வெற்றிக்காக நேர்மையை இழக்கலாமா ஸ்மித்?

வெற்றிக்காக நேர்மையை இழக்கலாமா ஸ்மித்?

வெற்றிக்காக நேர்மையை இழக்கலாமா ஸ்மித்?
Published on

ஆலன் பார்டர், ஸ்டீவ் வாக், ரிக்கி பாண்டிங், மைக்கல் கிளார் ஸ்டீஸ் ஸ்மித் இந்த ஐவர்களின் பெயரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாது பெயர்கள். ஆம், இந்த நால்வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்காக உலகக் கோப்பையை வென்ற சாதனை நாயகர்கள். கடந்த சில நாள்களுக்கு முன்பு எழுந்த பந்தை சேதப்படுத்துதல் விவகாரம் எழாமல் இருந்திருந்தால், ஸ்டீவ் ஸ்மித்தின் பெயர் எப்போதும் கிரிக்கெட் உலகில் மங்காமல் நிலைத்திருந்திருக்கும். ஆனால், ஸ்டீவ் ஸ்மித் மட்டும்தான் இதற்கு குற்றவாளியா என்றால் இல்லை என்றுதான் கூற வேண்டும். ஏனென்றால், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வரலாறு அப்படி? மாற்று அணி வீரர்களை மோசமான வார்த்தைகளில் திட்டுவது (Sledging), போங்கு அடிப்பது, அழுகுணி ஆட்டமாடுவது, கைகலப்பு செய்வது, இனவெறி தாக்குதல் என ஆக்ரோஷம் என்ற பெயரில் பல ஆண்டுகளாக அட்ராசிட்டி செய்தவர்கள் ஆஸ்திரேலிய வீரர்கள்.

கிரிக்கெட் என்பது ஜென்டில்மேன் கேம் என சொல்வார்கள். ஆனால், அந்த ஜென்ட்டில்மேன் கேம் இமேஜை ஒட்டுமொத்தமாக 80 ஆண்டுகளுக்கு முன்பே நொருக்கியவர்கள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள். பவுலர்கள் எப்படி வீசினாலும், திட்டினாலும் மிக அமைதியாகவே தன் பேட்டிங் மூலம் பதில் சொல்பவர் சச்சின். ஆனால், அந்தச் சச்சினையே டென்ஷனாக்கி அசிங்கமாக்க திட்ட வைத்து வாங்கிக்கட்டிக் கொண்டவர் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மெக்ராத். ஒழுக்கமும், நேர்மையும் எப்போதும் ஆஸ்திரேலிய அணிக்கு இருந்ததில்லை என்பதற்கு பல்வேறு சம்பவங்களை சொல்லலாம். அதை பட்டியலிட்டால் பக்ககங்கள் போதாது. 

இதுபோன்ற சம்வங்கள் ரிக்கி பாண்டிங் காலத்தோடு நின்றுவிடும் என பலரும் எண்ணினார்கள். ஆனால், அதன் பின் வந்த மைக்கேல் கிளார்க் தலைமையிலும் சில சம்பவங்கள் நடந்தது. அதன் பின், கேப்டனாக பொறுப்பேற்ற ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான அணியிலும் ஆஸ்திரேலியாவின் விளையாட்டின் நேர்மை கேள்விக்குறியாகி இருக்கிறது. அதுவும், பந்தை சேதப்படுத்துவது என்பது கிரிக்கெட் விளையாட்டில் மிகப்பெரிய கிரைம். அதுவும், அணியின் கேப்டன் ஸ்மித்தும் உடனிருந்தது  தலைமைக்கான அழகா? அதுவும் ஸ்மித் எளிதாக ஆஸ்திரேலிய அணியில் இடம்பெறவில்லை, அவரின் கிரிக்கெட் வாழ்க்கை போராட்டமாகவே இருந்தது. எல்லோரும், போல் ஸ்மித் ஒரு கன்வின்சிங் பேட்ஸ்மேன் கிடையாது, ஆனால் அது ஒரு ஸ்டைலாக தனக்குதானே உருவாக்கி பேட்டிங்கில் அசத்தி வருபவர். 

ஸ்மித் வாழ்க்கை !

அப்பா ஆஸ்திரேலியா, அம்மா இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள். வேதியியலில் பட்டம் பெற்ற அப்பா பீட்டருக்கு, கிரிக்கெட் மீது கொள்ளை ஆர்வம். மகன் ஸ்மித் நான்கைந்து வயதிலேயே பேட் பிடிக்கத் தொடங்க, கிரிக்கெட் அகாடமியில் சேர்த்துவிட்டார். 1989இல் பிறந்த ஸ்மித் 1994/95 சீசனில் எட்டு வயதுக்குட்பட்டோருக்கான கிளப் போட்டிகளில் ஆட ஆரம்பித்துவிட்டார். ஓரளவு பேட்டிங், அபாரமான சுழற்பந்து இப்படித்தான் பதின் வயதுகளில் கிளப்புகளில் கலக்கினார். ஏழாவது, எட்டாவது இடங்களில் இறங்கி பேட்டிங்கில் ஓரளவு ரன்களை அடிக்கக்கூடியவர், விக்கெட்டுகளை வீழ்த்துவார் என்ற  அடையாளங்கள் பிக்பாஷ் லீக் போட்டிகளில் பங்கேற்க உதவியது. அங்கே தன்னை நிரூபித்தார்  ஸ்மித். 2010 டி20 உலகக்கோப்பை வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடந்தது. இதில் சாம்பியன் இங்கிலாந்து. ரன்னர் அப் ,ஆஸ்திரேலியா. இந்தத் தொடரில் ஏழு போட்டிகளில் 11 விக்கெட்டுகளை கைப்பற்றினார்  ஸ்மித். தொடரில் அதிக விக்கெட் எடுத்த இரண்டாவது பவுலர் ஸ்மித்தான்.

பவுலர் டூ பேட்ஸ்மேன்

சர்வதேச கிரி்க்கெட்டில் பவுலராகவே அறிமுகமானவர், நல்ல பேட்ஸ்மேனாக ஆக்கியது இந்திய அணிதான். 2012 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணி, இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. லெக் ஸ்பின் வீசக்கூடியவர் என்பதால், பேக்கப்புக்கு ஆல்ரவுண்டர் கேட்டகிரியில் இவரை அணியில் சேர்த்தது ஆஸ்திரேலியா. ஆனால் ஆடும் லெவனில் ஆரம்பத்தில் வாய்ப்பு கிடைக்கவில்லை. அந்தத் தொடரில் முக்கியமான ஆஸ்திரேலிய வீரர்கள் பலர் சொதப்ப, நான்கு வீரர்களை கழட்டிவிட்டு அணியை மாற்றியமைத்தார் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர். மொஹாலி டெஸ்டில் ஸ்மித் அணியில் இடம்பெற்றார். இது அவருக்கு ஆறாவது டெஸ்ட் போட்டி.  முதல் இன்னிங்ஸில் 251/7 என தத்தளித்த போது, ஸ்டீவன் ஸ்மித்தும், மிச்செல் ஸ்டார்க்கும் ஜோடி சேர்ந்தனர். இருவரும் இந்திய பவுலர்களை புரட்டி எடுத்தனர். 185 பந்தில் 92 ரன் எடுத்து தோனியால் ஸ்டம்பிங் செய்யப்பட்டு அவுட் ஆனார் ஸ்மித். அந்தத் தொடர் ஸ்மித்தை ஒரு நல்ல பேட்ஸ்மேனாக  அடையாளம் காட்ட, அடுத்தடுத்த தொடர்களில் முன்னேறினார். அதன் பின், எல்லாமே ஸ்மித்துக்கு ஜெயம்தான். இப்போதைய கிரிக்கெட் உலகில் 5 முக்கிய பேட்ஸ்மேன்கள் கிளாஸ் வரிசையில் விராத் கோலி, ஸ்டீவ் ஸ்மித், வில்லியம்சன் (நியுசிலாந்து), ஜோ ரூட் (இங்கிலாந்து) மற்றும் ஹஷிம் ஆம்லா (தென்னாப்பிரிக்கா) உள்ளனர்.

கைக்கு வந்த கேப்டன்சி !

2015 ஆஷஸ் தொடரில், ஆஸ்திரேலியா படுதோல்வி கண்டது. இதனையடுத்து நான்காவது டெஸ்ட் போட்டியோடு திடீரென ஓய்வு பெற்றார் கேப்டன் கிளார்க். இதன் காரணமாக ஆஷஸ் தொடரில் கடைசி டெஸ்ட்டில் ஸ்மித் கேப்டனாக பொறுப்பேற்றார். அதன் பின்னர் பேட்டிங்கில் ஏறுமுகம் தான். ஐசிசி  டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த டிவில்லியர்ஸை முதன் முதலில் முந்தி முதலிடம் பிடித்தார் ஸ்மித். 2015 ஆம் ஆண்டு உலகக்கோபையையும் வென்றார் ஸ்மித். இதனால் ஆஸ்திரேலியாவின் அசைக்க முடியாத வீரர் ஆனார் ஸ்மித். அதேவேளையில் ஸ்மித் தலைமையிலான ஆஸி அணி தோல்விகளையும் சந்தித்தது. இலங்கை மண்ணில் படுதோல்வியை முதன்முறையாக சந்தித்தது, பின்பு சொந்த மண்ணில் தென் ஆப்ரிக்காவிடம் தொடரை இழந்தது. எனினும்,  இந்திய மண்ணில் நடந்த 3 டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் வெற்றிப்பெற்ற ஆஸி, அதற்கடுத்து கோலியின் வெற்றி வெறியில் தொடரை இழந்தார் ஸ்மித்.

பேட்டிங் லெஜண்ட்!

டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் சிறப்பாகத்தான் ஆடி வருகிறார்.அவரை உலக கிரிக்கெட் ரசிகர்கள் இப்போதே பேட்டிங் லெஜண்ட் என புகழ்கிறார்கள். இலங்கை, இந்தியா போன்ற சூழல் ஆடுகளங்களோ, இங்கிலாந்து போன்ற ஸ்விங் ஆடுகளங்களையோ, தென் ஆப்ரிக்கா போன்ற பவுன்ஸ்  களங்களோ, வெஸ்ட் இண்டீஸ் போன்ற ஸ்லோ பிட்ச்களோ, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற வேகப்பந்து ஆடுகளங்களோ எதுவாக இருந்தாலும் பின்னிப்பெடல் எடுக்கிறார் ஸ்மித். அவ்வளவு திறமைசாலி. அப்படிப்பட்ட இன்ஸ்பிரேஷன் ஸ்மித். ஆனால் ஸ்மித்தின் ஒரே மைனஸ், ஆடுகளத்தில்  டென்ஷன் ஆவதும். அதாவது தங்களது அணி ஜெயிக்க எந்த எல்லைக்கும் போகத் தயாராக இருக்கும் போர்குணம். அந்தப் போர் குணம்தான் இப்போது பந்தை சேதப்படுத்தி போங் ஆட்டம் ஆடியது. அது அவரை அழுகுணி ஆட்டம் வரை  கூட்டிச் சென்றுள்ளது. வெற்றிக்காக நேர்மையை எப்போதும் இழக்ககக் கூடாது. நேர்மைக்கு ஓய்வுக்கொடுத்ததுதான் ஸ்மித் செய்த மாபெரும் தவறு. 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com