சுவாமி விவேகானந்தர் பிறந்த தினம் | ‘புகழ்ந்தாலும் இகழ்ந்தாலும் உண்மை பாதையிலிருந்து பிறழக்கூடாது!’!

“உலகில் உள்ள மக்கள் உன்னை புகழ்ந்தாலும் சரி இகழ்ந்தாலும் சரி, நீ உண்மை என்னும் பாதையிலிருந்து அணுவளவேனும் பிறழாமல் கவனமாக இருக்க வேண்டும்” - சுவாமி விவேகானந்தர்
சுவாமி விவேகானந்தர்
சுவாமி விவேகானந்தர்PT

தேசிய இளைஞர் தினம் 2024

மக்களுக்கு கல்வி முக்கியம் என்பதை போதித்தவர் சுவாமி விவேகானந்தர். இவரது பிறந்தநாளான இன்று, தேசிய இளைஞர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் விவேகானந்தர் யார், இவரின் வரலாறு என்ன என்பதை தெரிந்துக்கொள்ளலாம்.

நரேந்திர நாத் தத்தா என்று இயற்பெயரைக்கொண்ட சுவாமி விவேகானந்தர், 1863 ஜனவரி 12 அன்று கொல்கத்தாவில் ஒரு வசதியான குடும்பத்தில் பிறந்தவர்.

அவரது தந்தை, விஸ்வநாத் தத்தா, வழக்கறிஞராக இருந்தார், அவரது தாயார் புவனேஷ்வரி. சிறுவயதில் நரேந்திரன் படிப்பில் சிறந்து விளங்கினார். கல்கத்தா பல்கலைக்கழகத்தில் BA பட்டம் பெற்றார். இருப்பினும் தியானம், பிரம்ம இயக்கத்தில் விருப்பம் கொண்டிருந்தார்.

எவர் ஒருவருடைய நெஞ்சு ஏழை மக்களுக்காகத் துயரத்தில் அழுமோ, அவரையே நான் மகாத்மா என்பேன்.

சுவாமி விவேகானந்தர்

ஒரு நம்பிக்கை வரும் முன்னதாக பல சந்தேகங்கள் நமக்குள் கிளம்பும், சந்தேகத்திற்கான விடை தெரியவந்ததும் நம்பிக்கையானது வேறூன்றி நிற்கும். அதே போல், சிறு வயதில் நரேந்திரருக்கு கடவுள் இருக்கிறாரா என்ற சந்தேகம் நிறைய இருந்தது. யாரிடமும் இதற்கான சரியான பதில் கிடைக்காத நேரத்தில், அவருடைய கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியர் ஒருவர் மூலமாக ஸ்ரீராமகிருஷ்ணரைப் பற்றி முதன்முதலில் கேள்விப்பட்டார். அத்தருணத்திலிருந்து ஸ்ரீராமகிருஷ்ணரை நேரில் சந்திக்க ஆர்வம் கொண்டிருந்தார்.

1881ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஒரு நாள், தக்ஷினேஷ்வரில் உள்ள காளி கோயிலுக்கு ஸ்ரீராமகிருஷ்ணர் வருவதைத் தெரிந்துக்கொண்ட நரேந்திரன் அவரை சந்திக்க சென்றார். ஸ்ரீராமகிருஷ்ணரை கண்டதும் நரேந்திரனுக்கு இனம் புரியாத ஈர்ப்பு அவர்மேல் எழுத்தது. அவரிடம் கடவுள் குறித்த தனது சந்தேகத்தை கேட்டு தெரிந்துக்கொள்ளலாம் என்று நினைத்த நரேந்திரன் "ஐயா, நீங்கள் கடவுளைப் பார்த்தீர்களா?" என்று கேட்டார். நரேந்திரனின் கேள்விக்கு சிறிதும் தயங்காமல் ஸ்ரீராமகிருஷ்ணரும் பதிலளித்தார்: “ஆம், நான் உங்களைப் பார்ப்பது போல் அவரையும் தெளிவாகப் பார்க்கிறேன், மிகவும் தீவிரமான அர்த்தத்தில் மட்டுமே பார்க்கிறேன்.” என்றார். மேலும் கடவுளின் மீதான இருந்த பல சந்தேகங்களுக்கெல்லாம் ராமகிருஷ்ணர் அவருக்கு விடையளித்தார்.

பலமற்ற மூளையில் நாம் எதையுமே செய்ய இயலாது. அதனால் நாம் அதைப் பலப்படுத்த வேண்டும்

சுவாமி விவேகானந்தர்

ஸ்ரீராமகிருஷ்ணரின் தூய்மையான தன்னலமற்ற அன்பினால் கவரப்பட்ட நரேந்திரன், அவருக்கு சிஷ்யராக மாறினார். அதனால் ஸ்ரீராமகிருஷ்ணர் தங்கியிருந்த தஷினேஷ்வருக்கு அடிக்கடி செல்ல ஆரம்பித்து, இறுதியில் தனது ஆன்மீகவழியை தேர்ந்தெடுத்துக்கொண்டார். பின்னர், குருவின் போதனைகளை ஏற்று துரவறவாழ்க்கையை மேற்கொண்டு தனது பெயரை சுவாமி விவேகானந்தர் என்று மாற்றிக்கொண்டார். குருவின் காலத்திற்கு பிறகு சீடர்கள் அனைவரும் ஒன்று கூடி விவேகானந்தரை குருவாக ஏற்றுக்கொண்டனர்.

பிறகு குருவின் போதனைகளை பரப்புவதற்காக இந்தியா முழுவதும் சுற்றுபயணத்தை மேற்கொண்டார். மக்களின் பயங்கரமான வறுமை மற்றும் பின்தங்கிய நிலையைக் கண்டு ஆழ்ந்து வருந்தினார். இந்தியாவின் வீழ்ச்சிக்கு உண்மையான காரணம் மக்கள் புறக்கணிப்புதான் என்பதை புரிந்துகொண்டு, அதை வெளிப்படையாக அறிவித்த இந்தியாவின் முதல் மதத் தலைவர் அவரே.

அவர் சந்தித்த வெகுஜனங்களுக்கு இரண்டு வகையான அறிவு தேவைப்பட்டது,

1.அவர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்த அவர்களுக்கு உலக அறிவு மற்றும் ஆன்மீக அறிவு தேவை.

2. அவர்களுக்கு நம்பிக்கையை ஊட்டி, அவர்களின் தார்மீக உணர்வை வலுப்படுத்த வேண்டும்

ஆகியவைதான்

இந்த இரண்டு வகையான அறிவையும் மக்களிடையே எவ்வாறு பரப்புவது? என்று யோசித்த சமயத்தில் அவருக்கு கிடைத்த பதில் கல்விதான்.

1893 இல் சிகாகோவில் உலக மதங்களின் பாராளுமன்றம் நடைபெறுவதைப் பற்றி கேள்விப்பட்டு அதில் கலந்து கொள்ள விரும்பினார். ஏனெனில் பாராளுமன்றம் போன்ற ஒரு இடத்தில்தான், தனது குருவின் செய்தியை உலகிற்கு முன்வைக்கவும், வெகுஜன மக்களை மேம்படுத்துவதற்கு நிதி சேகரிக்கவும் இயலும் என்று விரும்பி அமெரிக்காவிற்கு சென்றார்.

கபடம் இல்லாத நாத்திகன் வஞ்சகனை விடச் சிறந்தவன் ஆவான்.

சுவாமி விவேகானந்தர்

செப்டம்பர் 1893 இல் நடைபெற்ற உலக சமயப் பாராளுமன்றத்தில் அவர் ஆற்றிய உரைகள் அவரை 'தெய்வீக உரிமையால் சொற்பொழிவாளர்' என்றும் 'மேற்கத்திய உலகிற்கு இந்திய ஞானத்தின் தூதுவர்' என்றும் மக்கள் புகழ காரணமாய் அமைந்தன. பாராளுமன்றத்திற்குப் பிறகு, சுவாமி விவேகானந்தர் கிட்டத்தட்ட மூன்றரை வருடங்கள் ஸ்ரீ ராமகிருஷ்ணர் வாழ்ந்த மற்றும் போதித்த வேதாந்தத்தை, அமெரிக்காவிலும், லண்டனிலும் பரப்பினார்,

அவர் ஜனவரி 1897 இல் இந்தியா திரும்பினார். இந்தியாவில் அவருக்கு எல்லா இடங்களிலும் உற்சாகமான வரவேற்பு கிடைத்தது. அவர் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியான சொற்பொழிவுகளை நிகழ்த்தினார், அப்பொழுது இவரின் சொற்பொழிவு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

உலகில் உள்ள மக்கள் உன்னை புகழ்ந்தாலும் சரி இகழ்ந்தாலும் சரி, நீ உண்மை என்னும் பாதையிலிருந்து அணுவளவேனும் பிறழாமல் கவனமாக இருக்க வேண்டும்

சுவாமி விவேகானந்தர்

கல்கத்தாவில் 1897 ஆம் ஆண்டு மே 1 ஆம் தேதி ராமகிருஷ்ணா மிஷன் என்ற அமைப்பை நிறுவினார். இதன் மூலம் பல சமூக சேவைகள் செய்து வந்தார். பல ஏழை மக்கள் இவரது அமைப்பால் நலம்பெற்றனர். அவரது வாழ்நாள் முழுவதும் இந்தியாவில், துறவறம் மற்றும் பொது மக்களை ஊக்குவித்து, வழிகாட்டியாகக் கழித்தார். இடைவிடாத பணி, குறிப்பாக சொற்பொழிவுகள் மற்றும் மக்களை உற்சாகப்படுத்துதல் என்ற பரபரப்பிலேயே அவர் வாழ்வு இருந்ததால், அவரது உடல்நிலை இளம்வயதிலேயே மோசமடைந்தது. 1902 ஜூலை 4 இரவு தனது 39 வது வயதில் உயிர்நீத்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com