அழகு சாதனப் பொருட்களில் இவ்வளவு ஆபத்தா..? - எச்சரிக்கும் மருத்துவர்கள்...!

அழகு சாதனப் பொருட்களில் இவ்வளவு ஆபத்தா..? - எச்சரிக்கும் மருத்துவர்கள்...!
அழகு சாதனப் பொருட்களில் இவ்வளவு ஆபத்தா..? - எச்சரிக்கும் மருத்துவர்கள்...!

‘அழகு என்பது நிச்சயம் பெண்பால்’தான் என்பதை அவ்வளவு எளிதில் யாரும் மறுத்துவிட முடியாது. அழகுக்கு அழகு சேர்க்கும் விதமாகப் பெண்கள் பலர் அழகு சாதனப்பொருட்களை பயன்படுத்தி தங்களை மெருகூட்டி வருகின்றனர்.

முன்பெல்லாம் அழகு சாதனப்பொருட்கள் என்றால் முதலில் நினைவுக்கு வருவது சப்பாத்திக்கள்ளி பழமும், பீட்ரூட்டும் தான். அதில் இருக்கும் சாயத்தை உதட்டில் பூசிக்கொண்டு கண்ணாடியில் தங்களின் அழகைப் பார்க்காத பெண்களே இல்லை என்று கூறலாம். சிறு பிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த அனுபவங்களைக் கடந்துதான் வந்திருப்பார்கள்.

ஆனால், தற்போது அழகைப் பராமரிக்க, பல்வேறு அழகு சாதனப்பொருட்கள் பல்வேறு ரகங்களில் கொட்டிக்கிடக்கின்றன. குறிப்பாகப் பெண்களே இவற்றை அதிகம் பயன்படுத்துபவர்களாகவும் காணமுடிகிறது. வீட்டில் இருந்தாலும், வெளியே சென்றாலும், ஏன் எப்போதுமே மேக்கப்பிலேயே இருக்கும் பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இதுகுறித்து அவர்களிடம் கேட்டால், மேக் அப் போடுவது தங்களுக்கு ஒரு புதிய நம்பிக்கையையும் அழகையும் தருவதாகக் கூறுகின்றனர். சில பெண்கள் மேக் அப் போடுவதை விட இயற்கையாக இருப்பதுதான் அழகு என்றும் மற்றொரு தரப்பினர் அப்படியெல்லாம் இல்லை. மேக் அப் போட்டால்தான் நம்மேல் மற்றவர்களுக்கு ஈர்ப்பும் நம்பிக்கையும் வரும் எனவும் தெரிவிக்கின்றனர்.

ஆரம்பத்தில் இளம்பெண்கள் மட்டும் பயன்படுத்தி வந்த அழகு சாதனப்பொருட்கள் பின்னாளில் ஆண்கள், குழந்தைகள், முதியவர்கள் என அனைவரும் பயன்படுத்தத் தொடங்கி விட்டனர். அழகைத் தாண்டி மேக் அப் பொருட்கள் உடலுக்கு நன்மை பயக்கக்கூடியதா அல்லது தீமை பயக்கக்கூடியதா என்ற விழிப்புணர்வும் தற்போதைய காலகட்டத்தில் தேவைப்படும் ஒன்றாகவே உள்ளது.

இதுகுறித்து தோல் மருத்துவர் பபிதா புதிய தலைமுறை நிகழ்ச்சியில் கூறுகையில், “ஒரு நாளைக்குக் குறைந்த பட்சம் 5 பேர் சிகிச்சைக்கு வருகின்றனர். பல்வேறு குறைகளைத் தெரிவிப்பார்கள். ஃபேஸ் கிரீம் பயன்படுத்தி, இருந்த கலரைவிட கருப்பாகி விட்டேன் என்பார்கள். சிலர், முகம் முழுக்க முகப்பருவுடன் வருவார்கள். விளம்பரங்களில் காட்டுவதுபோல் எந்த ஒரு கிரீமும் உடனே ஒருவரை கலராக்க வாய்ப்பில்லை. கிரீம் பொருட்களை வாங்கும்போது என்னென்ன வேதிப்பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளது என்பதைப் பார்க்க வேண்டும். மெர்குரி, லெட், ஆர்சனிக், கேட்மியம், நிக்கல் போன்ற கன உலோகங்கள் சேர்க்கப்பட்டிருப்பது மிகவும் ஆபத்தானது. இவற்றைப் பயன்படுத்துவதால் சிறுநீரகம் பாதிக்கப்படலாம். மூளை பாதிக்கப்படலாம். வயிறு சம்பந்தமாக கூட பாதிப்பு வரலாம். வெற்று விளம்பரங்களை நம்ப வேண்டாம்” எனத் தெரிவித்தார்.

இதுகுறித்து தோல் நோய் மருத்துவர் சேதுராமன் புதிய தலைமுறை நிகழ்ச்சியில் கூறுகையில், “கருவுற்ற பெண்கள் ஃபேஸ் கிரீம் பயன்படுத்துவதால் வயிற்றில் வளரும் குழந்தை வரை பாதிக்கும். அழகு சாதனப்பொருட்களை பயன்படுத்துவதால் இயற்கையாகவே தோலுக்குப் பாதுகாப்பானாக இருக்கும் மெலனின் குறைபாடு ஏற்படும். கிரீம் பூசுவது தோலோடு நின்று விடுவது கிடையாது. ரத்த ஓட்டத்திற்குள் செல்லும். நரம்புகளைப் பாதிக்கும்.

தரமான நிறுவனங்கள் தயாரிக்கும் அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்தலாமா எனக் கேட்கிறார்கள். முதலில் தரமான நிறுவனம் என்று சொல்லிவிட்டு பின்னர் அரசாங்கமே அதற்குத் தடை விதிப்பதையும் நாம் பார்க்கிறோம். ஆஸ்திரேலியாவில் தோல் கேன்சர் அதிகமாக உள்ளது. ஆனால் இங்கு யாரும் தோல் கேன்சரை கண்டுகொள்வதில்லை. உடலைப்போலத் தோலையும் நாம் பராமரிக்க வேண்டும். அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்துவதால் வரும் முகப்பருவை அவ்வளவு சீக்கிரம் குணப்படுத்த முடியாது.

கிரீம்களை பயன்படுத்துவதால் பெண்களுக்கு முகத்தில் முடி வளரும். திடீரென எங்கிருந்து முடி வருகிறது என்று பார்ப்பார்கள். அவர்கள் கிரீம் தடவுவதால்தான் முடி வளர்கிறது. அது அவர்களுக்குத் தெரியவில்லை. தோல் தடிமனாகும். வெயிலில் சென்றால் தோல் எரியும். முகம் சிலருக்கு வெளுத்துப் போகும். திருமணம் போன்ற என்றாவது ஒருநாள் பயன்படுத்தினால் அது பெரிய விளைவை ஏற்படுத்தாது. ஆனால், அதைத் தொடர்ந்து செயல்படுத்தும்போது இத்தகைய பாதிப்புகள் ஏற்படும்.

தோல்களைப் பாதுகாக்க வைட்டமின் சி அதிகம் உள்ள ஆரஞ்சு பழங்களை அதிகம் சாப்பிடலாம். எலுமிச்சை பழத்தை முகத்தில் தேய்ப்பதற்குப் பதிலாக உணவாக எடுத்துக்கொள்ளலாம். தேவையின்போது தண்ணீர், லேசான உடற்பயிற்சிகள், தூக்கம், இவற்றைப் பின்பற்றினாலே தோலைப் பாதுகாத்துக்கொள்ள முடியும். என்னைக்கேட்டால் தோலுக்கு எவ்வித அழகு சாதனப்பொருட்களும் தேவையில்லை” எனத் தெரிவிக்கிறார்.

இதுகுறித்து மருந்து கட்டுப்பாட்டுத்துறையின் முன்னாள் இணை இயக்குநர் முகமது யூசுப் கூறுகையில், “இயற்கை சார்ந்த அழகுப்பொருட்களைப் பயன்படுத்துவதால் எவ்வித பாதிப்புகளும் ஏற்படாது. பக்க விளைவுகளை ஏற்படுத்தாத இயற்கை சார்ந்த பொருட்களைப் பயன்படுத்தலாம். அழகாக இருப்பதே தன்னம்பிக்கையை அதிகரிக்கும் என்ற கூற்றுகளெல்லாம் உண்மையல்ல” எனத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com