”இன்னும்கொஞ்சம் பொறுத்திருக்கலாமே சூர்யா” திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் ஆதங்கம்
சூர்யாவின் சூரரை போற்றுதான் இன்று டாக் ஆஃப் தி டவுணாக இருக்கிறது. சூரரைப் போற்று அமேசானில் வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியானதும்தான் வெளியானது, போட்டிப் போட்டிக் கொண்டு ஆதரவு கருத்துக்களும் எதிர்கருத்துக்களும் முட்டி மோதிக் கொள்கின்றன. ஆகவே திரையரங்க உரிமையாளர்கள் இதனால் என்ன பிரச்னையை எதிர்கொள்கிறார்கள் என்பதை அறிய தமிழகத்தில் உள்ள சில முக்கிய திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகிஸ்தர்களிடம் பேசினோம்.
நெல்லை ராம் முத்துராம் சினிமாஸ் உரிமையாளர் ராமசாமி ராஜா:
ஓடிடி தளங்கள் அதனது சப்ஸ்க்ரைபர்களை கூட்டுவதற்கு இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்கின்றன. தியேட்டர் என்பது உரிமையாளராகிய என்னை மட்டும் சார்ந்தது அல்ல. எனக்கு கீழே பணியாற்றி வரும் தொழிலாளர்களையும் சார்ந்தது. சூர்யாவுக்கு நிச்சயம் நெருக்கடி இருக்கும். நான் இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் இத்தனை ஆண்டுகளாக தியேட்டர் உரிமையாளர்கள் அவரது படங்களுக்கு கொடுத்த ஒத்துழைப்பை அவர் மறக்கக் கூடாது. அரசானது ஒவ்வொருத் துறைக்கும் கட்டுப்பாடுகளுடன் கூடிய தளர்வுகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் திரைத்துறைக்கும் கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதி கிடைக்கும். இவ்வளவு நாட்களாக சூர்யா பொறுமை காத்தார். இன்னும் சிறிது காலம் பொருத்திருந்தால் நாங்களே அப்படத்தை ரிலீஸ் செய்திருப்போம். ஆனால், அவர் எங்களை நினைத்துப் பார்க்க வில்லை.
பெரிய படங்களை பொறுத்தவரை முதல் மூன்று நாட்கள்தான் கூட்டம். அதன் பின்னர் தியேட்டருக்கு வரும் மக்களின் எண்ணிக்கையானது 50 சதவீதமாக மட்டுமே இருக்கிறது. ஆகவே அரசு 50 சதவீத மக்களுடன் தியேட்டர் இயங்கலாம் என அறிவித்தாலும் கூட, எங்களால் படத்தை ரீலிஸ் செய்திருக்க முடியும்.
பாப் கார்ன், பார்க்கிங் கட்டணம் குறித்து எழுப்பிய கேள்விக்கு “ தயாரிப்பாளர்கள் ஏன் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களிடம் செல்கிறார்கள். அங்கே குவாலிட்டி இருக்கிறது. அதே போலதான் மல்டிப்ளக்ஸ் திரையரங்களும். இங்கு வரும் மக்கள் யாரையும் இங்கே கொடுக்கும் பாப் கார்னை வாங்க வேண்டும் என்று நாங்கள் கட்டாயப்படுத்துவதில்லை. அவர்களுக்கு வெளியே திரைப்படங்களை பார்ப்பதற்கு நிறைய திரையரங்குகள் இருக்கின்றன. ஆனால் ஏன் இங்கு வர வேண்டும். காரணம் குவாலிட்டி.
இன்னொரு விஷயம் நடிகனுக்கான பாப்புலாரிட்டி, தியேட்டரில் கிடைப்பது போல் வேறேங்கும் கிடைக்காது. அவரது கடந்த சில படங்கள் நஷ்டமடைந்த போதும் திரையரங்கு உரிமையாளர்கள் அவர் பக்கம் நின்றனர். ஆகையால் கடுமையான இந்தச் சூழ்நிலையை வெல்ல நடிகர்கள் அவர்கள் சம்பளத்தை குறைத்து திரையரங்கு உரிமையாளர்களுக்கு உதவ வேண்டும்.
மதுரை கணேஷ் திரையரங்க உரிமையாளர் முருகன்:
கடந்த வருடங்களில் சூர்யாவின் பல படங்கள் நஷ்டத்தை சந்தித்தன. அந்த சமயங்களில் நாங்கள் அவருடன் இருந்தோம். இதை ஏதோ ஒரு புது தயாரிப்பாளர் செய்தால் பரவாயில்லை. சினிமாத்துறையில் உச்சத்தில் உள்ள சூர்யாவே இதைச் செய்திருப்பதுதான் எங்களுக்கு கஷ்டமாக உள்ளது. இந்த தியேட்டர்கள்தான் அவரை இன்று உச்சத்தில் இருக்க வைத்திருக்கிறது. ஓடிடி யின் நோக்கமே தியேட்டர்களை ஒழித்துக்கட்டுவதுதான்.
அவர்கள் ஆரம்பத்தில் அனைத்துப்படங்களையும் அதிக விலைக் கொடுத்து வாங்குவார்கள். அதன் மூலம் தியேட்டர்களுக்கு வரும் படங்கள் குறையும். இறுதியில் தியேட்டர்கள் அனைத்தும் மூடப்படும். அப்போது ஓடிடி நிறுவனங்கள் படத்திற்கான விலையைத் தீர்மானிக்கும். நடிகர்களும் தங்களது பொலிவை இழந்து விடுவார்கள். ஆகையால் இந்த நெருக்கடியிலிருந்து திரையரங்குகளை காப்பாற்ற நடிகர்கள் சம்பளக் குறைப்பு குறித்தான முடிவை எடுக்க வேண்டும்.
தென்காசி PSS மல்டிப்ளக்ஸ் திரையரங்க உரிமையாளர் மற்றும் விநியோகஸ்தர் பிரதாப் ராஜா:
ஓடிடி யை வளர்த்தெடுக்க கார்ப்ரேட் கம்பெனிகள் போட்டாப் போட்டி நடத்தி வருகின்றன. அதில் அமேசான் முக்கிய நிறுவனமாக இருக்கிறது. அந்தப் போட்டியை சரியான நேரத்தில் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் சூர்யா. ஏழாம் அறிவுக்குப் பிறகு அவரது பெரும்பான்மையான படங்கள் ஓடவில்லை. சிலப்படங்கள் 20 கோடிக்கு கீழே வசூல் செய்திருக்கிறது. தற்போது சூரரைப் போற்று படத்தின் வெளியீட்டுத் தொகையிலிருந்து கூட அவர் ஏதோ பணத்தை ஒதுக்கியிருக்கிறார். குற்ற உணர்வின் காரணமாகதான் அதைச் செய்திருக்கிறார்.
மற்றொரு விநியோஸ்தகர் கூறும் போது “ தியேட்டர் உரிமையாளர்கள் அவர்களின் சுயநலத்திற்காக குரல் கொடுத்து வருகின்றனர். சூர்யா அமேசானுக்கு சூரரைப் போற்று படத்தை விற்றது காலத்தின் கட்டாயம். இங்கு திரையரங்கு உரிமையாளர்கள் விநியோகஸ்தர்களுக்கு வருமானத்திலிருந்து சரியானத் தொகையை தருவதில்லை. படத்தை ஒரு வேளை திரையங்கத்தின் பக்கம் சூர்யா கொடுத்தால் அவருக்கு திரையரங்கத்தின் சார்பில் இருந்து ஏதாவது உத்திரவாதம் அளிக்கப்படுமா என்ன? ஒன்றும் செய்ய மாட்டார்கள். இன்னொன்று குறிப்பிடத்தக்க விஷயம் சூர்யாவின் தற்போதைய மார்க்கெட் 17 கோடிதான். அதை விட அதிகமாக ஒருவர் தரும் போது அவர் செல்லதான் செய்வார் என்றார்.
- கல்யாணி பாண்டியன்