பேச்சுலர்களின் பாரடைஸ்: சென்னை மேன்ஷன் வாழ் இளைஞரின் மனம் திறந்த மடல் | #MadrasDay2022

பேச்சுலர்களின் பாரடைஸ்: சென்னை மேன்ஷன் வாழ் இளைஞரின் மனம் திறந்த மடல் | #MadrasDay2022
பேச்சுலர்களின் பாரடைஸ்: சென்னை மேன்ஷன் வாழ் இளைஞரின் மனம் திறந்த மடல் | #MadrasDay2022

பெயர் மட்டுமேயறிந்த ஊரில், பயத்தின் ரேகைகள் படர்ந்துகொண்டிருந்த முகத்துடன், விடலைப்பருவ வயதில் வந்திறங்கியவனுக்கு, கண்ணை கட்டி காட்டில் விட்டதுபோல தெரிந்தது அந்த நகரம். நகரத்தின் அத்தனை சாலைகளிலும் நிற்காமல் ஓடும் மனிதர்களை பார்த்ததும், ‘மெட்ராஸ்னா இப்படித்தான் இருக்கும்போல’ என்ற அனிச்சையான எண்ணங்கள் துளிர்விட்டன. ‘மெட்ராஸ்ல இருக்குறவங்க கிட்ட ஜாக்கிரதையா இருக்கணும்பா, ஏமாத்திடுவாங்க’ என்று ஊரில் இருப்பவர்கள் சொன்னதை நம்பி, தன்னை கடந்து செல்பவர்கள் அத்தனைப்பேரையும் மிரட்சியுடனே பார்த்தான்.

‘டைம் என்னப்பா?’ என்று கேட்டவரை கண்டு பயந்து ஓடத்தொடங்கினான். பின்னாளில், ‘அவர்களின் வார்த்தை எத்தனை பொய்யானது என்பதை எண்ணி அவன் சிரிக்காமலில்லை’. தமிழகத்தின் தலைநகர் குறித்து ஊர்களில் இன்றளவும் கட்டமைக்கப்பட்டிருக்கும் பிம்பம் இது தான்.

ஆனால், உண்மையில் இந்த நகரம் அப்படிப்பட்டதில்லை. அனைவருக்குமானது. அன்பு செலுத்தும் மனிதர்களால் நிரம்பியது. மழை வெள்ளத்தின் காட்சிகளே அதற்கான சாட்சிகள். ஆக்டோபஸ் கரங்களால் வருபவர்களை அரவணைத்துக்கொள்ளும் தாயுள்ளம் படைத்தது. படிப்பை முடித்து ஊரிலிருந்து வருபவர்களுக்கு எங்கே தங்குவது என்பது தான் மிகப்பெரிய தலைவலி. தெரிந்த நண்பர்கள் இருந்தால் அறை எடுத்து தங்கிவிடலாம். இல்லாவிட்டால்?

‘அண்ணே இங்க தங்க இடம் இருக்குமா?’ என்று தயங்கி தயங்கி கேட்டவனிடம் ‘நான் கூப்பிட்டு போறேன் தம்பி’ என ஆட்டோவில் ஏற்றிக்கொண்டார் ஆட்டோக்கார அண்ணன். சென்னையின் முகவரிகள் அவர்கள் தான்! டிராபிக்குகளில் அப்படி இப்படி என ஓட்டி கடுப்பேற்றினாலும் நம்பியவர்களை கைவிடுபவர்களில்லை ஆட்டோக்கார அண்ணன்கள்!

அவன் வந்திறங்கிய இடம் திருவல்லிக்கேணி. சென்னையின் சொர்க்கபூமி! ‘பேச்சுலர்களின் பாரடைஸ்’ என்று அறியப்படும் அதே திருவல்லிக்கேணிதான். நிரம்பி கிடக்கும் மேன்ஷன்களால் பொலிவுபெற்று நிற்கும் இடம். சொல்லப்போனால் மேன்ஷன்கள் குறித்து நகரவாசிகளிடையே கூட தவறான எண்ணங்கள் நிறைந்திருக்கிறது. ஆனால் அப்படியில்லை. மேன்ஷன்கள் கடவுளின் ஆசி பெற்ற ஸ்தலங்கள். தேவதூதர்களின் கட்டடங்கள். வேடிக்கையின் விளைநிலங்கள்; அன்பின் அஸ்திவாரங்கள். மேன்ஷன்வாசிகளின் உலகம் வேறுமாதிரியானது.

கொடியில் காய்ந்துகொண்டிருக்கும் துணிகள், தூக்கி எறியப்பட்ட பிளாஸ்டிக் காகிதங்கள், முழுமையாக மூடப்படாத தின்பண்டங்கள், அழுக்கு துணிகள், லேப்டாப்கள், புத்தகங்கள், ஒளித்து வைக்கப்பட்ட தின்பண்டங்கள், காலி மதுபாட்டில்கள் என அந்த நெருக்கடியான 10க்கு 10 அறையை அழகாக்கும் பொருட்கள்தான் இவை. அந்த அறையை பார்த்தால் ஆச்சரியமாக இருக்கும். இதற்குள் எப்படி வசிக்க முடியும் என கேள்வி எழலாம். ஆனால், அது தான் அவர்களின் உலகம். இதில் தனிநபருக்கான அறை, இரண்டு பேர் இணைந்து ஷேர் செய்யும் அறைகள் என வெவ்வேறு வாடகையில் உண்டு.

சென்னையை பொருத்தவரை கிட்டத்தட்ட 700க்கும் அதிகமான மேன்ஷன்கள் உண்டு. குறிப்பாக திருவல்லிக்கேணியில் 200க்கும் அதிகமானவை இருக்கின்றன. ஒவ்வொரு மேன்சனில் 100, 150 அறைகள் இருக்கும். அந்த ஒவ்வொரு அறைக்குள்ளும் ஒவ்வொரு கதைகள் உண்டு. அங்கிருப்பவர்கள் முன்பின் தெரியாதவர்கள். பழக்கமில்லாதவர்கள். வெவ்வேறு ஊர்கள், கிராமங்கள், மாநிலங்களிலிருந்து வந்தவர்களை இணைப்பது ஒன்றே ஒன்று தான் அது மேன்ஷன்!

அங்கிருக்கும் ஒவ்வொருவருக்குள் சொல்லப்படாத ஆயிரம் கதைகள் உண்டு. அதை சொல்லி பச்சதாபம் தேடிக்கொள்ளவும் அவர்கள் விரும்புவதில்லை. ஏறக்குறைய ஒரு பள்ளிக்கூட, கல்லூரி மனநிலைதான். சாதி,மதங்கள், உயர்வு தாழ்வுகள் என அங்கு எதுவும் குடிக்கொண்டிருப்பதில்லை. மேன்ஷன் அறைகள் எப்போதும் விசித்திரமானவை. அறைவாசிகளின் அறிமுகத்திற்கு பேசவேண்டிய ஃபார்மால்டிக்கள் எல்லாம் அங்கில்லை. உங்கள் இன்ட்ரோவுக்கு சிரிப்பு மட்டும் போதுமானது. எதிரே வருபவரைக்கண்டு சிரித்துவிட்டால் போதும் அடுத்த சில மணிநேரங்களில் அவர் உங்கள் அறையில் ஐக்கியம்!

கட் செய்தால் அடுத்த சீன் பெரும்பாலும் டீக்கடையாகத்தான் இருக்கும். ஒரு நட்புக்கான நெருக்கத்திற்கு அது போதுமானது. அதிகபட்சம் ஒரு சிகரெட். தொடக்கத்தில், ‘நான் பணம் தரேன்’ என்று முந்திக்கொள்ளும் முகமறியா நண்பரை அப்படியே விட்டுவிடவேண்டும். காரணம் அந்த ஒருமுறை மட்டும் தான் அவருடைய கையிலிருந்து காசு விடுவிக்கப்படும். அடுத்தடுத்த முறை சந்திப்புகளில் நமது பர்ஸ்களின் வெயிட் லாஸ் நிகழலாம்!

ஆனால், அதெல்லாம் அவர்களுக்கு பெரிய பிரச்னையில்லை. ஒரு டீ, தம்-ஐ வாங்கி கொண்டு தொடங்கும் பேச்சுலர்களின் காலைப்பொழுது காலை உணவையும் விழுங்கிவிடும். பெரும்பாலானோருக்கு காலை உணவு இருப்பதே தெரியவாய்ப்பில்லை. ‘ஆந்திரா மெஸ்’கள் தான் அவர்களின் மதிய நேர அன்னபூரணிகள். பருப்பு பொடியும், எண்ணெயும், கெட்டிசாம்பாரும், அளவில்லா சாப்பாட்டையும் விட அந்த நாளை வேற என்ன அழகாக்கிட முடியும்? ‘அண்ணா சாப்பாடு’என எத்தனை முறை கேட்டாலும் முகம் சுழிக்காமல் பரிமாறும் அவர்கள் தானே பேச்சுலர்களின் வாழ்க்கையை நகர்த்தி செல்கின்றனர். (நடுக்குறிப்பு: தனியாக நண்பர்களோடு அறை எடுத்து தங்கும் நபர்கள் வீட்டிலேயே சமைத்துகொள்வதால் அவர்கள் இதில் சேரமாட்டார்கள்)

சாப்பிட்டு முடித்து கையோடு, அந்த சின்ன அறையில், இப்பவோ, அப்பவோ என்று ஓடிக்கொண்டிருக்கும் பேனுக்கு அடியில் படுத்து உறங்கும் மதிய தூக்கத்திற்கு இணையான இன்பம் ஈ லோகத்தில் உண்டோ?

மேன்ஷன்களில் பெரும்பாலான அறைகள் பூட்டப்படுவதேயில்லை. அதற்கான தேவையும் இருந்ததில்லை. ஏனென்றால் மேன்ஷன்கள் கம்யூனிஸ்ட் கொள்கைகளை அறியாத சோவியத் யூனிகள். காரணம் அங்கு எல்லாம் பொது உடைமை தான். உள்ளாடைகளை தவிர்த்து. எவ்வளவு பெரிய சமத்துவம்; அந்த அறைகள் எப்போதும் திறந்தே கிடைக்கும். யாரும் வந்து தங்கி செல்லலாம். விடுமுறை நாட்களில் உட்கார இடம் இல்லாத அளவுக்கு கூட்டமிருக்கும். வீட்டு பிரச்னை, கடன் பிரச்சனை, பொருளாதார பிரச்னை, வேலையின்மை என அத்தனையும் அந்த மாலை நேர பேச்சுகளில் கரைந்தோடிவிடும். அதேபோல சில நேரங்களில் பேசக்கூட ஆளில்லாத ஒரு மயானத்தை போல காட்சியளிக்கும். இருப்பினும் டீ சாப்பிட ஏதோ ஒரு அறையிலிருக்கும் ஏதோ ஒரு நண்பர் உங்கள் அழைப்புக்காக காத்துக்கொண்டேயிருப்பார்.

ஒரு வேடந்தாங்கல் போல, அங்கே உங்களால் வித்தியாசமான மனிதர்களை காண முடியும். வெவ்வேறு குணம் கொண்ட, மாறுபட்ட கண்ணொட்டம் கொண்ட, புதுவகையான மனிதர்கள் அறிமுகமாவார்கள். எல்லோருடனும் ஜாலியாக பேசுபவர்கள், புதிதாக பார்ப்பவரைக்கூட பல நூற்றாண்டாக தெரிந்தவரைப்போல காட்டிக்கொண்டு அன்பு செலுத்தபவர்கள். திடீரென்று தோன்றி மறையும் சிலர். அவர்களை மாத கடைசி நாட்களில் காண முடியும். முன்பின் பேசியிருக்க கூட மாட்டார். ஆனால், ‘தம்பி அல்லது சார் ஒரு 100 ரூபா’ என அறிமுகமாகிவிடுவார். அப்படியான 100 ரூபாய்களின் கதை நிறையவே உண்டு!


நம்மை கடந்து செல்பவர்களில் சிலர், பேசிக்கொண்டே சென்று கொண்டிருப்பார்கள். ‘நம்மள தான் கூப்பிட்றாரு போல?’ என்றால் கண்டுக்காமல் சென்றுவிடுவர். அது தனியாக பேசிக்கொள்கிறார்கள் என்று வைத்துக்கொண்டாலும், மற்ற நேரங்களில் சகஜமாக பேசுவார். நல்ல வேலையில் கைநிறைய சம்பாதிக்கும் மனிதர்.

மேன்ஷன்களை பேச்சிலர்களுக்கானது என்பதாக மட்டும் சுருக்கிவிட முடியாது. மேன்ஷன்களுக்கு பாரபட்சம் தெரியாது. முன்னதே சொன்னதுபோல கம்யூனிஸ நிலங்கள். அதனால், திருமணமானவர்கள், பல்வேறு வயதுடையவர்கள், 70 வயதுடையவர்களையும் காண முடியும். அவர்களின் கடந்த காலங்கள் எதுவும் நமக்கு தெரியாது. எதற்காக இங்கிருக்கிறார்கள்? என்ன பிரச்னை? திடீர் மருத்துவ தேவை ஏற்பட்டால் என்ன செய்வார்? என எதுவும் தெரியாது. அவர் முதல் பெஞ்ச் மாணவர் போல அவர் தன் கடமைகளை செவ்வனே செய்துகொண்டு காலத்தை நகர்த்திக்கொண்டிருப்பார். அவர்களுக்கான உலகம் மேன்ஷன்களிலே கூட முடிந்துவிடக்கூடும்.

ஒரு சில அறைகளின் உள்பக்க தாழ்ப்பாள்கள் எப்போதும் இறுக்கிக்கொண்டேயிருக்கும். அவர்கள் திறக்கவே மாட்டார்கள். ‘இன்ட்ரோவர்ட்’ என கூறிவிடமுடியாது. மாறாக, கிணற்றுக்குள் விழுந்த கல்லாக ஏதோ ஒரு சோகம் அவர்களை அழுத்திக்கொண்டிருக்ககூடும். ஆனால், கடைசிவரை அவர் ஏன் அப்படியிருக்கிறார், உண்மையில் என்ன பிரச்னை என்பதை கண்டுபிடிக்கவே முடியாது. சில நாட்கள் அந்த தாழ்ப்பாள்கள் ஒரே அடியாக மூடப்பட்டுவிடும். தற்கொலை செய்து மடிந்தவர்களும் உண்டு. அந்த மனிதரின் சோகத்தை தன்னில் வைத்துக்கொண்டு காலத்துக்கும் அந்த அறை பூட்டியே கிடக்கும்.

நண்பர்கள் கூட்டத்தில் தன்னுடைய டீக்கு மட்டும் காசு நீட்டுபவர்கள், இரவில் ஹெட்போனுடன் உறவாடிக்கொண்டிருப்பவர்கள், தனிமை விரும்பிகள், இருள் விரும்பிகள், டீ,சிகரெட்டை உணவாக்கிக்கொண்டவர்கள், சோகத்தை மட்டுமே வாழ்க்கையாக்கி கொண்டவர்கள், எதைப்பற்றியும் கவலைப்படாதவர்கள் என அனைத்து வகையான மனிதர்களும் குழுமியிருக்கும் இடம்தான் மேன்ஷன்!

காலப்போக்கில், குடும்பமாக மாறியதும் சென்னையின் பிற பகுதிகளில் வாடகை வீடெடுத்து தங்கியும், சொந்த ஊர்களுக்கு திரும்பியும், பல்வேறு காரணங்களால் மேன்சனிலிருந்து வெளியேறிவர்கள் ஏதோ ஓர் நாளில் தாங்கள் வசித்த மேன்சனை கடக்கும்போது, நிழலாடும் நினைவு காலத்துக்குமானது. இப்போது இதை நீங்கள் வாசித்துக்கொண்டிருக்கும்போதும் கூட யாரோ ஒருவர், சென்னையின் மேன்ஷன்களை தட்டிக்கொண்டிருக்க கூடும்…

-கலிலுல்லா

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com