்து 80 ஆயிரம் நீரிழிவு நோயாளிகளிடம் ஆய்வுகள் மேற்கொண்டது. அந்த ஆய்வு கூறிய முடிவு என்னவென்றால்?, நீரிழிவு நோய் பாதிப்புக்கு காரணமான ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதில் இந்தியர்களிடம் விழிப்புணர்வு இல்லை.

HbA1c எனப்படும் நீரிழிவு நோயின் தன்மையைக் கண்டறிய செய்யப்படும் ஆய்வில், ஒரு நபருக்கு 3 மாத சராசரி 6 சதவிகிதத்திற்கும் கீழ் இருந்தால் அவருக்கு நீரிழிவு நோய் இல்லை என்றும் 8 சதவிகிதத்திற்கும் மேல் இருந்தால் கட்டுப்படுத்த இயலாத சர்க்கரை நோய்‌ எனவும் கூறப்பட்டுள்ளது. அதன்படி நடத்தப்பட்ட அந்த ஆய்வில்,

மும்பைவாசிகளில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் சராசரி HbA1c அளவு 8.2 சதவிகிதமாகவும், டெல்லியில் 8.8 சதவிகிதமாகவும், சென்னை மற்றும் கொல்கத்தாவில் முறையே 8.2% மற்றும் 8.1% ஆக உள்ளது. குறிப்பாக பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு நீரிழிவு நோய் பாதிப்பு அதிகம் ஏற்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு நீரிழிவு நோய் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாமை மற்றும் சிகிச்சை மேற்கொள்ளத் தவறியதுமே காரணம் என ஆய்வுகள் கூறுகின்றன.

2017 கணக்கெடுப்பின்படி புள்ளிவிவரம் கூறிய அந்த ஆய்வு, இந்தியாவில் சுமார் 7 கோ‌டியே 29 லட்சம் பேருக்கு நீரிழிவு‌ நோய் பாதிப்பு இருந்ததாகவும், அதில் 80 சதவிகிதம் பேர் மருத்துவ சிகிச்சை பெறவில்லை எனவும் அதிர்ச்சி தகவலை கூறியது.

துரித உணவுகள், மனஅழுத்தம், தூக்கமின்மை, உடற்பயிற்சி செய்யாதது என வாழ்வியல் முறைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களே இதுபோன்ற நோய்கள் அதிகரிக்கக் காரணமாக உள்ளது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், சரிவிகித உணவு எடுத்துக்கொள்ளவேண்டும், காய்கறி‌கள், பழங்கள் அதிக அளவு எடுத்துக்கொள்ள வேண்டும், உடல்பருமன், தொப்பையை குறைக்க வேண்‌டும், மனப் பதற்றத்தை கட்டுப்படுத்த யோகா செய்ய வேண்டும் போன்ற அறிவுரைகளையும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆரோக்யமான உணவுமுறை, சரியான உடற்பயிற்சி, உடலளவில் மட்டுமின்றி மனதளவிலும் ஆரோக்கியம் ஆகியவற்றை கடைபிடித்தால் நிச்சயம் நீரிழிவு நோய் நம்மை அண்டாது என தெரிவிக்கும் மருத்துவர்கள் அப்படி நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்களும் முறையான விழிப்புணர்வுடன் சரியான சிகிச்சை எடுத்துக்கொண்டால் கட்டுப்படுத்திக் கொள்ளலாம் என்றும் கூறுகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com