“வெற்றியுடன் நிறைவடைந்த விவசாயிகளின் ஓராண்டு போராட்டம்” –  டெல்லி சலோ கடந்துவந்த பாதை

“வெற்றியுடன் நிறைவடைந்த விவசாயிகளின் ஓராண்டு போராட்டம்” –  டெல்லி சலோ கடந்துவந்த பாதை
“வெற்றியுடன் நிறைவடைந்த விவசாயிகளின் ஓராண்டு போராட்டம்” –  டெல்லி சலோ கடந்துவந்த பாதை

மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடத்தப்படும் விவசாயிகள் போராட்டம் இன்றுடன் ஒரு வருடத்தை நிறைவு செய்கிறது. இதனை நினைவு கூறும் வகையில் இன்று நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன, காவல்துறை பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் கடந்த ஒரு வருடமாக டெல்லியின் மூன்று எல்லைப் புள்ளிகளான சிங்கு, திக்ரி மற்றும் காஜிபூர் ஆகிய இடங்களில் முகாமிட்டுள்ளனர். மத்திய அரசின் சட்டங்களுக்கு எதிரான தீவிரமான  போராட்டம் கடந்த ஆண்டு நவம்பர் 26-27 தேதிகளில் "டில்லி சலோ"  என்ற அறைகூவலுடன் தொடங்கியது, ஆயிரக்கணக்கான விவசாயிகள் சாரைசாரையாக டெல்லி எல்லைகளை முற்றுகையிட்டனர். இதனை தொடர்ந்து அரசு மற்றும் விவசாய சங்கங்கள் தரப்பில் நடந்த பல கட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்தன. ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தில் நடந்த செங்கோட்டை டிராக்டர் பேரணி முற்றுகையில் வன்முறை ஏற்பட்டது. விவசாயிகளின் தொடர் எதிர்ப்பு மற்றும் போராட்டங்கள் காரணமாக மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் முடிவை மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது.

ஓராண்டு நிறைவடையும் இந்த போராட்டத்தை நினைவு கூறும் வகையில் டெல்லியின் எல்லைகளில் ஏராளமான போராட்டக்காரர்கள் திரண்டுள்ளனர், இதனை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் டெல்லியின் பல்வேறு எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக 40 க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்பான சம்யுக்த் கிசான் மோர்ச்சா வெளியிட்டுள்ள அறிக்கையில், " உழைக்கும் மக்களின் இவ்வளவு நீண்ட போராட்டம் தொடர்ந்தது என்பது இந்திய அரசாங்கத்தின் உணர்ச்சியற்ற தன்மை மற்றும் ஆணவத்தின் தெளிவான பிரதிபலிப்பாகும். உலக வரலாற்றில் மிகப்பெரிய மற்றும் நீண்ட போராட்டங்களில் ஒன்றான இதில் கோடிக்கணக்கான மக்கள் பங்கேற்றனர், இது இந்தியாவின் ஒவ்வொரு மாநிலம், ஒவ்வொரு மாவட்டம் மற்றும் ஒவ்வொரு கிராமத்திற்கும் பரவியது. இந்த இயக்கம் விவசாயிகள், சாதாரண குடிமக்கள் மற்றும் தேசத்திற்கு பல வெற்றிகளைப் பெற்று தந்தது" என்று தெரிவித்துள்ளது.

மூன்று சட்டங்களை ரத்து செய்வது போராட்ட இயக்கத்தின் முதல் பெரிய வெற்றி என்றும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் எஞ்சியுள்ள நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக காத்திருப்பதாகவும் சம்யுக்த் கிசான் மோர்ச்சா தெரிவித்துள்ளது.

விவசாயிகள் போராட்டத்தின் ஓராண்டு நிறைவைக் கொண்டாட சம்யுக்த் கிசான் மோர்ச்சாவின் அழைப்பின் பேரில், இந்தியாவில் பல்வேறு மாநிலங்களின் தலைநகரங்கள் மற்றும் மாவட்டத் தலைமையகங்களில் உள்ள போராட்ட மையங்களில் இருந்து பெரும் எண்ணிக்கையிலான விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் பேசுகின்றனர். மேலும் கர்நாடகா, தமிழ்நாடு, பீகார், மத்தியப் பிரதேசம், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் டிராக்டர்பேரணி, ஆர்ப்பாட்டங்கள், சாலைமறியல் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்தில் இதுவரை குறைந்தபட்சம் 683 விவசாயிகள், தங்கள் இன்னுயிரை தியாகம் செய்துள்ளனர், அவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு மற்றும் மறுவாழ்வு வழங்கவும், விவசாயிகளின் சிங்கு போராட்ட இடத்தில் நினைவிடம் கட்ட நிலம் ஒதுக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு மோர்ச்சா கடிதம் எழுதியிருந்தது.

விவசாயிகள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடங்களில் டெல்லி காவல்துறையினருடன் துணை ராணுவப் படையினரும் பாதுகாப்பு வழங்குகின்றனர், இது தொடர்பாக விவசாய சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. போராட்டக்காரர்கள் எல்லையை கடக்க முயன்றாலோ அல்லது இடையூறு ஏற்படுத்தினாலோ அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com