கனிமொழிக்கான முக்கியத்துவத்தைக் திமுக கொடுத்துக்கொண்டே இருக்கிறது -சுப்புலட்சுமி ஜெகதீசன்
திமுகவில் தலைவருக்கு அடுத்தப்படியாக அதிகாரமிக்கப் பதவிகளான பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிகளுக்கு துரைமுருகனும் டி.ஆர் பாலுவும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். சிறப்புமிக்க இந்தப் பதவிகளில் இதுவரை பெண்கள் நியமிக்கப்பட்டதில்லை என்பதால், விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இதுகுறித்து, திமுகவின் துணைப் பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசனிடம் பேசினோம்,
“தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் ஆகிய மூன்று பதவிகளுமே முக்கிய பதவிகள். இந்த மூன்று பொறுப்பிலுள்ளவர்களும் தினமும் அறிவாலயத்திற்கு வந்து தினசரி நடவடிக்கைகளைப் பார்க்கவேண்டும். இன்றையச் சூழலில், அந்தப் பதவிகளுக்கு துரைமுருகன், டி.ஆர் பாலுவை விட தகுதியான சீனியர்கள் திமுகவில் யாரும் இல்லை. சீனியர்களை விட்டுவிட்டு பெண்களை எடுத்தால் வருத்தம் வரலாம். அதனால்தான், இந்த முடிவு. மேலும், இந்தப் பதவிகளை நான் கேட்டாலும் எனக்கு கொடுப்பார்கள். ஆனால், என்னால் சென்னையில் வந்து செட்டில் ஆக முடியாது. சிரமம் உள்ளது. மற்றபடி, திமுகவில் பெண்களுக்கு முக்கியத்துவம் இல்லை என்பதெல்லாம் பொய்யான தகவல்.
நான் இப்போது துணைப் பொதுச்செயலாளராக இருக்கிறேன். எனக்கு அடுத்தும் ஒரு பெண்தான், இப்பொறுப்புக்கு வரமுடியும். திமுகதான் பெண்களுக்கு சொத்துரிமை கொடுத்தது. அரசுப் பணியிடங்களில் பெண்களுக்கு 30 சதவீதம் இட ஒதுக்கீடும், உள்ளாட்சித் தேர்தல்களில் 33 சதவீத இட ஒதுக்கீடும் கொடுத்ததோடு, பாராளுமன்றத்திலும் 33 சதவீத இட ஒதுக்கீடு வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கிறது. பெண்கள் முன்னேற்றத்திற்காக தலைவர் காலத்திலிருந்து தளபதி வரை பெண்களுக்கான உரிய முக்கியத்துவத்தைக் கொடுத்துக்கொண்டே வருகிறார்கள்.
திருமண உதவித்தொகை, விதவை மறுமண உதவித்தொகை, ஏழை கர்ப்பிணி பெண்களுக்கான உதவித்தொகைகள் போன்றவற்றையெல்லாம் திமுகதான் செய்தது. எங்கள் கட்சியில் எந்தக் கமிட்டி போட்டாலும், அதில் கட்டாயம் பெண்கள் இருக்கவேண்டும் என்று தலைவர் மட்டுமல்ல, தளபதியும் வலியுறுத்தியுள்ளார். கிராமத்தில் இருக்கும் அமைப்பில்கூட துணைச்செயலாளர் பெண் ஒருவர் இருக்கவேண்டும். மாவட்டச் செயலாளர்கள் இரண்டு மூன்று பேர் இருக்கிறார்கள். மாவட்ட துணைச் செயலாளர்களிலும் ஒன்றியத் துணைச்செயலாளர்களிலும் ஒரு பெண் கட்டாயம் இருக்கவேண்டும். இதுபோல் எல்லா அமைப்புகளிலும் பெண் பிரதிநிதித்துவம் பின்பற்றுகின்ற கட்சி திமுகதான்.
கனிமொழி எம்.பிக்கு பொருளாளர் பதவி வழங்கவேண்டும் என்று, அவரது ஆதரவாளர்கள் கடிதம் எழுதியுள்ளார்களே?
ஏற்கனவே, திமுகவை குடும்ப அரசியல் கட்சி என்று பிரச்சனை செய்துகொண்டிருக்கிறார்கள். கனிமொழிக்கு கொடுக்கவேண்டிய முக்கியத்துவத்தைக் கட்சி கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறது. கனிமொழியை நியமித்தால் குடும்ப அரசியல் என்பவர்களுக்கு தீனி போட்ட மாதிரி ஆகிவிடும். இந்தப் பதவிகளை கனிமொழியும் விரும்பவில்லை.
- வினி சர்பனா