ரஜினிகாந்த் சொல்வதை போல் தமிழ்நாடு சுடுகாடு ஆகிவிடுமா?

ரஜினிகாந்த் சொல்வதை போல் தமிழ்நாடு சுடுகாடு ஆகிவிடுமா?

ரஜினிகாந்த் சொல்வதை போல் தமிழ்நாடு சுடுகாடு ஆகிவிடுமா?
Published on

தூத்துக்குடியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை பார்த்து ஆறுதல் சொல்வதற்காக நடிகர் ரஜினிகாந்த் இன்று அங்கே சென்றார். தான் ஒரு அரசியல்வாதியாக அங்கு செல்லவில்லை. ஒரு நடிகராகவே செல்கிறேன் என்று அவர் குறிப்பிட்டிருந்தார். ஸ்டெர்லைட் ஆலை மூடப்படுவதாக அரசு அறிவித்தபோது அதை வரவேற்று அவர் ட்விட்டரில் வெளியிட்டிருந்த வீடியோவில் “அப்பாவி மக்களின் ரத்தம் குடித்த இந்த மாதிரி போராட்டங்கள் வருங்காலத்தில் தொடரக்கூடாது” என அவர் கருத்து தெரிவித்திருந்தார். அங்கே உயிர் இழப்பு ஏற்பட்டதற்கு போராட்டம்தான் காரணம் என்ற அவரது கருத்து பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியது.

தூத்துக்குடிக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களைப் பார்த்து அவர்களுடைய கருத்துக்களை கேட்கும்பொழுது, அங்கு நடந்த போராட்டம்  குறித்து அவருக்கு ஒரு தெளிவு ஏற்படும் என்றுதான் பலரைப்போல நானும் கருதினேன். ஆனால், அங்கு பாதிக்கப்பட்டவர்களைப் பார்த்ததற்குப் பிறகு அவர் தெரிவித்த கருத்துக்களும் சரி, அங்கிருந்து திரும்பி சென்னை விமான நிலையத்தில் தெரிவித்த கருத்துகளும் சரி, அப்போது அவர் வெளிப்படுத்திய உடல்மொழியும் சரி அவர் தூத்துக்குடிக்குச் சென்றது மக்களுக்கு ஆறுதல் கூறுவதற்காக அல்ல, அவர்கள்மீது பழி சுமத்துவதற்காகத்தான் என்று காட்டியுள்ளன. ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம் குறித்து எதிர்மறையானதொரு தோற்றத்தை உருவாக்குவதற்காகத்தான் அவர் அங்கு போனாரோ என்ற கேள்வி எழுந்திருக்கிறது.  

“போராட்டத்தில் விஷக்கிருமிகள், சமூக விரோதிகள்” ஊருடுவி விட்டதாகவும், அவர்கள்தான் இந்த வன்முறைக்குக் காரணம் என்றும் ரஜினிகாந்த் கூறியிருக்கிறார். அன்றைக்கு நடந்த முற்றுகைப் போராட்டக் காட்சிகள் பெரும்பாலான தொலைக்காட்சி சேனல்களில் நேரலையாக ஒளிபரப்பாயின. அமைதியான முறையில் பேரணியாகச் சென்ற பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், இளைஞர்கள் எல்லோரும் முழக்கங்களை எழுப்பிக் கொண்டு போனார்களே தவிர, எந்தவொரு வன்முறையிலும் ஈடுபடவில்லை. ஒரு கட்டத்தில் திடீரென அவர்கள் மீது காவல்துறையினர் தடியடிப் பிரயோகம் செய்தனர். பெண்களும், முதியவர்களும் கடுமையாகத் தாக்கப்பட்டனர். அந்தத் தடியடியின் காரணமாக சிதறி ஓடியவர்களில் சிலர் தற்காப்புக்காக போலீஸ்காரர்கள் மீது அங்கு கிடந்த கற்களை எடுத்து வீசினார்கள். அதன்பின்னர் பல்வேறு இடங்களிலும் மூர்க்கத்தனமாக அவர்கள் மீது காவல்துறை தாக்குதல் நடத்தியது. இந்தக் காட்சிகள் எல்லாமே தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானதை நாடே பார்த்தது.

போராட்டக்காரர்கள் மீது எப்படி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது, அதில் எப்படியெல்லாம் விதி மீறல்கள் நடந்துள்ளன என்ற காட்சி தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுமைக்குமே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சட்டவிரோதமான அந்தத் துப்பாக்கி சூட்டைக் கண்டித்து ஐ.நா. சபை வரை கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன. தேசிய மனித உரிமை ஆணையம் நேரடியாக விசாரணையில் இறங்கியுள்ளது. 
போராட்டத்தில் கலந்துகொண்டு முழக்கம் எழுப்பியதற்காக ஸ்னோலின் என்ற 17 வயது மாணவி வாயிலேயே துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார். திரேஸ்புரம் என்ற இடத்தில் இளைஞர்களைத் தாக்கிய போலீஸ்காரர்களை கண்டித்ததற்காக மூதாட்டி ஒருவர் தலையிலேயே சுடப்பட்டு அவரது மூளை தெருவில் சிதறடிக்கப்பட்டிருக்கிறது. அண்ணா நகரில் வீட்டுக்குள் சென்று ஒரு இளைஞரை சுட்டுக் கொன்று அவரது சடலத்தை போலீஸார் சாலையில் இழுத்துச்செல்லும் காட்சி தொலைக்காட்சியில் வெளியானது. போராட்டத்தை ஒருங்கிணைத்தவர்கள், வழி நடத்தியவர்கள் யார், யார்? என அடையாளம் காணப்பட்டு, அவர்களெல்லாம் குறி வைத்து சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்பதே பலராலும் சொல்லப்படும் குற்றச்சாட்டு. உண்மை இவ்வாறிருக்க சமூக விரோதிகளும், விஷக்கிருமிகளும்தான் வன்முறைக்குக் காரணம் என்று ரஜினிகாந்த் கூறுவது அப்பட்டமான அவதூறு தவிர வேறல்ல.

தமிழ்நாட்டில் இப்படி போராட்டங்கள் நடந்தால் இங்கே தொழில் தொடங்க யாரும் வரமாட்டார்கள் என்று ரஜினிகாந்த் கூறுகிறார். தமிழக மக்கள் எத்தகைய தொழில்களை எதிர்த்துப் போராடுகிறார்கள் என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும். 2014-15 கணகின்படி தமிழ்நாட்டில் 37455 தொழிற்சாலைகள் உள்ளன. ஸ்டெர்லைட் ஆலையைவிடப் பலமடங்கு பெரிய தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில் இருக்கின்றன. அதைவிட அதிகமாக பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரியும் தொழிற்சாலைகள் இருக்கின்றன. ஆனால், அவற்றை எல்லாம் மூட வேண்டும் என்று சொல்லி மக்கள் போராடவில்லை. இன்னும் சொல்லப்போனால், நோக்கியா தொழிற்சாலை மூடப்பட்டபோதும், ஃபோர்டு தொழிற்சாலை தனது விரிவாக்கத்துக்கு குஜராத்தைத் தேர்வு செய்தபோதும் தொழிலாளர்கள் அதை எதிர்த்துப் போராடினார்கள். ‘தென் ஆசியாவின் டெட்ராய்ட்’ என்று வர்ணிக்கப்பட்டும் அளவுக்கு இங்கே ஆட்டோமொபைல் தொழிற்சாலைகள் திறக்கப்பட்டது இங்கிருந்த சுமுகமான சூழலால்தான். ஆனால், அந்தச் சூழல் கெட்டுப்போனதற்குக் காரணம் தொழிலாளர்களோ அவர்களது போராட்டங்களோ அல்ல, ஆட்சியாளர்களும் அவர்களது ஊழல் பசியும்தான். 

தொழிற்சாலைகளை நான்கு பிரிவுகளாக இந்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வகைப்படுத்தியிருக்கிறது. சிவப்பு, ஆரஞ்சு, பச்சை, வெள்ளை என்று அவற்றை வரிசைப்படுத்தி இருக்கிறார்கள். சுற்றுச்சூழலுக்கு மிகவும் கேடு விளைவிக்கிற தொழிற்சாலைகளை சிவப்பு வகைப்பாட்டுக்குள் சேர்த்திருக்கிறார்கள். தாமிர உருக்காலை, எண்ணெய் சுத்திகரிப்பாலை, அணு உலைகள் முதலான அறுபது வகைப்பட்ட தொழிற்சாலைகள் சிவப்பு வகைக்குள் உள்ளன. அத்தகைய தொழிற்சாலைகளை சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளிலும், மக்கள் அதிகம் வாழும் பகுதிகளிலும் திறக்கக்கூடாது என மத்திய அரசே கூறியிருக்கிறது. அந்தக் கட்டுப்பாடுகளுக்குப் புறம்பாக தமிழ்நாட்டில் அணு உலைகள் திணிக்கப்படுவதால்தான், வேளாண் நிலங்களை அழித்து எண்ணெய் வயல்கள் உருவாக்கப்படும்போதுதான், மக்களின் சுகாதாரத்தைக் கெடுக்கும் தாமிர உருக்காலை அமைக்கப்படும்போதுதான் மக்கள் போராடவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. 

தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் சிவப்பு வகைக்குள் அடக்கப்பட்ட தொழிற்சாலைகள் வேண்டாம் என்றுதான் மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இதே ஸ்டெர்லைட் ஆலையும் அதனால்தான் கோவா, குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் எல்லாம் அனுமதி அளிக்கப்படாமல் விரட்டியடிக்கப்பட்டது. இந்த உணமையை  ரஜினிகாந்த் உணர்ந்ததாகத் தெரியவில்லை.
காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால்தான் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக ரஜினிகாந்த் கூறுகிறார். இதை அப்பட்டமான பொய் என்றுதான் நாம் சொல்ல வேண்டும். போலீஸ்காரர்களால் கொல்லப்பட்டவர்களில் 90 சதவீதம் பேர் அப்பாவிகள் என்று துப்பாக்கிச் சூட்டுக்கு அனுமதி அளித்த தாசில்தார்களில் ஒருவரே ஒப்புதல் வாக்குமூலம் அளித்தது ரிபப்ளிக் தொலைக்காட்சியில் வெளியாகி, மிகப்பெரிய அதிர்ச்சியை உண்டாக்கியது. சமூக விரோதிகள் தான் வன்முறையில் ஈடுபட்டார்கள் என்றால் அவர்கள் மீது அல்லவா காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்க வேண்டும்? ஆனால், பெண்களையும், முதியவர்களையும் எதற்காகப் படுகொலை செய்யவேண்டும்? இதை ரஜினிகாந்த் சிந்தித்துப் பார்க்கவேண்டும். முற்றுகைப் போராட்டம் நடந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு சற்றும் தொடர்பில்லாத திரேஸ்புரம், அண்ணா நகர் ஆகிய இடங்களில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு எதற்காக மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள் என்ற கேள்விக்கு அவர் பதில் சொல்லவேண்டும்.

உளவுத்துறை தோல்வியடைந்து விட்டது. சமூக விரோதிகளை அவர்கள் அடையாளம் காணத் தவறி விட்டார்கள் என்று ரஜினிகாந்த் கூறுகிறார். அதுவும் உண்மையல்ல; மக்கள் அதிக அளவில் திரள்வார்கள் என்பது காவல்துறைக்கு முன்பே தெரிந்திருந்தது. அதனால்தான் ஒரு வாரத்துக்கு முன்பே பல்வேறு வழக்குகளின்கீழ் முப்பதுபேர் வரை கைது செய்யப்பட்டிருந்தார்கள். போராட்ட நாளன்று 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அப்படியிருந்தும் எப்படி துப்பாக்கிச் சூடு நடத்தும் நிலை ஏற்பட்டது என்ற கேள்வி எழலாம். இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு போராட்டத்தை ஒருங்கிணைக்கிறவர்கள், வழி நடத்துகிறவர்களை ஒழித்துக் கட்டிவிட வேண்டும் என்று திட்டமிட்டு காவல்துறை நடந்துகொண்டதோ என்ற சந்தேகம் நமக்கு எழுகிறது. காவல்துறையினர் பயன்படுத்திய துப்பாக்கிகள், துப்பாக்கிச்சூடு நடத்திய காவலர்கள், அவர்கள் கையாண்ட முறைகள் எல்லாமே இந்தத் துப்பாக்கிச் சூடு தற்காப்புக்காக நடத்தப்பட்டது அல்ல, திட்டமிட்டு நடத்தப்பட்டது என்பதைத் தெளிவுபடுத்துகின்றன. வாகனங்கள் திடீரென தீப்பிடித்து எரிந்த காட்சி நமக்கு ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் இறுதியில் நடந்த சம்பவங்களை நினைவுபடுத்துகின்றன. அபோது சீருடை அணிந்த காவலர்களே பொதுமக்களின் வாகனங்களுக்கும், பொருட்களுக்கும் தீ வைத்த காட்சி தொலைக்காட்சிகளில் வெளியானதை நாம் மறந்துவிட  முடியாது.   

தமிழ்நாட்டில் தீவிரவாதிகள் ஊடுருவி விட்டார்கள் என்று அண்மைக்காலமாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டி வருகிறார். விஷக்கிருமிகள், சமூக விரோதிகள் தமிழ்நாட்டில் ஜாஸ்தி ஆகிவிட்டார்கள் என ரஜினிகாந்த் சொல்லியிருப்பது பொன்னார் சொன்னதன் எதிரொலியாகவே இருக்கிறது.

எல்லாவற்றுக்கும் போராடிக் கொண்டிருந்தால் தமிழ்நாடு சுடுகாடாகிவிடும் என்று ரஜினிகாந்த் கூறியிருக்கிறார். தமிழ்நாடு சுடுகாடு ஆகக்கூடிய ஆபத்து இருக்கத்தான் செய்கிறது: மக்களின் போராட்டங்களைப் புரிந்து கொள்ளும் சக்தியில்லாத; காவல்துறையின் கண்மூடித்தனமான வன்முறையை ஆதரிக்கும் மனம் கொண்ட; பாதிக்கப்பட்டவர்கள் மீதே பழி சுமத்தும் ஈவிரக்கமில்லா நெஞ்சம் படைத்த ரஜினிகாந்த் போன்றவர்களின் கையில் அதிகாரம் கிடைத்தால் நிச்சயம் தமிழ்நாடு சுடுகாடாகத்தான் மாறும். அந்த நிலை வராமல் மக்கள் விழிப்போடு இருக்கவேண்டும் என்பதைத்தான் ரஜினிகாந்த்தின் நடவடிக்கை உணர்த்துகிறது.

(குறிப்பு: இக்கட்டுரையில் உள்ள கருத்துக்கள் அனைத்தும் கட்டுரை ஆசிரியரின் சொந்தக் கருத்துக்கள்)   

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com