பொறியியல் படிப்பில் ஆர்வம் காட்டும் மாணவர்கள்; கைகொடுக்குமா வேலைவாய்ப்புகள்? - ஒரு பார்வை

பொறியியல் படிப்பில் ஆர்வம் காட்டும் மாணவர்கள்; கைகொடுக்குமா வேலைவாய்ப்புகள்? - ஒரு பார்வை
பொறியியல் படிப்பில் ஆர்வம் காட்டும் மாணவர்கள்; கைகொடுக்குமா வேலைவாய்ப்புகள்? - ஒரு பார்வை

பொறியியல் படிப்புகளில் கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இம்முறை அதிக விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. காரணம் என்ன ? பார்ப்போம்.

மாணவர்களின் அதிக விருப்பத்துக்கு உட்பட்ட படிப்புகளுள் ஒன்று, பொறியியல். ஒவ்வொரு மாணவர் சேர்க்கையை பூர்த்தி செய்ய பொறியியல் கல்லுரிகள் சிரமத்தை சந்திப்பதாக கூறப்படும் நிலையில் , இம்முறை அந்த கல்வி நிறுவனங்களுக்கு சற்று ஆறுதல் கிடைத்துள்ளது. காரணம், கடந்த ஆண்டைவிட இம்முறை 10 விழுக்காடு விண்ணப்பங்கள் கூடுதலாக பெறப்பட்டுள்ளது என்பது தான்.

பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த ஜூலை 26ஆம் தேதி தொடங்கியது. இந்நிலையில், இந்த ஆண்டு ஒரு லட்சத்து 74 ஆயிரத்து 171 மாணவர்கள் பொறியியல் படிப்புகளை படிப்பதற்கு விண்ணப்பித்துள்ளதாக தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை குழு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு 1 லட்சத்து 60ஆயிரத்து 834 நபர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், இம்முறை கூடுதலாக 13 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர்.

12 ஆம் வகுப்பில் தேர்ச்சி சதவிகிதம் 100 விழுக்காடாக இருப்பதால், பொறியியல் படிப்புகளை படிக்க அதிகளவிலான மாணவர்கள் ஆர்வம் காட்டுவது, அறிவியல் படிப்புகள் மீதான ஆர்வம் மாணவர்களிடையே குறைந்துள்ளது உள்ளிட்ட பல காரணங்கள் இருப்பதாக கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி தெரிவித்துள்ளார். குறிப்பாக தகவல் தொழில்நுட்பத் துறையில் வீட்டிலேயே இருந்து பணிபுரியும் வசதி இருப்பதால், பெண்கள் ஏராளமானோர் பொறியியல் படிப்புகளை தேர்வு செய்வதாகவும் கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி தெரிவித்தார்.

கொரோனா காலக்கட்டத்தில் பல நிறுவனங்கள் இழப்பீட்டை சந்தித்த நிலையில், வேலையிழப்பு தமிழகத்தில் அதிகரித்துள்ளது. இந்நிலையில், பொறியியல் படிப்புகளில் அதிக அளவிலான மாணவர் சேர்க்கை, எதிர்காலத்தில் வேலைவாய்ப்புகளில் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும் என கல்வியாளர்கள் கூறுகின்றனர். எனவே, வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டிய அவசியமும், கடமையும் அரசுக்கு ஏற்பட்டுள்ளது

தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை, பொறியியல் படிப்பை முடித்துவிட்டு வேலைக்குச் செல்லும் மாணவர்களின் சதவிகிதம் எவ்வளவு?

பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை

இந்தியா - 3,500 பொறியியல் கல்லூரிகள்

தமிழ்நாடு - 502 பொறியியல் கல்லூரிகள்

படிப்பை முடித்தவுடன் வேலைக்கு செல்லும் பொறியியல் மாணவர்களின் விவரம்

ஆண்டு வேலைக்கு சென்ற மாணவரின் சதவிகிதம்

2017 - 25%

2018 - 22%

2019 - 20%

2020 - 31%

இது தொடர்பாக சென்னை தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் தலைவர் ஸ்ரீராம் பேசுகையில், ''டாம் ஐஐடி கம்பெனிகள் கடந்த ஆண்டை விட அதிக அளவில் மாணவர்களை வேலைக்கு எடுக்க ஆர்வமாக இருக்கின்றனர். ஐடிகளில் மத்திய மாநில அரசுகள் அதிக அளவில் முதலீடு செய்துவருகின்றனர். திறன்மிக்க மாணவர்களை தேர்ந்தெடுக்க நிறுவனங்கள் தயாராக இருக்கின்றனர். அது முக்கியமான கல்லூரிகள் என்று மட்டுமில்லை. எந்த கல்லூரியில் படித்தாலும், திறமையிருந்தால் மாணவர்களை பணியில் எடுக்க நிறுவனங்கள் ஆர்வம் காட்டுகின்றன. பொறியியல் படித்தால் வேலைகிடைக்கும் என்ற நம்பிக்கை அனைவரிடத்திலும் இருக்கிறது. ஆனால், அதற்கான தகுதியை நாம் வளர்ந்துகொண்டோமா என்ற கேள்வியும் இருக்கிறது.

பொறியியல் படிக்கும்போது, முழு ஈடுபாட்டுடன் படித்து, திறனை வளர்த்துக்கொள்வது அவசியம். அதன் மூலமாகத்தான் வேலையை பெற முடியும். பொறியியல் படித்தவர்கள் தொழில் முனைவோராக மாறுவது இங்கே மிகவும் சொற்பமாகத்தான் இருக்கிறது. தற்போது, ஆர்டிபிசியல் இன்ஜினியரிங், டேட்டா சயின்ஸ் மிகவும் பிரபலமாக உள்ளது. இந்த வருடம், டேட்டா அனலடிக்ஸ் துறையில் மட்டும் இந்திய அளவில் 1லட்சம் பேரை வேலைக்கு எடுக்க நிறுவனங்கள் ஆர்வமாக உள்ளன. ஆர்டிபிசியல் இன்ஜினியரிங் துறையில் பல வாய்ப்புகள் காத்துகிடக்கின்றன. ரோபாடிக், பயோ மெடிக்கல் துறைகள் கவனம் பெற்று வருகின்றன. இவையெல்லாம் வேலைவாய்ப்புகளுக்கான துறைகள். மாணவர்கள் இந்த துறைகளை தேர்ந்தெடுத்து பயன்பெற வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com