
“அடுப்பு ஊதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு?” என்ற ஒரு காலம் இருந்தது என்று சொன்னால் இப்போது இருக்கும் தலைமுறையினர் யாரும் நம்பமாட்டார்கள். அந்த அளவிற்கு பெண்களை அடக்கி, ஒடுக்கி வைத்திருந்த ஆண்கள் உலகம் இருந்தது என்றால் அது மிகையல்ல. அவற்றில் இருந்து பெண்களை மீட்டெடுக்கவே காந்தி, பெரியார், அம்பேத்கர், காமராஜர் போன்ற தலைவர்கள் போராடிக்கொண்டிருந்தனர்.
அதில் அவர்களால் முழுமையாக வெற்றி பெற முடியவில்லை என்றாலும் அதற்கான வழியை காண்பித்து விட்டு சென்றார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். கல்வி, விளையாட்டு, மருத்துவம், விமானம், கப்பல் என பல்வேறு துறைகளிலும் பெண்கள் தற்போது முன்னேறி வருகின்றனர்.
கல்வியில் வியக்கும் அளவிற்கு ஆண்களை விட பெண்கள் முன்னேறி வந்து கொண்டிருக்கின்றனர். விளையாட்டுத் துறையை பொருத்தவரை குத்துச்சண்டையில் மேரிகோம், பேட்மிண்டனில் சிந்து, கிரிக்கெட்டில் மிதாலி ராஜ் போன்ற பெண்கள் பலர் சாதனை படைத்து வருகின்றனர். இன்னும் பல்வேறு துறைகளிலும் கண்ணுக்கு தெரியாமல், பெயர்கூட வெளிவராமல் பல பெண்கள் திறமையுடன் செயல்பட்டு வருகிறார்கள்.
சமீபத்தில் கூட ராணுவத்தில் வேலைப்பார்க்கும் பெண் மருத்துவர்கள் இரண்டு பேர் ரயிலில் பயணம் செய்த கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்தது பலராலும் பாராட்டப்பட்டது. இப்படி பல்வேறு துறைகளில் பெண்கள் முன்னேறி வந்தாலும் அவர்களின் வளர்ச்சியில் பலகட்ட முட்டுக்கட்டைகள் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. சபரிமலைக்கு பெண்கள் செல்லலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு கூட ஒருதரப்பினர் வரவேற்பும் மற்றொரு தரப்பினர் எதிர்ப்பும் தெரிவித்தனர். இந்த விவகாரம் முடிவுக்கு வராமல் விஸ்வரூபம் எடுத்தது. பெண்களுக்கு இருக்கும் பிரச்னைகளின் ஒரு பகுதியாக இந்திய ராணுவத்தில் பெண்களுக்கு சலுகைகள் மறுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்திய ராணுவத்தைப் பொருத்தவரை, சண்டையிடுவதில் பெண்களுக்கு இருக்கும் சிரமங்களைக் கருத்தில்கொண்டு போலீஸ் படைப்பிரிவில் நீண்ட காலமாக பெண்கள் நியமிக்கப்படாமல் இருந்து வந்தனர். கடந்த வருடம்தான் ராணுவத்தின் போலீஸ் படைப்பிரிவில் பெண்கள் சேர்க்கப்பட்டனர்.
ஆனாலும் ராணுவத்தில் பெண்களுக்கு நிரந்தர பணி மற்றும் உயர்பதவிகள் வழங்குவதில் இன்னமும் சிக்கல்கள் இருந்து கொண்டுதான் இருக்கிறது. இந்திய ராணுவத்தில் பெண் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் பணிவாய்ப்பு மற்றும் பதவி உயர்வு குறித்து கடந்த 2010-ம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மேல்முறையீடு செய்திருந்தது.
இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம் பெண்களுக்கு சாதகமான தீர்ப்பை வழங்கியுள்ளது. இது அனைவர் மத்தியிலும் வரவேற்பை பெற்றது. இந்த வழக்கின் விசாரணையில், பெண்களுக்கு ஏன் கமாண்டர் பதவி வழங்கக்கூடாது என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அதற்கு, ஆண்களின் உடல் வலிமைக்கு நிகராக பெண்களால் பணியாற்ற முடியாது என்று மத்திய அரசு பதில் அளித்தது. மத்திய அரசின் இந்த பதிலை நீதிபதி சந்திரசூட் அமர்வு ஏற்க மறுத்தது. ராணுவத்தில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் விதிமுறை ஒன்றுதான் என்று கூறிய உச்சநீதிமன்ற நீதிபதிகள், மத்திய அரசின் மனநிலைதான் மாறவேண்டும் என கருத்து தெரிவித்தனர். இந்திய ராணுவத்தில் கமாண்டர் பதவிகள் சமமான முறையில் வழங்கப்பட வேண்டும் என்றும் பெண் ராணுவ அதிகாரிகளுக்கு நிரந்தர பணியிடம் வழங்காதது மத்திய அரசின் பாரபட்சமான செயல்பாடு என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
மேலும் பெண் ராணுவ அதிகாரிகளுக்கான நிரந்தர பணியிடங்களை மூன்று மாதங்களில் வழங்க மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த தீர்ப்பு குறித்து உச்சநீதிமன்றத்தில் கூடியிருந்த பெண் அதிகாரிகள் அனைவரும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பின் மூலம் 1,500 பெண் அதிகாரிகள் பயன் அடைவார்கள் என ராணுவ உயரதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதைத்தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு முன்வைத்த வாதத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “ராணுவத்தில் பெண் அதிகாரிகள் ஆண்களை விட தாழ்ந்தவர்கள் என்பதால் கட்டளை பதவிகள் அல்லது நிரந்தர சேவைக்கு அவர்கள் தகுதியற்றவர்கள் என்று உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டதன் மூலம் ஒவ்வொரு இந்திய பெண்ணையும் அரசு அவமதித்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்திற்கு ட்விட்டரில் கொலை மிரட்டல்: போலீசார் வழக்குப்பதிவு
இதேபோல், முற்போக்கான இந்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பை தான் வரவேற்பதாக பஞ்சாப் மாநில முதல்வர் அம்ரிந்தர் சிங் ட்விட்டரில் கருத்துத் தெரிவித்துள்ளார். இதையடுத்து மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ட்விட்டர் பக்கத்தில் “பெண் அதிகாரிகள் ஆயுதப் படையில் நிரந்தரமாக பணியாற்றலாம் என உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை முழு மனதுடன் வரவேற்கிறேன். கடந்த 2018-ஆம் ஆண்டு சுதந்திர தின உரையின்போது, பெண்கள் படைகளை வழிநடத்திச் செல்லும் அளவிற்கு ஆயுதப் படையில் அவர்களுக்கு நிரந்தர பணியிடங்களை வழங்க வேண்டும் என்ற யோசனையை பிரதமர் மோடி தெரிவித்தார்” என அவர் பதிவிட்டுள்ளார்.