எளியோரின் வலிமை கதைகள் 25: ’கொஞ்சம் கொஞ்சமா பரிசல் ஓட்டற ஆளுங்க குறைஞ்சிக்கிட்டே வராங்க’

எளியோரின் வலிமை கதைகள் 25: ’கொஞ்சம் கொஞ்சமா பரிசல் ஓட்டற ஆளுங்க குறைஞ்சிக்கிட்டே வராங்க’
எளியோரின் வலிமை கதைகள் 25: ’கொஞ்சம் கொஞ்சமா பரிசல் ஓட்டற ஆளுங்க குறைஞ்சிக்கிட்டே வராங்க’

தவித்து கொண்டிருப்பவர்களை காப்பாற்றி கொண்டு விடுபவர்கள் சிறந்த மனிதர்களாக பார்க்கப்படுவார்கள். எப்படி இருந்தாலும் தங்களை காப்பாற்றுகிறவர்கள் சிறந்த மனிதர்களாகவே பார்க்கப்படுகிற நிகழ்வில், பரிசல் ஓட்டிகள் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள். உயிர்காக்கும் உயர்ந்தவர்களாய் இருந்து வரும் பரிசல் ஓட்டிகள் வாழ்வில் மிக முக்கியமானவர்கள் அவர்களின் வாழ்நிலை எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்.

”என் பேரு ராமச்சந்திரன். எனக்கு வயசு 40 ஆகுது. சொந்த ஊரு ஊத்தமலை. எனக்கு கல்யாணம் ஆகி ஒரு பையன், ஒரு பொண்ணு இருக்காங்க. நான் இருபத்தி ரெண்டு வருஷமா ஒகேனக்கல்லில் பரிசல் ஓட்றேன். காலையில 6 மணிக்கு வந்தனா, ராத்திரி ஏழு மணி ஆகிடும் வீட்டு போறதுக்கு. முன்னூறு, நானூறு ரூபாய் எடுத்துட்டு போவேன் ஒரு நாளைக்கு. எல்லா நாளும் அது கிடைக்கும்னு சொல்லமுடியாது. இங்க மட்டும் நாங்க 450 பரிசல் வைச்சிருக்கோம்.

எல்லாருக்கும் வேலை கிடைக்கும்னு சொல்லமுடியாது. இருபது வருஷம் முன்னாடி நான் பரிசல் ஓட்டும்போது, ஒரு மணி நேரம் ஓட்டினா இருபது ரூபா, முப்பது ரூபா குடுப்பாங்க, அதுக்கும் இந்த பக்கம் போ, அந்த பக்கம் போ அப்படின்னு கடுமையாக வேலை வாங்குவாங்க, பரிசல் ஓட்டரதினா சாதாரண வேலை இல்லீங்க. ஒவ்வொரு நாளும் பரிசல் ஓட்டிட்டு வீட்டுக்கு போனா கைகால் அசைந்து போகும்.

இப்ப மூணு வருஷமா கொரோனாவுல பரிசல் ஓட்றவேலையே இல்லாம போயிடுச்சி. குடும்பம் நடத்தவே ரொம்ப கஷ்டமா போயிடுச்சு. மே - ஜூனில் சீசன் முடிஞ்சுதுன்னா அக்டோபர் மாதம்தான் சீசன் தொடங்கும். எங்களுக்கு வேற எந்த வேலையும் தெரியாதுங்க. பரிசல்ல 4 பேர் வருவாங்க, அவங்கள பத்திரமா கூட்டிட்டு போய்ட்டு வர்றதுதாங்க வேலை.

தண்ணி அதிகமா வர்ற நாள்ல தான் வேலை இருக்கும். மத்த நாள்ல வேலை இருக்காதுங்க. சுமார் 500 குடும்பம் இந்த வேலையை நம்பி தான் இருக்குது. இனிமே இந்த வேலைக்கு பெருசா யாரும் வரமாட்டாங்க. நாங்களே எங்க அப்பா தாத்தா காலத்திலிருந்து வழி வழியாக இந்த வேலை செஞ்சிட்டு இருக்கிறோம். எங்க புள்ளைங்க எல்லாம் படிக்க ஆரம்பிச்சுட்டாங்க. கொஞ்சம் பேர் சென்னை, மும்பைன்னு வேலைக்கு போயிட்டாங்க.

கொஞ்சம் கொஞ்சமா இங்க பரிசல் ஓட்டற ஆளுங்க குறைஞ்சிக்கிட்டே வராங்க. அதுக்கு முன்னாடி பரிசல்ல ஒரு பங்க் கடையே வரும். இப்போ அரசாங்கம் சட்ட திட்டங்களை அதிகமாக போட்டு, எல்லாத்தையும் குறைச்சிட்டாங்க. பரிசு பெற்ற எல்லாருக்கும் அரசாங்கம் அடையாள அட்டை கொடுத்திருக்கு. அடையாள அட்டை இல்லாமல் யாரும் பரிசல் ஓட்ட முடியாது. ஏதோ எங்க வீட்டில் யாரோ ஒருத்தவங்க, பொம்பள ஆளுங்க சமைச்சு போடுவேன். வேலைக்கு வருவாங்க. அதில் ஒரு நாளைக்கு நூறு இருநூறு கிடைக்கும். இப்படியே தாங்க காலம் ஓடுது.

பரிசல் பயணம் எல்லோருக்கும் பிடித்தமான ஒன்றாகவே இருந்தாலும்கூட, அதை ஓட்டுகிற மனிதர்களின் வாழ்க்கை மிகவும் வலியோடு தான் இருக்கிறது. அன்றாடம் செய்கிற வேலையாக அது இருந்தாலும், அன்றாடம் அவர்களுக்கு வேலை இருக்கும் என்கிற உத்திரவாதம் யாரும் தர முடியாது. மற்ற வேலைக்கும் செல்லமுடியாமல் இந்த ஒரு வேலையை மட்டுமே நம்பி இருக்கிற அவர்கள் வாழ்க்கை மிகுந்த வலியோடு தான் நகர்கிறது.

- ஜோதி நரசிம்மன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com