’சமூகநீதிக்கு சாவுமணி அடித்து விடும்’.. அரசாணை 115க்கு வலுக்கும் கண்டனங்கள்! முழுவிவரம்

’சமூகநீதிக்கு சாவுமணி அடித்து விடும்’.. அரசாணை 115க்கு வலுக்கும் கண்டனங்கள்! முழுவிவரம்
’சமூகநீதிக்கு சாவுமணி அடித்து விடும்’.. அரசாணை 115க்கு வலுக்கும் கண்டனங்கள்! முழுவிவரம்

தமிழக அரசின் மனித வள சீர்த்திருத்த குழு எம்.எப்,பரூக்கி தலைமையில் சந்திரமௌலி, ஜோதி ஜெகராஜன், சந்திராதேவி தணிகாசலம்,லட்சுமி நாராயணன் ஆகிய இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளைக் கொண்டு நியமிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் ஆறு மாதத்தில் தமிழக அரசிடம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இக்குழுவின் வரம்புகள் தமிழகத்தில் படித்த இளைஞர்களின் எதிர்கால அரசு வேலை என்ற கனவை தகர்க்கக் கூடிய வகையில் இருப்பதாக புகார் எழுந்திருப்பதால் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அரசின் பல்வேறு நிலைப் பணியிடங்களை திறன் அடிப்படையில் தற்காலிகமாகவும் ஒப்பந்த மற்றும் குத்தகை அடிப்படையிலும் நிரப்புவதற்கான முறைகளை மேற்கொள்வது குறித்து ஆராய்வது இக்குழுவின் முக்கியமான பணி. அரசின் உயர்நிலைப் பணியிடங்களை தனியார் நிறுவனங்களுடன் ஒப்பிட்டு அப்பணியிடங்களின் வேலைத் திறன் மற்றும் மதிப்பீடு ஆகியவற்றை ஆராய்வதும் மனித வள சீர்த்திருத்தக் குழுவின் பணியாக வரையறுக்கப்பட்டுள்ளது.

இந்த விஷயங்களை ஆராய்ந்து இக்குழு அளிக்கும் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையின் அடிப்படையில் அரசுப் பணியிடங்களை குறைக்க அரசு திட்டமிட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருப்பதால் அரசாணை 115க்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. மேலும் தனியார் முகமைகள் மூலம் ஆட்தேர்வு செய்யப்பட்டால் இட ஒதுக்கீடு கடைபிடிக்கப்படாமல் சமூக நீதிக்கு குந்தகம் ஏற்படும் என்பதும் இந்த குழுவுக்கு எதிராக வைக்கப்படும் அடுத்த குற்றச்சாட்டாகும். 

அரசு வேலைவாய்ப்பை எதிர்ப்பார்த்து படிக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களின் கனவை இந்த அரசாணை சிதைத்து விடும் என்பதால் இந்த அரசாணையை ரத்து செய்து மனித வள சீர்த்திருத்தக் குழுவை கலைக்க வேண்டும் என்பதே முக்கிய அரசியல் தலைவர்களின் கோரிக்கையாக உள்ளது.

அரசாணை எண் 115 விவகாரத்தில் மவுன சாமியாராக முதல்வர் நாடகமாட வேண்டாம் என முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஆண்டாண்டு காலமாக அரசு பணிக்கு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வு வாரியம், காவலர் தேர்வு வாரியம் போன்ற அரசு ஏஜென்சிகள் மூலமாகவும், வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாகவும் ஆட்கள் தேர்வு செய்யப்பட்டனர். இப்படி அரசு வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவதன் மூலம் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா கொண்டுவந்த 69 சதவீத இட ஒதுக்கீடு அரசு வேலைவாய்ப்புகளில் கடைபிடிக்கப்படுகிறது. இதன் மூலம் சமூக நீதி உறுதி செய்யப்படுவதோடு, நேர்மையான முறையில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

இந்த அரசு, இனி அரசு பணிக்கு தனியார் ஆள் சேர்ப்பு நிறுவனங்களை பயன்படுத்த முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. இப்படி தனியார் நிறுவனங்கள், ஆட்களை பணியமர்த்துவதன் மூலம் 69 சதவீத இட ஒதுக்கீடு என்ற உன்னத திட்டத்தை குழி தோண்டி புதைக்கும் வேலையில் இந்த விடியா அரசு இறங்கியுள்ளது என்ற செய்தி மிகவும் அதிர்ச்சியளிக்கிறது.

இதற்காக, தமிழக அரசின் மனித வள மேலாண்மைத் துறை அரசாணை எண். 115 என்ற ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த ஆணையின்படி மனித வள சீர்திருத்தக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆ.கு. பரூக்கி தலைமையிலான இந்த குழு ஆறு மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் ஆய்வு வரம்புகள் தமிழகத்தில் படித்த இளைஞர்களின் எதிர்கால அரசு வேலை என்ற கனவுகளுக்கும், 69 சதவீத இட ஒதுக்கீடு என்ற சமூக நீதிக்கும் மூடுவிழா காண்பதாக உள்ளது.’’ என தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

தமிழக அரசு இந்த 115 விதியை நீக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸும் வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக அரசுப் பணிகளுக்கான ஆள் தேர்வு மற்றும் பயிற்சிகளில் மாற்றங்களை செய்தல், நிரந்தர பணியாளர்களை நியமிக்காமல் தனியார் நிறுவனங்களிடமிருந்து குத்தகை முறையில் பணியாளர்களை பெறுவது உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு பரிந்துரைப்பதற்காக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகளைக் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்திருக்கிறது. நிரந்தரப் பணிகளையும், சமூக நீதியையும் ஒழிப்பதற்கு வழிவகுக்கக் கூடிய தமிழக அரசின் இந்த நடவடிக்கை மிகவும் ஆபத்தானது.

இந்தக் குழுவுக்கு உதவுவதற்காக தில்லியைச் சேர்ந்த பொதுக்கொள்கை மையம் (Centre for Policy Research) நியமிக்கப்பட்டிருக்கிறது. மனிதவள சீர்திருத்தக் குழுவுக்கு தமிழக அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ள பணி வரம்புகள் தான் அச்சமளிப்பவையாகவும், கவலையளிப்பவையாகவும் உள்ளன. அரசு ஊழியர்களின் பணித்திறனை மேம்படுத்தும் நோக்கத்துடன் அரசு ஊழியர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சி முறையில் மாற்றங்களையும், மேம்பாடுகளையும் செய்வது வரவேற்கத்தக்கதும், அவசியமானதும் ஆகும்.

அதே நேரத்தில் ஆள்தேர்வு முறையில் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ள மாற்றங்களை சமூகநீதியில் அக்கறை கொண்டவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை நியமனம் செய்தல், தனியார் முகமைகள் மூலம் சி மற்றும் டி பிரிவு பணிகளுக்கு குத்தகை முறையில் பணியாளர்களை பெறுதல், சில பணிகளுக்கு நேரடியாக நிரந்தர பணியாளர்களை நியமிக்காமல், முதலில் தற்காலிக பணியாளர்களாக நியமித்து பின்னர் அவர்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்து பணி நிலைப்பு வழங்குதல் ஆகிய திட்டங்களை செயல்படுத்துவது பற்றி பரிந்துரை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்பது மனிதவள சீர்திருத்தக்குழுவுக்கு தமிழக அரசு அளித்திருக்கும் பணிகள் ஆகும்.

இதற்கான பரிந்துரைகளை அடுத்த 6 மாதங்களில் மனிதவள சீர்திருத்தக்குழு அரசிடம் வழங்கி, அவை நடைமுறைபடுத்தப்பட்டால், அரசு பணி நியமனங்களில் இட ஒதுக்கீடு தானாகவே அழிந்துவிடும். தமிழக அரசு விதிகளின்படி நிரந்தர பணிகளுக்கு மட்டும் தான் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது; தற்காலிக, ஒப்பந்த அடிப்படையிலான பணி நியமனங்களில் இட ஒதுக்கீடு கடைபிடிக்கப்படுவதில்லை. மனிதவள சீர்திருத்தக்குழுவை அரசு அமைத்திருப்பதன் நோக்கமே பெரும்பான்மையான பணியிடங்களை மிகக்குறைந்த ஊதியத்தில் தற்காலிக அடிப்படையிலும், குத்தகை அடிப்படையிலும் நியமிப்பது தான் என்பதால், அந்த நியமனங்களில் இடஒதுக்கீடு கடைபிடிக்கப்படாது.

அது சமூகநீதிக்கு சாவுமணி அடித்து விடும். பல்கலைக்கழகங்கள், மின்வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் டி பிரிவு பணியாளர்கள் ஏற்கனவே தனியார் நிறுவனங்கள் மூலம் குத்தகை அடிப்படையில் நியமிக்கப்பட்டு வருகின்றனர். பல தருணங்களில் பாட்டாளி மக்கள் கட்சி கடுமையாக எதிர்த்திருக்கிறது. இதே முறையை அனைத்துத் துறைகளுக்கும் நீட்டிக்கவும், சி பிரிவு பணிகளுக்கு விரிவுபடுத்தவும் அரசு திட்டமிட்டிருக்கிறது. இது நடைமுறைக்கு வரும் போது, 90% அரசு பணிகளுக்கு நிரந்தர பணியாளர்கள் நியமிக்கப்பட மாட்டார்கள்; அந்த 90% பணிகளுக்கும் தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்படும் போது இட ஒதுக்கீடு கடைபிடிக்கப்படாது.

சமூகநீதியின் தொட்டிலான தமிழகத்தில் சமூகநீதியை சீரழிக்கும் இத்திட்டத்தை செயல்படுத்தக் கூடாது. தமிழகத்தில் ஏற்கனவே மூன்றரை லட்சம் அரசு பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்புவதற்கு பதிலாக அந்த பணியிடங்களை ஒழித்து விடலாமா? என்பது குறித்து அரசுக்கு பரிந்துரைக்க 3 உறுப்பினர்களைக் கொண்ட குழுவை அமைத்து 18.08.2022 தேதி தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. இந்த பணியிடங்கள் இனி நிரப்பப்படுவதற்கு வாய்ப்பில்லை. மீதமுள்ள பணியிடங்களும் தற்காலிகமாகவும், ஒப்பந்த அடிப்படையிலும் தான் இட ஒதுக்கீட்டை கடைபிடிக்காமல் நிரப்பப்படும் என்றால், அதை விட மோசமான சமூக அநீதி இருக்க முடியாது.

இதை தமிழக அரசு அனுமதிக்கவும் கூடாது. தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தால் அரசுத் துறைகளிலும், கல்வி நிறுவனங்களிலும் காலியாக உள்ள மூன்றரை லட்சம் காலியிடங்கள் நிரப்பப்படும்; புதிதாக 2 லட்சம் பணியிடங்கள் உருவாக்கப்படும் என்று திமுக தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது. அதற்கு முற்றிலும் எதிராக பணியிடங்களை ரத்து செய்ய முயல்வதும், நிரந்தர பணியாளர்களுக்கு பதில் தற்காலிக பணியாளர்களை நியமிக்கத் துடிப்பதும் அரசுக்கு எந்த வகையிலும் நற்பெயரை பெற்றுக் கொடுக்காது. இதை உணர்ந்து கொண்டு சமூகநீதிக்கு எதிரான மனிதவள சீர்திருத்தக் குழுவை அமைப்பதற்காக மனிதவள மேம்பாட்டுத்துறை வெளியிட்டுள்ள அரசாணை எண் 115-ஐ தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.” என்றுள்ளார்.

மேலும் 115 அரசாணை தொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், திமுக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com