மல்யுத்தத்தில் மாஸ் காட்டும் ரவிகுமார் தாஹியா; ஹரியானாவிலிருந்து கிளம்பிய இளம்புயலின் கதை!
மல்யுத்த விளையாட்டு என்றாலே இந்தியாவில் ஹரியானா மாநிலம் தான் என பேர் சொல்லும் அளவுக்கு சர்வதேச அளவில் தங்களது காலடியை அழுத்தமாக பதிவு செய்து வருகின்றனர் அம்மாநில வீரர்கள். அவர்களில் ஒருவர் தான் ரவிகுமார் தாஹியா. ஹரியானாவிலிருந்து புறப்பட்டுள்ள இளம்புயல்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் 57 கிலோ ப்ரீஸ்டைல் எடைப் பிரிவில் இறுதி போட்டிக்குள் நுழைந்துள்ளார். நாளை தங்கப்பதக்கம் வெல்வதற்கான போட்டியில் சமர் செய்ய உள்ளார் இந்த 23 வயது இளைஞர்.
யார் இவர்?
வரலாற்று சிறப்புமிக்க பானிபட் போர் நிகழ்ந்த மண்ணுக்கு பக்கத்தில் உள்ள சோனிபட் மாவட்டத்தை சேர்ந்தவர் ரவி குமார். அந்த மாவட்டத்தில் உள்ள நஹ்ரி கிராமம் தான் அவரது பூர்வீகம். விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். சொந்தமாக நிலம் இல்லாத காரணத்தினால் குத்தகைக்கு நிலத்தை எடுத்து விவசாயம் செய்துள்ளார் அவரது அப்பா ராகேஷ் தாஹியா. இவரது கிராமம் முழுவதும் மல்யுத்த வீரர்களுக்கு குறைவே இல்லை.
பத்து வயதில் மல்யுத்த விளையாட்டின் மீது ஆர்வம் வர, அப்போதிலிருந்தே பயிற்சியை தொடங்கி உள்ளார்.
சுஷில்குமார் 2008-இல் ஒலிம்பிக் பதக்கம் வென்றதை பார்த்து ‘நானும் அதே போல நாட்டுக்காக பதக்கம் வெல்ல வேண்டும்’ என கோதாவில் குதித்தவர். இந்தியாவுக்காக மல்யுத்தத்தில் ஒலிம்பிக் பதக்கம் வென்று கொடுத்த சுஷில் குமார், யோகேஷ்வர் தத் மாதிரியான வீரர்கள் பயிற்சி செய்த சத்ரசல் மைதானத்தில் பயிற்சி எடுத்துக் கொண்டவர். அப்பா கொடுக்கின்ற பாலும், பழங்களும் தான் ரவி எடுத்துக் கொண்ட டயட்.
ஜூனியர் பிரிவில் பதக்கங்களை வென்று மாஸ் காட்டியவர்!
2015-இல் நடைபெற்ற ஜூனியர் மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் 55 கிலோ எடை ப்ரீஸ்டைல் பிரிவில் வெள்ளி வென்று அசத்தியவர். 2017-இல் அவருக்கு ஏற்பட்ட காயம் அவரை மல்யுத்தத்தில் இருந்து தள்ளிப் போக செய்தது. காயம் சரியானதும் மீண்டும் களத்திற்கு வந்தவர் 2018 அண்டர் 23 உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் வெள்ளி வென்று மாஸ் காட்டினார்.
ஒலிம்பிக்கில் விளையாட தகுதி!
2019-இல் நடைபெற்ற உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் முதல் முறையாக பங்கேற்றார் ரவி. 57 கிலோ எடைப் பிரிவில் வெண்கலம் வென்று 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்பதற்கான தகுதியை பெற்றார். அதன் மூலம் இந்திய விளையாட்டுத் துறை அமைச்சகத்தின் Target Olympic Podium திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டு, சிறப்பு பயிற்சி எடுத்துக் கொண்டார்.
அதன் பிறகு 2020 மற்றும் 2021 ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற கையோடு ஒலிம்பிக்கில் களம் கண்டுள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக்!
முதல் சுற்றில் கொலம்பிய வீரர் Óscar Tigreros (13-2), காலிறுதியில் பல்கேரியா வீரர் ஜார்ஜ் வெலன்டினோவை (14-4) வீழ்த்தினார். அரையிறுதியில் கஜகஸ்தான் வீரர் நூர் இஸ்லாம் சனயேவை விக்டரி பை ஃபால் முறையில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் என்ட்ரியாகி உள்ளார். ரஷ்ய நாட்டு வீரர் உகுவே சவூரை எதிர்த்து விளையாடுகிறார்.
நிச்சயம் அவர் இறுதிப் போட்டியில் சக போட்டியாளருக்கு கிடுக்கிப்பிடி வைத்தியம் கொடுத்து ஒரு கலக்கு கலக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்போதைக்கு அவர் ஒலிம்பிக் பதக்கத்தை நெருங்கிவிட்டார். அவர் வெல்லப்போவது ‘தங்கமா அல்லது வெள்ளியா?’ என்பது இறுதிப் போட்டியில் தெரிந்துவிடும்.