'பேட் மாத்த கூட நேரம் இருக்காது; அதிகாரிகள் டார்ச்சர்' - இது காவலர்களின் குமுறல்...!
அக உணர்வுகளின் அழுத்தங்கள் தான் புற உலகில் சத்தங்களை எழுப்புகின்றன. மனிதனின் அக உலகம் வெடித்து சுக்கு நூறாக்கப்படும்போது வெறுப்பு வாரியிறைக்கப்படுகிறது. அடக்க முடியாத சோகங்களையும், கவலைகளையும் ஏந்திக்கொண்டிருக்கும் மனம் தேம்பி அழத்தொடங்கிவிடுகிறது. ஏற்க முடியாத வேதனையில் கேவி கேவி துடிக்கிறது; ஆறுதல் தேடுகிறது. மறுக்கப்படும் ஆறுதல்கள் தான் வாழ்க்கையை முடித்துக்கொள்வதற்கான பாதையின் கற்களை வரிசைப்படுத்திவிடுகின்றன. அப்படி எல்லோருக்கும் மன அழுத்தங்கள் இருந்தாலும், காவல்துறையினருக்கு எப்போதும் அவர்களுடனிருக்கும் துப்பாக்கிகள் போல மன அழுத்தங்களையும் சேர்த்தே சுமக்க வேண்டியிருக்கிறது.
சாதாரண மக்களிடம் வெளிப்படும் காவல்துறையினரின் கடுமையான செயல்பாடுகள் கூட மன அழுத்தத்தால் விளைந்ததே என்கிறார்கள். அவர்களுக்கு கொடுக்கப்படும் அழுத்தங்கள், விடுப்பு மறுப்பு, 8 மணி நேரத்துக்கும் அதிகமான பணி என ஏராளமான அழுத்தங்களினால் உண்டாகும் ஆத்திரம் யார் மீது காட்டுவது என தெரியாமல் குடிமக்களின் மீது வெளிப்படுத்தபடுகிறது என கூறப்படுகிறது. அவற்றை நியாயப்படுத்த முடியாது என்றாலும், அதற்கான காரணங்களை ஆராய்வது முக்கியமானது. அந்த காரணங்களை ஆராயும் முயற்சியே இந்த கட்டுரை.
காவலர்களுக்கு ஏற்படும் மன அழுத்ததிற்கும் தற்கொலைக்கு என்ன காரணம் என்பது குறித்து காவல்துறையில் பணியாற்றுபவர்களிடம் பேசினோம்.
தற்கொலைக்கு என்ன காரணங்கள்?
காவலர்கள் தற்கொலைக்கு குறிப்பிட்டு ஒரு காரணம் என்று மட்டும் கூறிவிட முடியாது. பல்வேறு காரணங்கள் அடங்கும். குறிப்பாக டிரான்ஸ்பர் ஒரு முக்கியமான பிரச்னை. காவல் நிலையங்களில் பிடித்த, பிடிக்காத காரணத்தினால் சில மாதங்களுக்கு ஒருமுறை டிரான்ஸ்பா் என்ற பெயரில் காவலர்கள் பந்தாடப்படுகிறார்கள். ஆயுதப்படை, சிறப்பு காவல்படையில் இருப்பவர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் டிரான்ஸ்பர் செய்யப்படும்போது அவர்களின் ஒட்டுமொத்த வாழ்வாதாரமும் பாதிக்கப்படுகிறது. குடும்பம், மனைவி, குழந்தைகள் ஓரிடத்திலிருக்கும்போது, அடிக்கடி மற்ற மாவட்டங்களுக்கு மாற்றபடுவதால் காவலர்கள் அதிருப்தி அடைகிறார்கள். டிரான்ஸ்பா் கேட்டு எதிர்பார்த்து காத்திருந்து ஏமாற்றம் அடையும் போது வேறு வழியின்றி மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனா்
விடுப்பு பிரச்சனை
தல தீபாவளி பொங்கல் மட்டுமே ஒரு காவலர் கொண்டாடும் கடைசி விழா. அடுத்து விடுப்பே எடுக்க முடியாது. அனைவரும் பண்டிகைகளை கொண்டாடும்போது காவலர்கள் மனதில் ஒரு ஏக்கம் இருக்கும். அவர்களும் மனிதர்கள் தானே. அதேபோல அவசர கால விடுப்பு மறுக்கப்படும்போது காவலர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். உதாரணமாக, குடும்பத்தில் உள்ளவா்களை மருத்துவமனை அழைத்து செல்ல, தனக்கு உடல்நிலை சரியில்லாத போது விடுப்பு அல்லது ஓய்வு கேட்டு கிடைக்காதபோது அவர்கள் மனநிலை என்னமாதிரியாக இருக்கும் என்பதை யோசித்துப்பாருங்கள். மேற்கண்ட ஒன்றில் பாகுபாடு காட்டினாலும் அதிகளவு மனஉளைச்சலை ஏற்படுத்தும்.
ஓய்வின்மையால் வரும் மனஅழுத்தம்
தமிழக அரசு துறைகளிலே காவல்துறைக்கு தான் எந்த பக்கம் திரும்பினாலும் பிரச்சனைகள் வரும். இதில் உயர்அதிகாரிகள் அல்லது அரசின் சார்பில் புதுப்புது திட்டங்கள் செயல்படுத்துகின்றன. ஆனால் அந்த பணிகளை செய்வதற்கு காவலர்களின் எண்ணிக்கை மிக குறைவாக உள்ளனா்.உதாரணத்திற்கு ஒரு காவல் நிலையத்தில் 10 பேர் பணியாற்றுகிறார்கள் என்றால் அதில் 6 பேர் (அயல்பணி, விடுப்பு, சிறப்பு பணி) போன்றவற்றில் இருப்பதால் மீதம் உள்ள 4 பேருக்கு அனைத்து பணிகளும் ஒதுக்கப்படுகிறது.
இதனால் ஓய்வு கிடைப்பதில்லை, தனக்கான தேவையை பூர்த்தி செய்ய இயலவில்லை, மேற்கண்ட பிரச்சனையை வீட்டில் உள்ளவா்கள் மீது காட்டுவதால் குடும்ப பிரச்சனை உருவாகிறது. இதனால் மக்கள் மீதும் அவ்வப்போது கோபத்தை காட்டுகின்றனா். தனது பிரச்சனையை வெளியே கூற சந்தர்ப்பம் கிடைக்காத சூழல் கடன், குடும்ப பிரச்சனை என பல பிரச்னைகள் தற்கொலைக்கு காரணமாகிறது. டிஜிபி தற்போது வார விடுப்புக்கு அனுமதியளித்திருந்தாலும் பெரும்பாலான மாவட்டங்களில் அந்தந்த காவல்நிலைய உயர்அதிகாரிகள் விடுப்பு வழங்குவதில்லை.
மன அழுத்தம்..மட்டுமின்றி அதிகாரிகள் அழுத்தமும் காரணமா?
ஒரு காவல்நிலையத்தில் தினசரி 100 மோட்டார் வழக்கு பதிய வேண்டும் என டார்கெட் செய்வது, அந்த டார்கெட்டை முடிக்க சாலையின் குறுக்கே சென்று வாகனங்களை மடக்குவதால் ஏற்படும் விபத்தில் தனக்கோ அல்லது வாகனத்தில் வருபவருக்கோ பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகிறது. தனக்கு உடல்நிலை சரியில்லை என எளிய பணி கேட்டால் வழக்கமான பணியை வழங்குவது. விடுப்பு கேட்டால், ‘இந்த பணியை முடித்து விட்டு வா பிறகு விடுப்பு வாங்கி கொள்’ என உயர் அதிகாரிகளின் அழுத்தங்களும் இங்கே நீடித்துக்கொண்டிருக்கிறது. பெரும்பாலான இடங்களில் இதான் நிலைதான் தொடர்கிறது.
காவல்துறை மரணங்கள் சதவீதம்
பெண் காவலர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன?
அது இன்னும் கொடுமை. அவர்களுக்கு மட்டும் எந்த விடியலும் நிகழ்வதில்லை. மாதவிடாய் காலங்களில் யாரிடமும் சொல்லவும் முடியாது; பேட் மாற்ற இடமும் இருக்காது. தண்ணீர் குடித்தால் சிறுநீர் வரும் என பெரும்பாலான பெண் காவலர்கள் தண்ணீர் குடிப்பது கிடையாது. சிறுநீர் அடக்குவதால் நோய் உள்ளிட்ட பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. ஆயுதப்படை & சிறப்பு காவல் படையில் ஊர் விட்டு ஊர் சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போது பாதுகாப்பான தங்குமிடம், கழிவறை பெரும்பாலும் இருக்காது.
அவர்கள் தங்களுடைய 1 வயது அல்லது அதற்கு குறைவான பிஞ்சு குழந்தைகளைக்கூட வீட்டிலேயே விட்டுவிட்டு பணிக்கு வர வேண்டியதிருக்கும். வீடு திரும்ப இரவாகிவிடும். பெரும்பாலும் விஐபிக்கள் வந்து செல்வது பைபாசில் தான். அந்த நெடுஞ்சாலைகளில் கடைகள் இருந்தால் பிரச்னையில்லை. அது பக்கபலமாக இருக்கும். ஆனால் அப்படியில்லாவிட்டால், சிரமம்தான். பெண் காவலர்கள் என்னதான் சீருடையில் நின்றிருந்தாலும் கூட ஒரு பாதுகாப்பற்ற சூழல் இருந்துகொண்டேதான் இருக்கும்.
நீண்ட நேரம் வெயிலில் அரசியல்வாதிகள் பந்தோபஸ்துக்காக காவலர்கள் நிற்க வைக்கப்படுகிறார்கள். அப்படி நிற்கவைக்கப்படும்போது அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன?
உணவு சரியான நேரத்தில் கிடைக்காது; தண்ணீர் தேடி அலைய வேண்டிவரும். சாலையில் உள்ள மைல்கல்லில் தான் இளைப்பாற முடியும். பல மணி நேரம் நின்று கொண்டிருப்பார்கள். சரி கொஞ்சம் உட்காரலாம் என நினைத்து உட்காரும்போது, அந்த நேரம் பார்த்து மேலதிகாரி ரவுன்ஸ் வந்துவிடுவார். கடுமையாக வசைபாடுவதுண்டு. இது உடல்ரீதியாக சோர்ந்து கிடக்கும் காவலருக்கு மன ரீதியாக இன்னும் பாதிப்பை ஏற்படுத்தும். சிறு இளைப்பாறலுக்கே போராட வேண்டியிருக்கும்.
மாலை 5 மணிக்கு விஐபி வருகிறார் என்றால் காலை 7 மணி முதலே அதற்கான பிராஸஸ் தொடங்கிவிடும். வெறும் 30 நிமிட இடைவெளி கொடுத்து உணவு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை செய்து முடித்து டியூடி பாயிண்ட்டுக்கு வந்த நிற்க வேண்டும் என உத்தரவிடுவார்கள். அதை பார்வையிட அதிகாரிகள் வந்துவிடுவார்கள். அதேபோல பாதுகாப்பு பணி முடிந்த பின்பும் நீண்ட நேரம் நின்றுகொண்டிருக்கும் காவலரை அங்கிருந்து அனுப்பாமல், உத்தரவுக்காக காத்திருக்க வைப்பார்கள். இப்படியாக ஏராளமான பிரச்னைகள் காவல்துறையில் இருக்கின்றன.
இந்த பிரச்னைகளையெல்லாம் அடையாளம் கண்டு சரிசெய்தால் காவலர்களுக்கு உளவியல் ரீதியான அழுத்தங்கள் குறைந்து, தற்கொலைகள் குறையும். பொதுமக்கள் மீதான காவலர்களின் விறுப்பு வெறுப்புகளும் நீங்க காரணமாக அமையும்’’ என்றார்.