ஏழை மாணவர்களின் ”காப்பான்” சூர்யா! ரியல் ஹீரோவின் பிரமிக்க வைக்கும் பக்கங்கள்!

ஏழை மாணவர்களின் ”காப்பான்” சூர்யா! ரியல் ஹீரோவின் பிரமிக்க வைக்கும் பக்கங்கள்!
ஏழை மாணவர்களின் ”காப்பான்” சூர்யா!  ரியல் ஹீரோவின் பிரமிக்க வைக்கும் பக்கங்கள்!

நடிகர் மட்டுமல்ல: தயாரிப்பாளர், சமூக ஆர்வலர், கல்வியாளர் என பன்முகத் தளங்களில் பயணித்துக் கொண்டிருக்கும் நடிகர் சூர்யாவின் 45-வது பிறந்தநாள் இன்று. இதோ அவரின், பிரமிக்க வைக்கும் பக்கங்கள்.  

  • நடிகர் சிவக்குமார் - லஷ்மி தம்பதிகளுக்கு 1975-ஆம் ஆண்டு ஜூலை 23-ஆம் ஆம் தேதி பேரழகனாய் பிறந்தவர்தான் சூர்யா. இவரது தம்பி கார்த்தி. தங்கை பிருந்தா.   
  • பத்மா சேஷாத்ரி பாலபவனிலும், செயிண்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியிலும் பள்ளிப்படிப்பை முடித்து சென்னை லயோலா கல்லூரியில் பி.காம் பட்டம் பெற்றார். நடிகர் விஜய், இயக்குநர் விஷ்ணுவர்தன், யுவன்ஷங்கர் ராஜா, கார்த்திக் ராஜா ஆகியோர் சூர்யாவின் கல்லூரி கால நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
  • 1997 ஆம் ஆண்டு மணிரத்னம் தயாரிப்பில் வசந்த் இயக்கிய ’நேருக்கு நேர்’ படம்தான் சூர்யாவின் முதல் படம். சூர்யாவும் விஜய்யும் இணைந்து நடித்த முதல் படமும்கூட. அதற்கடுத்தடுத்தப் படங்களில் நடித்திருந்தாலும், அவரை கவனிக்க வைத்த படங்களில் ஒன்று விஜய்யுடன் நடித்த “ப்ரண்ட்ஸ்” திரைப்படம். அதற்கடுத்தடுத்து நடிப்பில் வெரைட்டிக் காட்டி தமிழின் முன்னணி நடிகர்கள் பட்டியலில் இடம் பிடித்தார்.  
  • பாலிவுட்டில் பிரபலமான “சிக்ஸ் பேக்” உடலமைப்போடு வாரணம் ஆயிரம் படத்தில் நடித்து தமிழ் திரையுலகில்  ’சிக்ஸ் பேக்’ உடலமைப்பை அறிமுகப்படுத்தியவர் என்ற பெருமையும் சூர்யாவுக்கே உண்டு. அவரைப் பார்த்துதான் விஷால், சிம்பு என அடுத்தடுத்து வைக்கத் தொடங்கினர்.  
  • பொதுவாக முன்னணி ஹீரோக்கள் விளம்பரங்களிலும், கவுரவத் தோற்றத்திலும் நடிக்க மாட்டார்கள். ஆனால், சூர்யா மாறுபட்டவர். கோ, மன்மதன் அம்பு,  அவன் இவன் படங்களில் கவுரவத் தோற்றத்தில் நடித்தார். அதோடு, டி.வி.எஸ் மோட்டார்,  ஏர்செல், சன் பீஸ்ட், சரவணா ஸ்டோர் விளம்பரம் என்று ஏராளமான விளம்பரப் படங்களிலும் நடித்து வருகிறார். முன்னணி நடிகராக இருந்துகொண்டே ஒரு தனியார் தொலைக்காட்சியில் “நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி” நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினார். விளம்பரம், டிவி நிகழ்ச்சி என்று நடிப்பதெல்லாம் தனக்கோ தன் குடும்பத்திற்கோ சொத்து சேர்ப்பதற்காக அல்ல. முழுக்க முழுக்க ஏழைக் குழந்தைகளை படிக்கவைத்து வரும் தனது அகரம் ஃபவுண்டேஷனுக்காகத்தான்.
  • பள்ளிப் படிப்பை பாதியிலேயே விட்டக் குழந்தைகளுக்காகவும், ப்ளஸ் டூவில் அதிக மதிப்பெண் எடுத்து கல்லூரி படிப்பை தொடர முடியாதவர்களுக்காகவும் ஆரம்பிக்கப்பட்ட ‘அகரம் ஃபவுண்டேஷன்’ மூலம் கல்வி உதவித்தொகை, ஹாஸ்டல், உணவு என்று அனைத்தையும் ஏழை மாணவர்களுக்கு இலவசமாக கொடுத்து காத்துவரும் “காப்பான்” அவர்.
  • தமிழின் முன்னணி நடிகையாக இருந்த ஜோதிகாவுடன் உயிரிலே கலந்தது, பூவெல்லாம் கேட்டுப்பார், காக்க காக்க, மாயாவி, சில்லுனு ஒரு காதல் போன்ற படங்களில் நடித்தபோது காதலாகி பெற்றோர் சம்மதத்துடன் 2006 செப்டம்பர் 11 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார். சூர்யா – ஜோதிகா தம்பதிகளுக்கு தியா என்ற மகளும் தேவ் என்ற மகனும் உள்ளனர்.  
  • தனது குழந்தைகள் தியா, தேவ் பெயரில் தொடங்கப்பட்ட 2டி தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பசங்க 2 படத்தில் தொடங்கி பல நல்ல படங்களை தமிழ் சமூகத்திற்கு கொடுத்து வருகிறார். விவசாயத்தின் பெருமைகள் பேசிய கடைக்குட்டி சிங்கம் படத்தினை தயாரித்ததோடு விவசாயிகளின் நலனுக்காக  ஒரு கோடி ரூபாய் நிதியுதவியையும் அளித்து அசத்தியவர். 
  • இவ்வளவுப் பெரிய நடிகராக இருந்தும் தன் பிள்ளைகளின் பெற்றோர் ஆசிரியர் மீட்டிங்களில் தவறாமல் கலந்துகொண்டு பொறுப்பான அப்பாவாக திகழ்பவர். 
  • பொதுவாக திருமணம் ஆகிவிட்டாலே, மனைவியை நடிக்க அனுமதிக்க மாட்டார்கள் ’ஹீரோ’ கணவர்கள். ஆனால், குழந்தைகள் வளர்ந்தபிறகு 36 வயதினிலே, நாச்சியார், காற்றின் மொழி, பொன்மகள் வந்தாள் என மனைவி ஜோதிகாவுக்கு மீண்டும் நடிக்க சுதந்திரமும் சமத்துவமும் கொடுத்து சில்லுன்னு ஒரு காதலை வெளிப்படுத்தியவர்.   
  • பிதாமகன், பேரழகன், வாரணம் ஆயிரம் படத்திற்காக மூன்றுமுறை ஃபிலிம் ஃபேர் விருதும், நந்தா, கஜினி, வாரணம் ஆயிரம் படத்திற்காக மூன்றுமுறை மாநில அரசின் விருதும் சிறந்த நடிகருக்காக பெற்றிருக்கிறார். 
  • தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஆகிவிடும் என்பதால் படப்பிடிப்பு நடக்கும் தேதிகளில் எந்தவொரு நிகழ்ச்சியையும் ஒப்புக்கொள்வதில்லை. 
  • திருமணம் ஆகிவிட்டாலே தனிக்குடித்தனம் செல்லும் மகன்களுக்கு மத்தியில் தனது அம்மா பெயரில் ’லஷ்மி இல்லம்’ என்று பெரிய வீட்டைக் கட்டி அம்மா, அப்பா, தம்பி கார்த்திக் குடும்பம், தனது குடும்பம் என்று கூட்டுக்குடும்பமாக வசித்து ’சூப்பர்யா’ என்று நெகிழ வைத்துள்ளார். அதோடு, தனது அப்பா, அம்மாவை சுற்றுலா அழைத்துச் செல்வதையும் வேலையாக வைத்துக்கொண்டிருக்கிறார். எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் ’இளைஞர்கள் தங்கள் குடும்பத்தைக் கவனியுங்கள். அப்பா அம்மவை பாருங்கள்’ என்று சொல்லிவிட்டுத்தான் இறங்குவார் இந்த ’பிதாமகன்’  
  • பெண்கள் மீதும் சமூகத்தின் மீதும் அக்கறைக் கொண்டவரான சூர்யா, ரோட்டில் ஒரு பெண்னை இளைஞர்கள் சிலர் கலாட்டா செய்வதைப் பார்த்து காரிலிருந்து கீழே இறங்கி ’காக்க காக்க’ சூர்யாவாய் கலாட்டா செய்தவர்களை அடித்துவிட்டு நிஜ வாழ்விலும் ஹீரோ என்பதை நிரூபித்தார். 
  • சமூகத்தின் மீது அக்கறைக் கொண்டவரான சூர்யா தனது ஆரம்பகால படங்களில் புகைப் பிடிப்பதுபோல் நடித்தார். ஆனால், தல, தளபதியே இப்போதுவரை கெத்துக்காட்டி புகைப் பிடிக்கும் காட்சிகளில் நடித்துக்கொண்டிருக்க, சூர்யாவோ சமூக நலனிற்காக புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிக்க மறுத்து இயக்குநர்களுக்கு பகையாளியாகிவிடுகிறார்.
  • அவரது மனைவி ஜோதிகா சமீபத்தில் அரசு மருத்துவமனைகள் குறித்து பேசி சர்ச்சையானபோது, அவரின் மதத்தோடு குறிப்பிட்டு கடுமையாக விமர்சிக்கபட்டார். ”ஆன்மீக பெரியவர்களின் எண்ணங்களை பின்பற்றி வெளிப்படுத்திய அந்தக் கருத்தில் நாங்கள் பின் வாங்கவே இல்லை. மதம் கடந்து மனிதமே முக்கியம் என்பதை எங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லித்தர விரும்புகிறோம்” என்று அறிக்கையிட்ட “அஞ்சான்” அவர். 
  • சமூக பிரச்சனைகளின் போதெல்லாம் சூர்யாவின் குரல் தமிழக மக்களுக்காக ஒலிக்காமல் இருந்ததே இல்லை. குறிப்பாக, இவர் நீட் தேர்வால் பாதிக்கப்படும் ஏழை மாணவர்கள் குறித்து எழுதிய கட்டுரை பலரது கவனத்தையும் ஈர்த்தது. சமீபத்தில்கூட சாத்தான்குளம் பிரச்சனையில் தந்தை, மகன் உயிரிழந்த கொடூர சம்பவத்திற்கு காவல்துறையினரை கண்டித்த ’சிங்கம்’ அவர். 
  • சூர்யா படங்களில் நடப்பதெல்லாம் நிஜத்திலும் நடக்கிறது என்று சமீபத்தில் நெட்டிசன்கள் மீம்ஸ்களால் வைரலாக்கி வருகிறார்கள். அதில், குறிப்பிடத்தக்கது ‘ஏழாம் அறிவு ‘ படத்தில் வந்த தொற்றுநோய் இப்போது கொரோனா வடிவிலும் வந்துவிட்டது என்பதுதான். இன்னும், சிங்கம் படத்தில் தூத்துக்குடி காவலர்களை திட்டும் காட்சியும், காப்பானில் வெட்டுக்கிளி ஆபத்து என ஏகப்பட்ட காட்சிகளைக் குறிப்பிடுகிறார்கள். அப்படியே, 90 ஸ் கிட்ஸ்களுக்கு திருமணம் ஆவதுபோல் நடிக்கச்சொல்லியும் கோரிக்கை வைத்திருக்கிறார்கள் திருமணமாகாத முரட்டு சிங்கிள்ஸ்கள்.
  • தற்போது தேசிய விருது இயக்குநர் சுதா கொங்கராவின் இயக்கத்தில்  வெளிவரவிருக்கும் ’சூரரைப் போற்று’ சூர்யாவின் 38 வது படம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com