”உதயநிதி ஸ்டாலின் விநாயகர் படத்தை வெளியிட்டது மிக மிக சாதாரண செய்தி” - சுப. வீரபாண்டியன்
மகள் கையில் இருக்கும் பிள்ளையார் படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. “எனக்கும் என் மனைவிக்கும் கடவுள் நம்பிக்கை இல்லை. எனது மகள் விருப்பத்திற்காக பதிவிட்டேன்” என்று அவர் விளக்கம் அளித்தபிறகும்கூட “பகுத்தறிவு பேசுபவரின் பக்தியை பாருங்கள்“ என்று உதயநிதியின் ட்விட்டருக்கு எதிரான விமர்சனங்கள் வைரல் ஆகிவருகிறது. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து பேராசிரியர் சுப. வீரபாண்டியனிடம் பேசினோம்,
உதயநிதி ஸ்டாலின் விநாயகர் சிலை படத்தை வெளியிட்டிருந்தது சர்ச்சையாகியிருக்கிறதே?
“திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெளிவாக அறிக்கை வெளியிட்டப் பிறகும் விவாதமாக்குபவர்களின் நோக்கம் என்ன என்பது புரிகிறது. நாட்டில் பேசப்படவேண்டிய ஆயிரம் பிரச்சனைகள் உள்ளன. இன்றைக்கும் கொரோனா தொற்று தொடங்கி, புதியக் கல்விக் கொள்கை என்கின்ற பெயரில் மக்களின் மீது திணிக்கப்படுகின்ற சாதியக் கல்விமுறை, இந்தித் திணிப்பு இவைகளைப் பற்றியெல்லாம் பேசாமல் விளக்கம் சொல்லப்பட்ட ஒன்றை திரும்பத் திரும்ப பாஜகவினர் பேசுகிறார்கள் என்றால், இவர்களுக்கு எப்போதும் மக்களைப் பற்றி கவலை இல்லை. மதத்தைப் பற்றி மட்டும்தான் கவலை என்பது தெளிவாகிறது. மக்கள் மீது அக்கறைக் கொண்டிருக்கிற திமுகவை மக்கள் ஆதரிப்பார்கள். மதத்தின்மீது மட்டும் அக்கறை கொண்டுள்ள பாஜகவினர் மறுபடியும் மறுபடியும் நோட்டாவோடு மட்டும்தான் போட்டியிடுவார்கள்.
தேர்தலுக்காகத்தான் விநாயகர் சிலையை வெளியிட்டதாக விமர்சிக்கப்படுகிறதே?
இது மட்டுமல்ல. தேர்தல் அரசியலுக்காகத்தான் சிறுபான்மையினரை திமுக ஆதரிக்கிறது என்றும் சொல்கிறார்கள். சிறுபான்மையினரை ஆதரித்தால் தேர்தலில் வெற்றிபெற முடியும் என்றால் இவர்களும்கூட ஆதரிக்கலாம். திமுகவிற்கு வாக்களிக்கும் அத்தனைபேரும் சிறுபான்மையினராக இருந்தால் ஒன்னரைக் கோடி வாக்குகளை திமுக பெற்றிருக்குமா? திமுவில் இருக்கும் இந்துக்கள் யாரும் விநாயகர் சதுர்த்தியை ஏன் கொண்டாடவில்லை என்று திமுக தலைமையிடம் கேட்டதில்லை. ஒருநாளும் கோபம் கொண்டதில்லை. அது, திமுகவின் பிரச்சனை. மக்களின் பிரச்சனை. பாஜகவின் பிரச்சனை அல்ல.
இப்படி சொல்லியாவது வெற்றி பெற்றுவிடலாம் என்று நினைத்தார்களேயானால் உண்மையிலேயே அவர்களுக்காக பரிதாபப்படுகிறேன். மத நம்பிக்கை என்பது அவரவர் தனிப்பட்ட வாழ்க்கை முறை சார்ந்தது. திராவிடர் கழகத்தைப்போல திமுக கடவுள் மறுப்புக்கொள்கை இயக்கமல்ல. அங்கு, கடவுள் நம்பிக்கையாளர்கள் பகுத்தறிவாளர்கள் இருவருக்கும் இடமுண்டு. திமுக தலைவரும் இளைஞரணிச் செயலாளரும் அன்றும் இன்றும் கடவுள் நம்பிக்கை அற்றவர்களே. எப்படி கடவுள் நம்பிக்கை உடையவர்களே மிக மிக கூடுதலாக இருந்த இந்து மகாசபை தலைவர் சாவர்க்கர் நம்பிக்கை அற்றவராக இருந்தாரோ அப்படி திமுகவிலும் கடவுள் நம்பிக்கை அற்றவர்களும் உள்ளவர்களும் இருக்கிறார்கள். கடவுள் நம்பிக்கை அற்றவர்கள் குறித்து பேசவேண்டும் என்றால், முதலில் சாவர்க்கரைப் பற்றி பேசுவதை பாஜக நிறுத்த வேண்டும். ஏனென்றால், அவர் ஒரு நாத்திகர் என்பதை பலமுறை வெளிப்படுத்தி இருக்கிறார்.
மக்கள் பிரச்சனையை விட்டுவிட்டு மற்றவற்றை பேசுவது பாஜகவின் வழக்கமாகிவிட்டது. வெற்றுப் பேச்சு, வீண் மிரட்டல்கள் இவற்றால் மக்களை கவர்ந்துவிடமுடியும் என்கின்ற அற்பத்தனமான நம்பிக்கை இவற்றைத் தாண்டி பாஜகவிடம் கைவசம் ஏதுமில்லை என்பதைத்தான் இதுபோன்ற சர்ச்சைகள் மெய்ப்பிக்கின்றன.
உதயநிதி ஸ்டாலின் விநாயகர் படத்தை வெளியிட்டது பெரிய செய்தியே அல்ல. மிக மிக சாதாரணமான செய்தி. அதற்கு, அவர் மிகச்சரியான காரணத்தை சொல்லிவிட்டப் பிறகும் விவாதிப்பது வீண். திமுக என்ன செய்தாலும் அதனை எதிர்க்கவேண்டும் என்பதுதான் பாஜகவின் ஒரே நோக்கம்.
- வினி சர்பனா