கொரோனா காலத்தில் மன அழுத்தத்திலிருந்து விடுபட.. - சத்குரு ஜக்கி வாசுதேவுடன் நேர்காணல்!
ஒரு ஆன்மீகவாதியாக மட்டுமல்லாமல் சமூகத்தின்மீது அக்கறை கொண்டவராகவும் இருக்கிறீர்கள். இந்த கொரோனா காலத்தில் மன நெருக்கடியை சமாளிப்பது எப்படி?
ஒரு மனிதனுக்கு உடல் நலம், மன நலம் இரண்டுமே அவசியம். கொரோனாவிற்கு மருத்துவ உலகில் என்ன செய்யவேண்டுமோ அதை செய்துகொண்டுதான் வருகிறார்கள். வாழ்க்கை எப்படி செல்லவேண்டுமோ அந்த வழியில்தான் செல்லும். மன அமைதிக்காகத்தான் யோகா பற்றி இவ்வளவு நாட்களாகக் கூறிவந்தோம். தத்துவங்களை வைத்து வாழமுடியாது. உடல், மன நிலை ஆரோக்யமாக இருந்தால்தான் வாழ்க்கை.
நோய் எதிர்ப்பு சக்தியை வளர்க்கக்கூடிய ஜீன்ஸ் நம் உடலிலேயே இயற்கையாக இருக்கிறது. மகிழ்ச்சி, சந்தோஷம் போன்ற செயல்கள் நடக்கும்போது நமக்குள்ளே ரசாயன மாற்றங்கள் நிகழ்கிறது.
இந்த ரசாயன மாற்றங்களைக் குறித்து மனதை அமைதியாக வைத்துக்கொள்ள ஈஷா பயிற்சிகளை வைத்து 90 நாட்கள் சோதனை நடத்தியிருக்கிறது பல பல்கலைக்கழகங்கள். இதன் முடிவில் BDNF என்று சொல்லக்கூடிய Brain- derived neurotrophic Factor 300 சதவீதம் அதிகரித்துள்ளது.
சூரிய சக்தி யோகா என்ற ஒரு விஷயத்தை அறிமுகப்படுத்த உள்ளீர்கள். இது ஏற்கனவே நீங்கள் கற்றுக்கொடுக்கும் யோகாவைப் போன்றதா?
இது சற்று எளிமையானது. யோகாவில் கவனம் செலுத்தி புரிந்துகொள்ளவேண்டும். ஆனால் சூரிய சக்தி யோகா மிக மிக எளிமையானது. பூமியில் நடக்கும் எல்லா செயல்களுக்கும் அடிப்படை சூரிய சக்தி. நமது உடலில் எந்த அளவுக்கு இந்த சக்தியை எடுத்துக்கொள்கிறோமோ அந்த அளவுக்கு தெம்பு கிடைக்கும். தமிழ்நாட்டை பொறுத்தவரை சூரியசக்தி ஒரு வரப்பிரசாதம். மற்ற நாடுகளைப் போல் 6 மாதங்களுக்கு மேலாக பனி பெய்வதில்லை. எனவே இந்த சூரிய சக்தியை நாம் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கொரோனாவிற்கு அலோபதி, சித்தா என இரண்டு வகையான மருந்துகளைக் கொடுக்கிறார்கள். சித்தாவில் விரைவில் குணமாக வாய்ப்பு இருக்கிறதா?
சித்தாவை பொறுத்தவரை நோய்க்கு எதிர்மறையாக செயல்படுவதில்லை. உடலுடன் சேர்ந்து சக்தி கொடுக்கிறது. அலோபதி மருந்துகளில் நிறைய கெமிக்கல்ஸ் சேர்க்கப்படுவதால் நோயை அடித்துவிரட்டும் தன்மை கொண்டது. அதனால்தான் பல பக்கவிளைவுகளும் கூடவே ஏற்படுகின்றன.
சித்தாவில் நிலவேம்பு கஷாயத்தை மருந்தாகக் கொடுக்கிறோம். உதாரணத்திற்கு தினமும் உணவில் மஞ்சள், முருங்கைக்காய் போன்றவைகளை சேர்த்துக்கொள்கிறோம். அதனால்தான் உலகளவில் இறப்பு விகிதத்தைக் காட்டிலும் தமிழ்நாட்டில் மக்கள்தொகை அதிகமாக இருந்தாலும் இறப்பு விகிதம் குறைவு.
அதிகப்பேர் பாதிக்கப்பட்டாலும் குணமாகும் அளவும் அதிகரித்துக்கொண்டேதான் வருகிறது.
நாம் ஊரடங்கை விட்டு வெளியே வருவது நல்லதா? அல்லது இந்த கட்டுப்பாடுகள் தொடரவேண்டும் என்று நினைக்கிறீர்களா?
ஊரடங்கு தடை உத்தரவு பிறப்பித்து 4 மாதங்கள் ஆகிறது. நம்மில் பலரும் வேலை செய்து பிழைப்பவர்கள்தான். வீட்டிற்குள்ளேயே இருந்தால் வெறுப்புதான் அதிகரிக்கும். என்ன ஆனாலும் வெளியே சென்று பிழைப்பை நடத்திக் கொள்ளலாம் என்றுதான் நினைக்கிறார்கள். இதில் கடைபிடிக்கவேண்டிய ஒன்று சமூக இடைவெளி மட்டும்தான்.
ஒவ்வொரு தனிமனிதனும் பொறுப்புடன் நடந்துகொண்டால் ஊரடங்கை தளர்த்தினாலும் சிரமம் இருக்காது.
தனியார் பள்ளிகளும், தனியார் மருத்துவமனைகளும் வருமானம் இல்லாமல் நடத்துவது சிரமம் என கூறுகிறீர்கள். மக்களும் அதேபோல் பண நெருக்கடியில்தானே இருக்கிறார்கள்?
அரசாங்கம் தனியார் மருத்துவமனைகள் முழுவதையும் கொரோனாவிற்காக எடுத்துக்கொள்ளாமல் அவர்களுடைய வருமானத்திற்கும் வழிவகுக்க வேண்டும். அங்கு பணி செய்யும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு சம்பளம் கொடுக்கும் அளவிற்காவது வருமானம் அவர்களுக்குத் தேவைப்படுகிறது. போலீஸ், மருத்துவர்களின் சேவை கட்டாயம் அவசியம். எனவே மற்ற செலவுகளை அரசாங்கம் குறைத்துக்கொண்டு இதுபோன்ற அத்தியாவசியத் தேவைகளுக்கு செலவிட வேண்டும்.
இந்த கொரோனா சமூக பரவலை அடுத்து உலகளவில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி எப்படி இருக்கும் என நினைக்கிறீர்கள்?
உலகளவில் வளர வேண்டுமென்றால் மற்ற நாடுகளுடன் பொருளாதார உறவை மேம்படுத்துவது அவசியம். அதற்காக நம்முடைய தனித்துவத்தை விடவேண்டும் என்று அவசியமில்லை. நம்முடைய சக்தியுடன் சேர்ந்து பிற நாடுகளின் ஒத்துழைப்பையும் பெறுவது அவசியம். அதுமட்டுமில்லாமல் இந்த கொரோனா பரவல் எப்போது முடியும் என்று யாருக்கும் தெரியாது. யாராலும் கணிக்கமுடியவில்லை. எனவே எதிர்காலத்தைக் குறித்து பெரிய பெரிய திட்டங்களை வகுக்காமல் இருப்பதே இப்போதைக்கு நல்லது.
நமது நாட்டைப் பொறுத்தவரை 60% விவசாயம்தான். இந்த கொரோனாவால் சொந்த ஊருக்கு சென்றவர்களில் குறைந்தது 5% பேராவது விவசாயத்தில் இறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விவசாயத்திலும் முன்னேற்றம் காணப்படும். இதற்காக மத்திய அரசும் 1 லட்சத்து 20 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளது. நமது நாட்டில்தான் 2 மாதமும் விவசாயம் செய்யமுடியும். இப்படி செய்தால் உலகத்திற்கே நம்மால் உணவு உற்பத்தி செய்யமுடியும்.
8லிருந்து 10 சதவீதம் பேர் டெக்னாலஜி உலகில் உள்ளனர். இன்னும் 10 சதவீதம் பேரை இதில் சேர்த்துவிட்டால் நம் நாட்டின் பிரச்னையே தீர்ந்துவிடும்.

