தொகுதி மறுவரையறை மசோதா | மாநிலங்களுக்கு இப்போது 3 வகையான சிக்கல்!
நாடு முழுவதும் தொகுதி மறுவரையறை விவகாரம் மீண்டும் சூடுபிடித்துள்ளது. நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மத்திய பாஜக அரசு மீண்டும் தொகுதி மறுவரையறை மசோதாவை கொண்டுவரும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மசோதா தாக்கல் செய்யப்படாமலேயே நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிவுக்கு வந்தது. இருப்பினும் எப்போது வேண்டுமானாலும் சிறப்பு கூட்டத்தொடர் நடத்தி இந்த மசோதாவை மத்திய அரசு மீண்டும் கொண்டுவர வாய்ப்பு இருப்பதாகவே கருதப்படுகிறது. ஏனெனில் இந்தாண்டு இறுதிக்குள் தொகுதி மறுவரையறை தொடர்பாக இறுதி முடிவு எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது மத்திய பாஜக அரசு.
தொகுதி மறுவரையறை:
அரசியல் சாசனத்தின் பிரிவு 81-ன் அடிப்படையில் ஒரு நாடாளுமன்ற தொகுதியில் 6.5 லட்சம் முதல் 8.5 லட்சம் வரை வாக்காளர்கள் இருக்கவேண்டும். (குறைவான மக்கள் தொகை கொண்ட மாநிலங்கள் விதிவிலக்கு). ஒரு எம்.பியால் அப்போதுதான் திறனுடன் தனது தொகுதியை நிர்வகிக்க இயலும். ஆனால் தொடர்ந்து அதிகரித்த மக்கள்தொகை காரணமாக இந்த எண்ணிக்கை ஒவ்வொரு தொகுதியிலும் அதிகரித்து வந்தது. தற்போதைய நிலையில் தமிழ்நாட்டில் ஒரு மக்களவை தொகுதியில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். அதேநேரம் வடமாநிலங்களில் இந்த எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியிருக்கிறது. இதனால் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரால் தனது எல்லைக்குட்பட்ட தொகுதியை முழுமையாக கவனித்துக்கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்த சிக்கலை தீர்க்கவும் இந்திய அரசியலமைப்பு வகைசெய்கிறது. அதன்படி, சுதந்திர இந்தியாவில் ஒவ்வொரு மக்கள்தொகை கணக்கெடுப்புக்குப் பிறகும் நாடாளுமன்றத்திலும் சட்டப்பேரவைகளிலும் மக்கள்தொகைக்கு ஏற்ப எண்ணிக்கையை நிர்ணயிப்பதற்கு அரசியல் சாசனம் சட்டப்பிரிவுகள் 82 மற்றும் 170 அனுமதிக்கிறது. இந்த தொகுதி மறுவரையறை நடைமுறை 1951, 1961, 1971 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்கள்தொகை கணக்கெடுப்புகளுக்குப் பிறகு நடைபெற்றது.
மறுவரையறை நிறுத்தம்:
1960 மற்றும் 1970களில் இந்தியாவில் வேகமாக வளர்ந்த மக்கள்தொகை எண்ணிக்கை மற்றும் அந்த காலகட்டத்தில் நீடித்த கடுமையான பஞ்சம் காரணமாக, இந்திய அரசு குடும்பக் கட்டுப்பாடுத் திட்டத்தை கொண்டுவர திட்டமிட்டது. இதற்கு பல்வேறு விழிப்புணர்வுகள் மேற்கொள்ளப்பட்டன, கட்டாய கருத்தடை உட்பட பல சர்ச்சைக்குரிய திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன. மத்திய அரசின் இந்த தீவிர விழிப்புணர்வை தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்கள் தீவிரமாக கடைப்பிடித்து மக்கள்தொகை எண்ணிக்கையை கட்டுப்படுத்தியது. அதேநேரம் உத்தரப் பிரதேசம், பிகார் போன்ற வடமாநிலங்கள் இதை கடைபிடிக்க தவறியதால் அந்த மாநிலங்களில் மக்கள்தொகை வேகமாக வளர்ந்தது.
இதனால் மக்கள்தொகையின் அடிப்படையில் தொகுதி மறுவரையறையை மேற்கொண்டால் அது வடமாநிலங்களுக்கு அதிக எண்ணிக்கையும் தென் மாநிலங்களுக்கு குறைந்த எண்ணிக்கையிலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. இதனால் நாடாளுமன்றத்தில் தென் மாநிலங்களின் அதிகாரமும் குறைக்கப்படலாம். மத்திய அரசின் திட்டங்களை முறையாக கடைபிடித்த தென் மாநிலங்களுக்கு இது அநீதி இழைப்பது போன்றதாகிவிடும் என்று தென் மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அடுத்த 25 ஆண்டுகளுக்கு தொகுதி மறுவரையறையை மேற்கொள்வதை நிறுத்திவைப்பதாக அறிவித்தார்.
இடைப்பட்ட காலத்தில் வடமாநிலங்களில் மக்கள்தொகை எண்ணிக்கையை கட்டுப்படுத்தி எல்லா மாநிலங்களுக்கும் உரிய மதிப்பீட்டின் அடிப்படையில் தொகுதி மறுவரையறையை மேற்கொள்ளலாம் என்றும் அப்போது முடிவெடுக்கப்பட்டது.
நீடிக்கும் சிக்கல்:
25 ஆண்டுகளுக்குப் பிறகு 2000ஆம் ஆண்டு மீண்டும் தொகுதி மறுவரையறை தொடர்பான விவாதம் எழுப்பப்பட்டபோது அப்போதும் இதே சிக்கல் ஏற்பட்டதால் அடுத்த 25 ஆண்டுகளுக்கு தொகுதி மறுவரையறை செய்வதை மீண்டும் நிறுத்தி வைப்பதாக அப்போதைய பிரதமர் வாஜ்பாய் அறிவித்தார். இதற்கிடையே, கடந்த 2009ஆம் ஆண்டு ஒட்டுமொத்த எண்ணிக்கையில் மாற்றங்களைக் கொண்டுவராமல் தொகுதிகளின் எல்லைகள் மட்டும் மாற்றியமைக்கப்பட்டன. இதனடிப்படையில் மக்கள் இடமாற்றம் மற்றும் நகரங்களின் வளர்ச்சியின் அடிப்படையில் மாநிலங்களுக்குள்ளேயே கிராமங்கள் மற்றும் நகரங்களில் உள்ள தொகுதிகளின் எண்ணிக்கைகள் மாற்றியமைக்கப்பட்டன. மேலும் ஒட்டுமொத்தமாக SC தொகுதிகளின் எண்ணிக்கை 79 இல் இருந்து 84 ஆகவும் ST தொகுதிகளின் எண்ணிக்கை 41இல் இருந்து 47 ஆகவும் உயர்த்தப்பட்டது.
இதற்கிடையே தொகுதி மறுவரையறை செய்ய நிறுத்தி வைக்கப்பட்ட 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து இப்போது மீண்டும் அது தொடர்பான விவாதங்களும் முன்னெடுப்பகளும் தொடங்கியுள்ளன. ஒருவேளை இந்த ஆண்டு அதை செயல்படுத்த நினைத்தால், இந்திய அரசமைப்பின்படி கடைசியாக எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கீட்டின் அடிப்படையில் செய்யப்பட வேண்டும். ஆனால் 2020 - 2021 காலகட்டத்தில் கொரோனா பெருந்தொற்று காரணமாக மக்கள்தொகை கணக்கெடுக்கும் பணி நிறுத்திவைக்கப்பட்டது. இந்தப் பணிகள் இப்போதுதான் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. 2027 - 2029ஆம் ஆண்டுக்குள் இதற்கான பணிகள் அனைத்தும் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்போதைய சூழலில் கடைசியாக 2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது. அதன்படி பார்த்தால், பல மாநிலங்களில் மக்கள்தொகை ஒரேமாதிரியான வளர்ச்சியைச் சந்திக்கவில்லை. 1971-ஆம் ஆண்டுக்கும் 2011-ஆம் ஆண்டுக்கும் இடையிலான காலகட்டத்தில் இந்தியாவில் மக்கள்தொகை வளர்ச்சி ஒவ்வொரு மாநிலத்திலும் வேறுபட்டது. உதாரணமாக, உத்தரப் பிரதேசத்தில் மக்கள்தொகை 138%, ராஜஸ்தானில் 166% அளவுக்கு அதிகரித்தது. ஆனால், தமிழ்நாட்டில் 75%, கேரளத்தில் 56% மட்டுமே மக்கள்தொகை அதிகரித்துள்ளதாக தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
இதனடிப்படையில் பார்த்தால் 2011 அல்லது தற்போது எடுக்கப்படும் மக்கள்தொகையின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டாலும் மீண்டும் வடமாநிலங்களுக்கு அதிக எண்ணிக்கையும் தென் மாநிலங்களுக்கு குறைவான எண்ணிக்கையும் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. அப்படி நடைபெறும் பட்சத்தில் நாடாளுமன்றத்தில் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறைக்கப்படும். இதனால் தென் மாநிலங்களின் ஒப்புதல் இன்றியே எந்த மசோதாவும் நிறைவேற்ற முடியும். குறிப்பிட்ட சில இந்தி பேசும் மாநிலங்களை மட்டுமே குறிவைத்து வெற்றி பெற்றாலே ஆட்சியமைக்கும் சூழல் உருவாகும், இதனால் தென் மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டு வளர்ச்சி திட்டங்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்படும். இதுபோன்ற காரணங்களால் தென் மாநில அரசியல் கட்சிகள் தொகுதி மறுவரையறை செய்வதை கடுமையாக எதிர்த்து வந்தன.
மேலும் தற்போது மத்தியில் இருக்கும் பாஜக அரசு தொகுதிகளின் எல்லைகளை வரையறுக்கும்போது தங்களுக்கு சாதகமான வாக்காளர்கள் அதிகம் இருப்பது போலவும் எதிர் தரப்பினரை குறிப்பிட்ட தொகுதிக்குள் நிறுத்துவது போலவும் எல்லைகளை வரையறை செய்யலாம் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர்.
தோல்வியில் முடிந்த மசோதா:
இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் மத்திய பாஜக அரசு திடீரென சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடத்துவதாக அறிவித்தது. இந்த கூட்டத் தொடரில் பெண்களுக்கான இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையரை மசோதாவை அறிமுகப்படுத்தியது பாஜக அரசு. இதற்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தன.
எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை அடுத்து நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தென் மாநிலங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் தென் மாநிலங்களின் விகிதாசாரம் அப்படியே இருக்கும் வகையில் தொகுதி மறுவரையறை செய்யப்படும் என்றும் வாய்மொழி உத்திரவாதம் வழங்கினார். இதற்காக எல்லா மாநிலங்களுக்கும் ஒட்டுமொத்தமாக 50% நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்த திட்டம் இருப்பதாகவும் கூறினார்.
ஒருவேளை, அப்படிச் செய்தால் ஒட்டுமொத்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 816 ஆக உயர்த்தப்படும். இதற்காக தமிழகத்தில் உள்ள நாடாளுமன்ற இடங்களின் எண்ணிக்கை 39இல் இருந்து 59 ஆக உயர்த்தப்பட்டு தமிழகத்தின் பிரதிநிதித்துவம் 7.18% இல் இருந்து 7.23% ஆக அதிகரிக்கப்படும். மேலும் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, தெலங்கானா ஆகிய தென் மாநிலங்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 129 இல் இருந்து 195 ஆக அதிகரிக்கப்படும் என்றும் கூறினார். இதன்மூலம் நாடாளுமன்றத்தில் தற்போது இருக்கும் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவ விகிதாசாரம் 23.76% இல் இருந்து 23.90 ஆக அதிகரிக்கும் என்றும் வாக்குறுதி வழங்கினார்.
மறுபக்கம், இதே நடைமுறை வடமாநிலங்களில் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தும். உதாரணமாக உத்தரப் பிரதேசம் மற்றும் பிகார் 2 மாநிலங்களையும் சேர்த்து தற்போது இருக்கும் 120 இடங்கள் 180 இடங்களாக அதிகரிக்கப்படும். அதேநேரம், அந்த மாநிலங்களின் விகிதாசாரம் 22.10% லிருந்து 22.06% ஆக குறையும். மேலும், இந்தி பெல்ட்டில் உள்ள 4 முக்கிய மாநிலங்களின் எண்ணிக்கை 174 இல் இருந்து 262 ஆக உயரும். விகிதாச்சார அடிப்படையில் பார்த்தால் 32.04 இல் இருந்து 32.11 என்கிற அளவில் தொடரும்.
விகிதாசாரத்தின் அடிப்படையில் பார்க்கும்போது இந்த நடைமுறை சரியானதாகவே தோன்றும். இருப்பினும், அரசியல் கணக்குகளில் பார்க்கும்போது மீண்டும் தென் மாநிலங்கள் பாதிப்பிற்குள்ளானதாகவே கருதப்படுகிறது. உதாரணமாக, தற்போது நாடாளுமன்றத்தில் ஒட்டுமொத்தமாக இருக்கும் 543 என்கிற எண்ணிக்கையில் பெரும்பான்மை பெற 272 இடங்கள் தேவை. இப்போது 5 தென் மாநிலங்களில் மொத்தம் 129 இடங்கள் உள்ளன. பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களைப் பெறுவதற்கான இடைவெளி 143 இடங்கள் மட்டுமே.
அதேநேரம் அமித் ஷா கூறிய கணக்குகளின் அடிப்படையில் பார்த்தால் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 816 ஆக உயர்த்தப்பட்டால் பெரும்பான்மை பெற 409 இடங்கள் தேவைப்படும். அந்தக் கணக்கீட்டில் தென் மாநிலங்களுக்கு 195 இடங்கள் கிடைத்தால் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களைப் பெறுவதற்கான இடைவெளி 214 ஆக உயரும். இந்த இடைவெளி இப்போது இருப்பதைவிட கிட்டத்தட்ட 80 இடங்கள் அளவுக்கு அதிகரிப்பது அரசியல் அதிகாரத்தில் தென் மாநிலங்களைப் பின்னுக்கு தள்ளவே அதிக வாய்ப்பிருப்பதாக கருதப்படுகிறது.
இருப்பினும், இந்த வாக்குறுதிகள் எதுவும் மத்திய அரசு முன்மொழிந்த மசோதாவில் இடம்பெறவில்லை , குறிப்பிட்ட அந்த மசோதாவில் சமீபத்திய மக்கள்தொகையில் அடிப்படையில் நிறைவேற்றப்படும் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தது. இதைச் சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சிகள் மசோதாவில் அதிகாரபூர்வமாக இடம்பெறாமல் வெறும் வாய்மொழி வாக்குறுதிகளை மட்டும் நம்ப முடியாது என்று திட்டவட்டமாக கூறிவிட்டனர். இதனால் மத்திய அரசு கொண்டுவந்த மசோதா தோல்வியில் முடிவடைந்தது.
அன்று நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த 528 உறுப்பினர்களில் மசோதா நிறைவேற 352 உறுப்பினர்கள் அதாவது 66.7% உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்தால் மட்டுமே மசோதாவை வெற்றிகரமாக நிறைவேற்றி இருக்க முடியும். ஆனால் மசோதாவுக்கு ஆதரவாக 298 பேரும் எதிராக 230 பேரும் வாக்களித்தனர். இதனால் பாஜக அரசுக்கு 56.4% உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமே கிடைத்தது. 10% உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்காமல் மசோதா மக்களைவியில் தோல்வியை சந்தித்தது.
இதற்கிடையே இந்திய அரசமைப்பு 82 (2)(a) இன் படி, மக்கள் தொகையின் அடிப்படையில் மட்டுமே தொகுதி மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என்றும் Unique increase என அழைக்கப்படும் அனைவருக்கும் பொதுவாக ஒரே எண்ணிக்கையிலான உயர்வு என்பது முடியாது என்றும் கூறப்படுகிறது. இது மத்திய அமைச்சர் அமித் ஷாவின் அனைத்து மாநிலங்களுக்கும் 50% உயர்த்தப்படும் என்கிற வாய்மொழி உத்தரவின் மீதான சந்தேகத்தை மேலும் அதிகரித்தது. ஏனெனில், தொகுதி மறுவரையறை என்பது அதற்காக அமைக்கப்படும் குழுவால் மட்டுமே மேற்கொள்ளப்படும். இந்த குழு எந்த அமைப்பின் உத்தரவுக்கும் கட்டுப்படாத தன்னாட்சி கொண்ட அமைப்பாக செயல்படும். அப்படியெனில் தொகுதி மறுவரையறை குழு எப்படி முடிவு எடுக்கும் என்பதை மசோதாவில் பூர்வமாக பதிவு செய்ய வேண்டும் என்பதே எதிர்க்கட்சிகளின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.
மாற்று யோசனை:
மக்கள்தொகை என்கிற அடிப்படையில் மட்டுமே தொகுதி மறுவரையறை செய்யப்படும் என்கிற நடைமுறையால்தான் சிக்கல் ஏற்படுகிறது இதனால் இதற்கான வரைமுறையை பல்வேறு வழிகளில் மாற்றியமைக்கலாம் என்று பல தரப்பினரும் கூறி வருகின்றனர். உதாரணமாக ஐரோப்பிய நாடுகளில் இருப்பது போல அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்களுக்கு அதிக எண்ணிக்கையும் குறைந்த மக்கள்தொகை கொண்ட மாநிலங்களுக்கு அதிக பிரதிநிதித்துவமும் கொடுக்கலாம் என்கிறது ஒரு தரப்பு. அல்லது மத்திய நிதிக்குழு செயல்படுவது போல பல்வேறு காரணிகளை ஆராய்ந்து பாதிக்கப்படும் மாநிலங்களுக்கு அதிக அளவிலான ஒதுக்கீடுகள் என்கிற கணக்கீடுகளின் அடிப்படையில் மாற்றங்களை மேற்கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது.
மக்கள்தொகை:
மக்கள்தொகை குறைவு காரணமாக ஒருபக்கம் அரசியல் அதிகாரம் தொடர்பான விவாதங்கள் நடைபெற்றால் மறுபக்கம் பொருளாதாரம் சார்ந்த பிரச்சினைகள் அதிகரித்து வருகின்றன. சில மாதங்களுக்கு முன்பு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் உள்ளவர்கள் மட்டுமே உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட அனுமதி என்ற சட்டத்தைக் கொண்டு வரத் திட்டமிடுவதாக கூறியிருந்தார். இவருடைய கவலையில் அரசியல் அதிகாரம் தவிர்த்து வேறுசில பிரச்னைகளும் அடங்கியிருக்கிறது.
நாட்டின் மக்கள்தொகை தற்போதைய நிலையில் தொடர வேண்டுமானால் கருவுறுதல் விகிதம் 2.1% அளவுக்கு இருக்க வேண்டும். அதாவது, ஒரு பெண் தனது ஆயுட்காலத்தில் சராசரியாக 2.1 என்கிற அளவில் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும். இந்த விகிதம் கடந்த 2000 ஆம் ஆண்டு 3.3 என்கிற அளவில் இருந்தது இப்போது 1.9 என்கிற அளவாக குறைந்திருக்கிறது. இது கொள்கை வகுப்பாளர்கள் எதிர்பார்த்ததைவிட வேகமாக குறைவதாக கூறப்படுகிறது.
குறிப்பாக, 1992 காலகட்டத்தில் உத்தரப் பிரதேசம், பிகார், ஹரியானா போன்ற மாநிலங்களில் 4% அல்லது அதற்கு மேல் இருந்த கருவுறுதல் விகிதம் 2019-2021 காலகட்டத்தில் 2% ஆக குறைந்திருக்கிறது . பிகார் மட்டும் 3% என்கிற அளவில் உள்ளது. தமிழ்நாட்டிலும் இந்த அளவு 2.5% இல் இருந்து 1.8 ஆக குறைந்திருக்கிறது.
தற்போதைய சூழலில் குழந்தைகளை வளர்ப்பதற்கான செலவுகள் அதிகரித்திருப்பதுடன், மக்களிடையே ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு மற்றும் கருத்தடை சாதனங்களுக்கான அணுகல் மேம்பட்டிருப்பதும் கருவுறுதல் விகிதம் குறைவதற்குக் காரணமான முக்கிய அம்சங்களில் அடங்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
"சமூகத்தில் பெண்களுக்குக் கல்வி மற்றும் கருத்தடை சாதனங்களுக்கான அணுகுமுறை எளிதாக கிடைப்பதோடு, குடும்ப முடிவுகளை எடுப்பதில் அவர்களுக்கு அதிக அதிகாரம் கிடைக்கும்போது, பெரும்பாலும் மொத்தக் கருவுறுதல் விகிதம் குறைகிறது," என்று இந்தியாவில் சமூகக் கொள்கை சார்ந்த பணிகளை மேற்கொள்ளும் பொருளாதார நிபுணர் தீபா சின்ஹா கூறியிருக்கிறார்.
அதேபோல குழந்தை இறப்பு விகிதம் குறையும்போது, அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளும் விருப்பமும் குறைவதாகவும் மற்றொரு காரணம் சொல்லப்படுகிறது. உதாரணமாக சமீபத்திய SRS அறிக்கையின்படி, இந்தியாவில் குழந்தை இறப்பு விகிதத்தில் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்பட்டுள்ளது. அதாவது 2019-ல் 1,000 குழந்தை பிறந்தால் இறப்பு விகிதம் 30 ஆக இருந்த எண்ணிக்கை, 2024-ல் 1,000 குழந்தைகளுக்கு 24 ஆக இறப்பு விகிதம் குறைந்துள்ளது.
இதை சில உதாரணங்களுடன் எடுத்துக் கூறுகிறார்கள். அதன்படி கடந்த மே மாதம் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி, நாட்டிலேயே மிகக் குறைந்த கல்வி மற்றும் அதிக குழந்தை இறப்பு விகிதங்களைக் கொண்ட வட இந்தியாவின் பீகார் போன்ற ஏழ்மையான மாநிலங்கள், நாட்டிலேயே அதிகபட்சமாக 2.9% என்ற கருவுறுதல் விகிதத்தைப் பதிவு செய்துள்ளன. இதற்கு அடுத்தபடியாக உத்தரப் பிரதேசம் 2.6% என்ற விகிதத்தைக் கொண்டுள்ளது.
இதற்கு நேர்மாறாக, அதிக கல்வி நிலையங்கள் மற்றும் மிகக் குறைந்த குழந்தை இறப்பு விகிதங்களைக் கொண்ட இந்தியாவின் தலைநகரான டெல்லியில், குழந்தை பிறப்பு விகிதம் சராசரியாக 1.2% என்ற மிகக் குறைந்த கருவுறுதல் விகிதத்தைப் பதிவு செய்துள்ளது. அதேபோல இந்தியாவில் சிறந்த சுகாதாரம் மற்றும் கல்வி அமைப்புகளைக் கொண்ட தமிழ்நாடு மற்றும் கேரளா போன்ற தென் மாநிலங்கள் 1.3% என்ற குறைந்த கருவுறுதல் விகிதத்தைப் பதிவு செய்துள்ளன.
1980-களின் தொடக்கத்திலிருந்தே இந்தியாவில் பிராந்திய வளர்ச்சி குறித்து மேற்கொள்ளப்பட்ட பல ஆய்வுகள், தென்னிந்திய மாநிலங்கள் பொருளாதாரம் மற்றும் சமூகத்தில் பெண்களின் நிலையில் விரைவான வளர்ச்சியை அடைந்துள்ளன என்பதை தரவுகளுடன் வெளிப்படுத்தியுள்ளன. எனவே, இதுபோன்ற காரணிகளே குறைந்த கருவுறுதல் விகிதத்திற்குக் காரணமாக அமைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2005 ஆம் ஆண்டு, இந்தியாவின் மக்கள் தொகை demographic dividend எனும் நிலையை எட்டியது. இது, வேலைவாய்ப்புச் சந்தையில் இடம்பெறாத முதியவர்கள் மற்றும் குழந்தைகளின் எண்ணிக்கையை விட, வேலை செய்யும் வயதுடைய (15-64 வயது) மக்களின் விகிதம் அதிகமாக இருக்கும் ஒரு காலகட்டமாகும். ஐநாவின் UNFPA-வின் அறிக்கையின் படி, இந்தியாவின் இந்த நிலை 2055-ஆம் ஆண்டு வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜப்பான், சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் ஆகியவை 1960-களில் இந்த கட்டத்திற்குள் நுழைந்து, விரைவாக வளர்ந்த பொருளாதாரங்களை கொண்ட நாடுகளாக மாறின. சீனா 1980-களில் இக்கட்டத்தை எட்டியதுடன், கடுமையான பொருளாதாரச் சீர்திருத்தங்களின் உதவியோடு ஒரு வலுவான பொருளாதார சக்தியாக உயர்ந்தது. இன்று அது உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரமாகத் திகழ்கிறது.
இந்தியாவிலும் மக்கள் தொகை அமைப்பின் சாதகமான சூழல் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க உதவியுள்ளது. இருப்பினும், இந்தியாவில் தற்போதும் லட்சக்கணக்கானோர் வேலையின்றி உள்ளனர். சமீபத்தில் மத்திய அரசுக்கு எதிராக நடைபெற்ற இளைஞர்களின் போராட்டத்தில் வேலைவாய்ப்பின்மையும் ஒரு முக்கிய காரணியாக பார்க்கப்பட்டது. மேலும், பொருளாதார வளர்ச்சியிலும் சீனாவைப் போலவே இந்தியாவும் ஒரு வளர்ந்த பொருளாதார நிலையை எட்டுவதற்கான இடைவெளி இன்னும் வெகு தொலைவிலேயே உள்ளது.
இப்படிப்பட்ட சூழலில் கருவுறுதல் விகிதம் எதிர்பார்த்ததை விட வேகமாக குறைவதாலும் அதனால் வேலை செய்யும் மக்களின் எண்ணிக்கை வேகமாக சுருங்கி வருவதாலும் demographic dividend மூலம் கிடைக்கக்கூடிய பலன்களை இந்தியா பெற முடியாமல் போகலாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இது தவிர இந்தியா உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இருப்பதால் கருவுறுதல் விகிதம் வேகமாக குறையும்போது புதியதாக உருவாகும் தலைமுறையின் எண்ணிக்கை குறையும் அதே நேரத்தில் ஏற்கனவே மக்களின் வயது அதிகரிக்கும். இதனால் அதிக அளவில் வயதானவர்களை கொண்ட நாடாக இந்தியா எதிர்காலத்தில் மாறும்.
இதனால் இந்தியாவில் வேலையாட்கள் பற்றாக்குறை ஏற்படும் அதன் விளைவுகள் பொருளாதாரத்தில் எதிரொலிக்க தொடங்கும், மேலும் வயதானவர்களை கவனித்துக்கொள்வதற்கான செலவும் அரசிடம் அதிகரிக்கும். அதுமட்டுமின்றி காலப்போக்கில் சமூக ரீதியான மாற்றத்தையும் ஏற்படுத்தும்.
தவிக்கும் உலக நாடுகள்:
இப்போது ஜப்பான் அப்படியான காலகட்டத்தில்தான் இருக்கிறது. அங்கு செலவீனங்களை காரணம் சொல்லி மக்களிடையே குழந்தை பெற்றுக்கொள்வது பரவலாக குறையத் தொடங்கியுள்ளது. அங்கு சராசரியாக குழந்தை பிறப்பு விகிதம் 2.1% என்கிற அளவில் இருக்க வேண்டும். 2025 ஆம் ஆண்டு கணக்கின்படி அங்கு கருவுறுதல் விகிதம் 1.14% என்கிற அளவில் உள்ளது. அரசாங்கம் இந்த எண்ணிக்கையை 1.8% அளவுக்கு உயர்த்த நினைத்து குழந்தை பெற்றுக்கொள்ளும் தம்பதியினருக்கு அதிக அளவிலான சலுகைகளை வழங்கி வருகிறது. இருப்பினும் கருவுறுதல் விகிதத்தில் பெரிய அளவிலான முன்னேற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை. இதே காரணத்திற்காகதான் இப்போது சீனா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளும் மக்களை அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ள ஊக்குவிக்க தொடங்கியுள்ளன.
தமிழ்நாட்டின் நிலை:
எனவே இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்க வேண்டும் என்பது எவ்வளவு முக்கியமோ அதேபோல எதிர்காலத்திற்காக திட்டமிட வேண்டியதும் அவசியமாக கருதப்படுகிறது. தமிழ்நாடு போன்ற நாட்டின் சராசரியை விட குறைவான கருவுறுதல் விகிதத்தை கொண்ட மாநிலங்களுக்கு இப்போது 3 வகையான சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஒன்று மக்கள் தொகை குறைவால் தொகுதி மறுவரையறை செய்யப்படும்போது ஏற்படும் அரசியல் அதிகாரத்திற்க்கான அச்சுறுத்தலை களைய வேண்டும். மறுபக்கம் இப்போது இருக்கும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை போதிய அளவில் ஏற்படுத்த வேண்டும். மூன்றாவதாக எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கருவுருத்தல் விகிதத்தை அதிகரிக்க வேண்டும். இதை அரசு வெறும் எண்ணிக்கையாக அணுக போகிறதா அல்லது அரசியலாக அணுக போகிறதா அல்லது சமூக சிக்கல் சார்ந்த விவகாரமாக அணுக போகிறதா என்பதே முதன்மை கேள்வி

