சுவிட்சர்லாந்தா போறீங்க? ஒரு பாட்டில் காற்று வாங்கிட்டு வாங்க!
நாம் சுற்றுலாவிற்குச் செல்லும் போது போகும் இடங்களில் பிரபலமான பொருட்களை வாங்கி வருவதுண்டு. அந்த வகையில், சுவிட்சர்லாந்து சென்றால், சுவிஸ் சீஸ், சுவிஸ் சாக்லேட் போன்றவற்றை வாங்கி வருவார்கள். ஆனால் தற்போது சுவிஸ் காற்றையே வாங்கி வரலாம்.
சுவிட்சர்லாந்தில், ஆல்ப்ஸ் மலைக்காற்றைப் பாட்டிலில் அடைத்து, விற்பனை செய்யத் தொடங்கிவிட்டார் ஜான் கிரீன் என்பவர். ஆல்ப்ஸ் மலைத்தொடரில் தங்கி உலகின் அதிவேகமாக கரைந்துவரும் உறைபனி ஏரியிலிருந்து, பனிப்பாறைகள் சிலவற்றை வெட்டி எடுத்து அதைப் பாட்டிலில் அடைத்து விற்பனை செய்கிறார் இவர்.
இதுகுறித்து ஜான் கிரீன் கூறும்போது, நான் பிறந்தது லண்டனில். ‘கடந்த 20 ஆண்டுகளாக சுவிட்சர்லாந்தில் பேசல் மாகாணத்தில் வசிக்கிறேன். ஐஸ் போன்று உறைய வைக்கப்பட்ட மலைகாற்றைப் பாட்டில்களில் இருந்து சுவாசித்து உணர முடியும். இந்த விற்பனை மூலம் கிடைக்கும் வருவாயின் ஒருபகுதியை தொண்டு நிறுவனங்களுக்கு அளிக்க விரும்புகிறேன்’ என்கிறார்.
ஆல்ப்ஸ் மலைக்காற்று தற்போது அரை லிட்டர் முதல் 3 லிட்டர் பாட்டில்களில் விற்பனைச் செய்யப்படுகிறது. இந்தக்காற்று உரிய ஆவணங்களுடன் இணைக்கப்பட்டு விற்பனைச் செய்யபடுவதாகவும் ஜான் தெரிவித்துள்ளார். ஒரு லிட்டர் பாட்டிலின் விலை 167 டாலர். இந்திய மதிப்பில் ரூ.11163 ஆகும்.