ஸ்டார்ட் அப் இளவரசிகள்-19: கிராபிக் டிசைனில் முன்னோடி- 'கேன்வா’வின் வெற்றிக்கதை

ஸ்டார்ட் அப் இளவரசிகள்-19: கிராபிக் டிசைனில் முன்னோடி- 'கேன்வா’வின் வெற்றிக்கதை
ஸ்டார்ட் அப் இளவரசிகள்-19: கிராபிக் டிசைனில் முன்னோடி- 'கேன்வா’வின் வெற்றிக்கதை

ஆரம்ப காலத்தில் நூறு முறைக்கு மேல் நிராகரிப்புகளை எதிர்கொண்டார் மெலினி. ஆனால், நிராகரிப்புகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு வேகமாக முன்னேறி வந்திருப்பதே மெலினி வாழ்க்கை கதையின் சிறப்பம்சமாக இருக்கிறது.

எந்த விதத்தில் பார்த்தாலும் ’கேன்வா’ (Canva) வெற்றிக்கதை வியக்க வைப்பதாகவும், வழக்கமான வர்த்தக நடைமுறைகளை மீறியதாகவும் இருக்கிறது. இணைய உலகில் பெரிதாக பேசப்படும் நவீன தொழில்நுட்ப நிறுவனங்கள் பெரும்பாலும் அமெரிக்காவை மையமாக கொண்டிருக்கும். ஃபேஸ்புக், ட்விட்டர், பின்டிரெஸ்ட் எல்லாம் அமெரிக்க நிறுவனங்கள். ஸ்கைப் போன்ற ஐரோப்பாவில் உருவாகிய நிறுவனங்கள் உண்டென்றாலும், டவுன் அண்டர் என சொல்லப்படும் உலகின் கடைக்கோடியில் இருப்பதாக கருதப்படும் ஆஸ்திரேலியாவில் இருந்து உருவான ‘ஸ்டார்ட் அப்’பாக கேன்வா அமைகிறது.

ஆனால் ஆஸ்திரேலிய வெற்றிக்கதை என்பதை மீறி கேன்வா, உலகில் 190க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவலாக பயன்படுத்தப்படும் சேவையாக இருக்கிறது. அது மட்டுமா? மைக்ரோசாப்ட், அடோப் என பெரும் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு எல்லாம் சவால் விடும் சேவையை வழங்கும் நிறுவனமாக கேன்வா விளங்குகிறது. காலப்போக்கில் கேன்வா அறிமுகம் செய்திருக்கும் சேவைகளின் பட்டியலும் வியக்க வைக்கிறது.

எளிய தேவை

இவை எல்லாவற்றையும் விட, இணையத்தில் பயனாளிகள் தவறாமல் அறிந்திருக்கும் முக்கிய சேவைகளில் ஒன்றாகவும் கேன்வா இருக்கிறது. கல்லூரி மாணவராக இருந்தாலும் சரி, தொழில்முறை ஊழியராக இருந்தாலும் சரி, இணையத்தில் வடிவமைப்பு செய்ய வேண்டிய தேவை எனும் போது இயல்பாக நாடும் சேவையாக கேன்வா அமைகிறது. ஏன் நீங்களே கூட, சொந்தமாக ஒரு லோகோவை வடிவமைக்க விரும்பினால் அல்லது இன்ஸ்டாகிராமுக்கான புகைப்படத்தை சரியான அளவில் மாற்றி விரும்பினால் கேன்வாவை பயன்படுத்தியிருக்கலாம். அல்லது டிஜிட்டல் சுவரொட்டியை வடிவமைப்பது பற்றி பேச்சு வரும் போது, கேன்வாவை பயன்படுத்தவும் என பரிந்துரைத்திருக்கலாம்/பரிந்துரைக்கப்பட்டிருக்கலாம்.

அந்த வகையில் பார்த்தால் கேன்வா அதன் நிறுவனர்களின் லட்சியத்தை அடைந்திருப்பதாகவே தோன்றுகிறது. எல்லோரையும் வடிவமைப்பாளராக்கும் எண்ணம்தான் அந்த லட்சியம். ஆம், இணையத்தில் ஒருவர் எதை வடிவமைக்க விரும்பினாலும் சரி, அதற்கு கேன்வா இணையதளத்தை நாடலாம். அதற்கேற்ப வடிவமைப்பு தேவைகள் அனைத்தையும் ஒரே பக்கத்தில் அளிக்கும் சேவையாக கேன்வா விளங்குகிறது.

பயனாளிகள் விருப்பம்

இப்படி ஒரு இணைய சேவையை உருவாக்கி பயனாளிகளுக்கு வழங்க வேண்டும் எனும் எண்ணமே மெலினி பெர்கின்சை (Melanie Perkins ) கேன்வாவை தனது காதலரான இணை நிறுவனருடன் சேர்ந்து உருவாக்க வைத்தது. சொல்லப்போனால், மெலினியின் பதின்பருவ கனவு என்று கேன்வாவை வர்ணிக்கலாம். அந்த கனவு மெலினியை 30 வயதுக்குள் உலகின் செல்வாக்கு மிக்க சி.இ.ஓ எனும் அங்கீகாரத்தை பெற்றுத் தந்துள்ளதோடு 3 பில்லியன் டாலருக்கு மேல் மதிப்புமிக்க நிறுவனமாக கேன்வாவை உருவாக்கியுள்ளது.

எனினும் கேன்வா வெற்றிக்கதை மெலினிக்கும், அவரது இணை நிறுவனருக்கும் அத்தனை எளிதாக சாத்தியமாகிவிடல்லை. கேன்வா பயணத்தில் பல சோதனைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. குறிப்பாக கேன்வார் ஆரம்ப காலத்தில் அதற்கு நிதி திரட்டுவதற்காக மெலினி படாதப்பாடு பட்டிருக்கிறார். இந்த காலகட்டத்தில் நூறு முறைக்கு மேல் நிராகரிப்புகளை எதிர்கொண்டதாக அவர் கூறியிருக்கிறார். ஆனால், நிராகரிப்புகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு வேகமாக முன்னேறி வந்திருப்பதே மெலினி வாழ்க்கை கதையின் சிறப்பம்சமாக இருக்கிறது.

பள்ளி நாட்கள்

மெலினி மேற்கு ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் பிறந்து வளர்ந்தவர். தாய் ஆஸ்திரேலிய பெண்மணி என்றாலும் தந்தை பிலிப்பைன்ஸ்-இலங்கை தொடர்புகளை கொண்ட மலேசிய பொறியாளர். பள்ளி நாட்களில் மெலினிக்கு பனிச்சறுக்கு வீராங்கனையாக வேண்டும் எனும் விருப்பம் இருந்திருக்கிறது. இதற்காக அதிகாலை 4.30 மணிக்கு எழுந்து உடற்பயிற்சி செய்யும் வழக்கம் கொண்டிருந்தார். ஆனால் 14 வயதில், தலையை சுற்றி அணியும் கவசத்தை தயார் செய்து விற்பனை செய்த அனுபவம் அவரது வாழ்க்கை குறிக்கோளையே மாற்றியது. ஒரு வர்த்தகத்தை உருவாக்கி நடத்துவதில் உணர்ந்த மகிழ்ச்சியும், சுதந்திரமும் அவரை தொழில்முனைவின் மீது ஆர்வம் கொள்ள வைத்தது. பள்ளிப் படிப்பை முடித்ததும் மெலினி மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிக்கத் துவங்கினார். தகவல் தொடர்பு, வர்த்தகம் உள்ளிட்ட பாடங்களை எடுத்திருந்தார். மெலினிக்கு கம்ப்யூட்டரிலும், கம்ப்யூட்டரை கொண்டு வரைகலை உருவாக்குவதிலும் ஆர்வம் இருந்தது. இந்த ஆர்வம் அவருக்கு கல்லூரி நாட்களில் வருவாய்க்கான வழியாகவும் அமைந்தது. சக மாணவர்களுக்கு வரைகலை அம்சங்களை கற்றுத் தருவதன் மூலம் அவர் வருவாய் ஈட்டினார்.

அடோப் போட்டோஷாப் போன்ற வரைகலைக்கான மென்பொருள்களை பயன்படுத்துவதில் சக மாணவர்களுக்கு அவரால் வழிகாட்ட முடிந்தாலும், இந்த சாதனங்கள் எல்லாம் சிக்கலாக இருப்பதாக நினைத்தார். போட்டோஷாப் மென்பொருளை கற்றுக்கொள்ளும் மாணவர்கள் அதில் எந்த பட்டன் எங்கிருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளவே ஒரு செமிஸ்டர் தேவைப்படுவது சரியல்ல என்றும் நினைத்தார்.

ஃபேஸ்புக் காலம்

ஏறக்குறைய இந்த காலகட்டத்தில் ஃபேஸ்புக் அறிமுகமாகி பிரபலமாகி இருந்தது. ஃபேஸ்புக்கை பயன்படுத்த விரும்புகிறவர்கள் அந்த சேவையில் உறுப்பினராகி உள்ளே நுழைந்தால் அதன் மற்ற அம்சங்களை பயன்படுத்துவது எளிமையாக இருக்கும் நிலையில், வடிவமைப்பிற்காக பயன்படுத்தப்படும் அடோப் மென்பொருள்களும், மைக்ரோசாப்ட் மென்பொருள்களும் பயனாளிகளுக்கு ஏன் சிக்கலாக இருக்க வேண்டும் என்றெல்லாம் மெலினி யோசித்துக் கொண்டிருந்தார். மேலும் இந்த மென்பொருள்களை கம்ப்யூட்டரில் பயன்படுத்த வேண்டியதும் அவரை யோசிக்க வைத்தது. இவற்றுக்கு எல்லாம் மாறாக, மிக எளிதாக ஆன்லைனில் பயன்படுத்தக்கூடிய, எல்லோருடனும் சேர்ந்து கூட்டு முயற்சியில் ஈடுபடக்கூடிய ஒரு எளிமையான மென்பொருள் இருந்தால் எப்படி இருக்கும் என நினைத்த மெலினி, அந்த மென்பொருளை தானே உருவாக்கவும் தீர்மானித்தார். இது பெரும் கனவாக அவரது மனதில் விரிந்தாலும், அடோப், மைக்ரோசாப்ட் போன்ற பெரிய நிறுவனங்களுடன் போட்டி போடக்கூடிய ஒரு மென்பொருளை உருவாக்கத் தேவையான வர்த்தக, மார்க்கெட்டிங் அனுபவம் இல்லாததையும் உணர்ந்தே இருந்தார்.

தொடர் முயற்சி

அதற்காக மெலினி தனது கனவை கைவிட்டுவிடல்லை. முதலில் சிறிய அளவில் அதை செயல்படுத்தி பார்க்க தீர்மானித்தார். ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்கள், இயர்புக் எனும் ஆண்டு புத்தகத்தை உருவாக்கி சமர்ப்பிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. மெலினிவின் அம்மாவும் ஒரு ஆசிரியர் என்பதால், ஆண்டு புத்தகங்களை உருவாக்குவதில் மணிக்கணக்கான நேரத்தை மாணவர்களும், ஆசிரியர்களும் செலவிடுவதை பார்த்திருக்கிறார். எனவே மாணவர்களுக்கான ஆண்டு புத்தகத்தை உருவாக்க உதவும் சேவையை வழங்குவதற்கான பியூஷன் புக்ஸ் (Fusion Books ) எனும் நிறுவனத்தை துவக்கினார்.

அப்போது மெலினியுடன் படித்துக்கொண்டிருந்த கிளிப் ஆப்ரெக்ட் (Cliff Obrecht,) எனும் சக மாணவருடன் நட்பு இருந்தது. இவருடன் இணைந்துதான் கேன்வா நிறுவனத்தை துவக்கினார். ஆப்ரெக்டுடன், மாணவர்களுக்கான வடிவமைப்பு மென்பொருள் பற்றியும் பேசுவது அவரது வழக்கம். அதன் தொடர்ச்சியாக உண்டான ஆண்டு புத்தக சேவையை ஆப்ரெக்டும் ஆதரிக்கவே இருவரும் இணைந்து பியூஷன் புகஸ் இணையதளத்தை துவக்கினர். மாணவர்கள் தங்களது கட்டுரைகள் போன்றவற்றை இந்த தளம் வாயிலாக உருவாக்கி கொண்டு அவற்றை ஆண்டு புத்தகமாக தொகுக்க முடிந்தது. பின்னர் அந்த புத்தகத்தை அச்சிட்டு அனுப்பி வைத்தனர். அம்மாவின் படுக்கை அறையை அலுவலக அறையாக மாற்றிக்கொண்டு செயல்பட்டனர். இந்த சேவைக்கு மாணவர்கள், ஆசிரியர்கள் தரப்பில் நல்ல வரவேற்பு இருந்தது. வர்த்தக நோக்கிலும் நன்றாக செயல்படவே முதல்கட்ட வெற்றியாக அமைந்தது.

வெற்றியின் முதல் படி

பியூஷன் புக்ஸ் சேவையின் வெற்றி, வடிவமைப்புக்கான எளிமையான மென்பொருளுக்கான தேவை இருப்பதையும் புரிய வைத்தது. இந்த எண்ணம் தந்த உற்சாகத்துடன் எல்லாவற்றையும் எளிமையாக்கி, எல்லோரும் விரும்பிய வடிவமைப்பை உருவாக்கி கொள்ளக்கூடிய மென்பொருள் சேவையை உருவாக்குவதற்கான முயற்சியில் தீவிரமாக இறங்கினார். இத்தகைய மென்பொருளை உருவாக்க மூலதனம் தேவைப்பட்டதால் தங்கள் ஸ்டார்ட்-அப் நிறுவனத்திற்கு நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டார். ஆனால், கதவை தட்டிய இடங்களில் எல்லாம் நிராகரிப்பே பதிலாக வந்தது.

மெலினி குறிப்பிட்டது போன்ற ஆன்லைன் மென்பொருளை உருவாக்குவது சாத்தியம் இல்லை என்றோ அல்லது பெரிய நிறுவனங்களுடன் இப்பிரிவில் போட்டியிட்டு வெற்றி பெற முடியாது என்றோ பதில் வந்தது. 2007 ம் ஆண்டு துவங்கி மூன்றாண்டு காலம் இப்படி முதலீட்டாளர்கள் பின்னே மெலினி அலைந்து கொண்டிருந்தார். நிச்சயம் பெரும்பாலானவர்கள் இத்தகைய தொடர் நிராகரிப்புகளால் மனம் தளர்ந்து முயற்சியை கைவிட்டிருப்பார்கள். மெலினி அவ்வாறு பின் வாங்கிவிடவில்லை. அதற்கு முக்கிய காரணம், எவரும் எளிதாக வடிவமைப்பு செய்யக்கூடிய எளிய ஆன்லைன் சேவையை உருவாக்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தது. அதே நேரத்தில், இந்த எண்ணத்தை முதலீட்டாளர்களுக்கு புரிய வைப்பதில் எங்கோ தவறு செய்கிறோம் என்று அவருக்குத் தோன்றியது.

நிறுவனத்திற்கான வர்த்தக திட்டத்தை அவர் விரிவாகவே எழுதியிருந்தார். அதில் இந்த சேவையின் தொழில்நுட்ப அம்சங்களை விளக்கியி இருந்தாரேத் தவிர, இதற்கான தேவையை தெளிவாக உணர்த்துவதில் கவனம் செலுத்தாமல் இருந்தார். ஒரு கட்டத்தில் அவருக்கே இது புரிந்தது. தான் உருவாக்க விரும்பும் கேன்வா போன்ற சேவை ஏன் தேவை என்பதை உணர்த்த தனிப்பட்ட கதை தேவை என நினைத்தார். அதன் பிறகு, முதலீட்டாளர்களை சந்திக்கும் போதெல்லாம், போட்டோஷாப் போன்ற மென்பொருள்களை பயன்படுத்துவதில் சராசரி பயனாளிகளுக்கு இருக்கும் சிக்கலை சுட்டிக்காட்டி, இதற்கு மாறாக பட்டன்களை கிளிக் செய்து இழுத்து வருவதன் மூலம் வடிவமைப்பை செய்ய முடிந்தால் எப்படி இருக்கும் என கேட்பதை வழக்கமாக்கி கொண்டார்.

அமெரிக்க முதலீடு

இதனிடையே உள்ளூரில் முதலீட்டாளர்களை தேடுவதை விட, அமெரிக்காவில் உள்ள முதலீட்டாளர்களை நாடும் உத்தியும் சரியாக இருக்கும் என நினைத்தார். ஆனால், சிலிக்கான் வேலி முதலீட்டாளர்களுக்கு வேறு விதமான கவலைகள் இருந்தன. ஆஸ்திரேலியாவில் இருந்து உருவாக்கப்படும் நிறுவனத்தில் முதலீடு செய்ய தயங்கினர். இந்த நிலையில், மெலினி தற்செயலாக பில் டாய் (Bill Tai) எனும் அமெரிக்க முதலீட்டாளரை சந்தித்திருந்தார். அலைச்சறுக்கு விளையாட்டில் ஆர்வம் கொண்டிருந்தவர் அதற்காக ஆஸ்திரேலியா வந்திருந்த போது மெலினி அறிமுகம் ஆனார். பில் டாய், அவரை அமெரிக்கா வருமாறு அழைப்பு விடுத்தார். அவர் ஏற்பாடு செய்த சந்திப்புகள் எல்லாம் அலைச்சறுக்கு பிரியர்களுக்கானதாக இருந்ததால் மெலினி தானும் இந்த விளையாட்டை கற்றுக்கொண்டார்.

ஆனால் மெலினி விவரித்த ஐடியா பில் டாய்க்கு பிடித்திருந்தது. அடுத்து வந்த சந்திப்புகளில் தனது தொடர்பில் இருந்தவர்களுக்கு மெலினியை அறிமுகம் செய்து வைத்தார். தொடர் முயற்சியின் பயனாக ஆரம்ப முதலீடு கிடைத்தது. 2012 ம் ஆண்டில் கூகுள் மேப்ஸ் இணை நிறுவனர் லார்ஸ் ராஸ்முசேன் (Lars Rasmussen ) விதை நிதி வழங்கினார். அதே அளவு தொகையை ஆஸ்திரேலிய அரசும் அளித்து ஊக்குவித்தது. அதைக்கொண்டு கேன்வா தளத்தை அறிமுகம் செய்தனர்.

ஆரம்ப வெற்றி

2013-ல், சிட்னியை மையமாக கொண்டு கேன்வா அறிமுகம் ஆனது. துவக்கத்தில் தொழில்நுட்ப இணையதளங்கள் சில கேன்வா சேவை பற்றி எழுதின. மற்றபடி பெரிய வரவேற்பு இருக்கவில்லை. ஆனால் மெல்ல பயனாளிகள் வருகை தந்தனர். கேன்வா அதன் முகப்பு பக்கத்தில் வடிவமைப்புக்கு தேவையான அம்சங்களை எல்லாம் அளித்து, விரும்பிய வடிவமைப்பை எளிதாக உருவாக்கி கொள்ள வழி செய்தது. எந்தவிதமான பயிற்சியும் இல்லாமல், சும்மா மவுசை வைத்துக்கொண்டு கிளிக் செய்து, புகைப்படங்களையும், இன்னும் பிற அம்சங்களையும் அங்கும் இங்கும் இழுத்து பொருத்துவதன் மூலமே போஸ்டர் அல்லது தகவல் வரைபடம் போன்றவற்றை உருவாக்கி கொள்ள முடிந்ததை பயனாளிகள் விரும்பினர்.

கேன்வா ராஜ்ஜியம்

அடுத்த சில மாதங்களில் கேன்வாவுக்கு உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து பயனாளிகள் குவிந்தனர். பயனாளிகளுக்கு இலவச கணக்கு மற்றும் கூடுதல் அசம்ங்களுக்கான கட்டணச் சேவை எனும் வர்த்தக மாதிரியை கேன்வா பின்பற்றியது. மாணவர்கள், ஆசிரியர்கள், தொழில்முறை ஊழியர்கள், வர்த்தக அதிகாரிகள் என பல்வேறு தரப்பினரும் கேன்வாவை பயன்படுத்த துவங்கினார். அதற்கேற்ப கேன்வா புதிய அம்சங்களையும் அறிமுகம் செய்து பயனாளிகளை கவர்ந்தது. இணையத்தில் வரைகலை சார்ந்த வடிவமைப்பு தொடர்பான எண்ணற்ற விஷயங்களை கேன்வாவில் உருவாக்கிக் கொள்வது சாத்தியமானது. திடீரென பார்த்தால் மைக்ரோசாப்ட், அடோப் போன்ற நிறுவனங்களின் மென்பொருள்கள் பலவற்றை பயன்படுத்தி உருவாக்க கூடிய டிஜிட்டல் ஆக்கங்களை எல்லாம் ஒரே இடத்தில் கேன்வாவில் உருவாக்கி கொள்ள முடிந்தது. அண்மையில், வீடியோ திருத்த சேவையையும் கேன்வா அறிமுகம் செய்துள்ளது.

மேலும், கேன்வா அறிமுகமான காலத்தில் சமூக ஊடக அலை வீசிக்கொண்டிருந்ததால் இத்தகைய வரைகலை உருவாக்க சேவையை பலரும் எதிர்பார்த்தனர். ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சேவைகள் பிரபலமான நிலையில், இவற்றில் படங்களையும், வேறு விதமான உள்ளடங்களையும் பகிர்ந்து கொள்வதும் பரவலானது. ஒவ்வொரு சேவைக்கும் ஏற்ற அளவில் புகைப்படங்களை மாற்றுவதும் திருத்துவதும் அவசியமானது. மேலும் ஒவ்வொரு சமூக ஊடகத்திற்கும் ஏற்ற வகையில் உள்ளடக்கத்தை உருவாக்க வேண்டியிருந்தது. இவை எல்லாவற்றையும் கேன்வா சாத்தியமாக்கியதால் பயனாளிகள் விரும்பி நாடும் சேவையாக உருவானது.

மெலினி கேன்வாவை அதன் லட்சியத்திற்கு ஏற்ப தொடர்ந்து மேம்படுத்தி வருகிறார். இதன் காரணமாக யூனிகார்ன் அந்த்ஸ்து பெற்ற நிறுவனமாக கேன்வா அமைந்துள்ளது. கேன்வாவின் வெற்றியை அடுத்து அடோப் போன்ற நிறுவனங்களும் சராசரி நுகர்வோரை மனதில் கொண்டு தங்கள் சேவையை வழங்கத் துவங்கியிருக்கின்றன. இந்த அதிகரிக்கும் போட்டிக்கு ஈடு கொடுக்கும் சவாலை எதிர்கொண்டு கேன்வா செயல்பட்டு வருகிறது. முப்பது வயதுக்குள் மெலினியும் , அவரது இணை நிறுவனரும் கோடீஸ்வர் அந்தஸ்து பெற்றுவிட்டாலும், ஆடம்பர செலவுகளை தவிர்த்து சிக்கனமான வழிகளையே கடைப்பிடித்து வருகின்றனர். அதோடு, தங்கள் செல்வத்தின் கணிசமான பகுதியை நன்கொடையாக அளிப்பதிலும் கவனம் செலுத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com