எதைக் குடித்தாலும் உயிர் போய் விடும் போலிருக்கிறதே?
187 இடங்களில் நடைபெற்ற வருமான வரிச் சோதனையின் நீட்சியாக அல்லது இறுதியாக ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்திலும் நடந்துள்ளது. அவர் வீட்டிலேயாவா? என்ற கணக்கில்..சிலர் அதிர்ச்சி தெரிவித்திருக்கின்றனர். ஆரம்பத்திலிருந்தே இந்தச் சோதனைகள் அத்தனையிலும் ஜெயலலிதாவைப் பிரித்துப் பார்க்கும் ஒரு மனோபாவம் அவரை மறைத்து விட்டுப் பார்க்கும் பார்வை இருக்கிறது. திட்டமிட்டோ அல்லது இறந்து போய்விட்டாரே என்ற சென்ட்டிமென்ட்டிலோ அவரை விட்டு விட்டே வருமான வரிச் சோதனைகள் பார்க்கப்படுகின்றன.
சசிகலா குடும்பத்தினர் வீட்டில் அவர்களுக்குச் சொந்தமான நிறுவனங்களில் சோதனை நடப்பது சரி எனில் போயஸ் கார்டனில் சோதனை நடப்பதும் இயல்பாகவே சரியாகத்தானே இருக்க வேண்டும்? வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கில் ஜெயலலிதா இறந்து போனாலும் குற்றவாளி என்ற தீர்ப்பைச் சுமந்து கொண்டுதானே இறந்து போயிருக்கிறார். குற்றம் நிரூபிக்கப்பட்டு விட்டதுதானே? அந்த வழக்கில் தற்போது சிறையில் உள்ள சசிகலாவின் குடும்பத்தினர் மற்றும் அவர்களுக்குச் சொந்தமான வீட்டில் சோதனை நடந்த போது அது ஏதோ ஜெயலலிதாவுக்கு சம்பந்தமே இல்லாதது போல பார்ப்பது சரிதானா?
சீமான் கேட்கிறார். சசிகலா குடும்பம் சேர்த்த சொத்துக்கள் ஜெயலலிதாவுக்குத் தெரியாமலா இருந்திருக்கும்? (சீமான் மட்டுமல்ல. பலரும் இப்போதுதான் இப்படி ஜனநாயகக் குரலை உயர்த்த ஆரம்பித்திருக்கின்றனர்)
ஏற்கனவே நடந்த சோதனைகளில் நமது எம்ஜிஆர் அலுவலகம் சோதனைக்கு உள்ளான போதே அது ஜெயலலிதாவின் கொள்கை விளக்கப்பத்திரிகை மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்று யாரும் சொல்லவில்லை. ஜெயலலிதாவின் பிரசார பீரங்கியாக செயல்பட்ட ஜெயா டிவி சோதனைக்குள்ளான போதும் அப்படிப் பார்க்கவில்லை. என்னதான் இந்த சோதனைகளை ஜெயலலிதாவிடமிருந்து பிரித்துக் காட்ட முயற்சித்தாலும் அவற்றில் இருந்து ஜெயலலிதாவைப் பிரித்துப் பார்க்க முடியாது என்பதுதான் உண்மை. இப்போது நேரடியாக ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்திற்குள்ளேயே.. அதைக் கோவில் என்கிறார்கள்...... கோவிலுக்குள்ளேயே புகுந்து விட்டது வருமான வரித்துறை.
ஒரு சில அமைச்சர்களும் எம்பிக்களும் கோவிலுக்குள் வருமான வரித்துறையா? என்று மிகவும் பலவீனமான குரலில் வேதனையை வெளிப்படுத்துகின்றனர். தமிழகத்தில் எல்லாமே சென்ட்டிமென்ட்டுத்தான். கடவுளைப் பற்றிப் பேசினாலும் தமிழர்களைப் பற்றிப் பேசினாலும்... சினிமா வசனமாக இருந்தாலும் ..வருமான வரிச் சோதனையாக இருந்தாலும் எதிலுமே உண்மையைப் பார்ப்பதைக் காட்டிலும் சென்ட்டிமென்ட் பார்ப்பதுதான் வழக்கமாக அதிகம். நல்லவேளையாக போயஸ் கார்டனிலேயே சோதனையா? என்ற சென்ட்டிமென்ட் இந்த முறை பெரிதாக எழவில்லை.
சாலை மறியல், முழு அடைப்பு, பேருந்துக்குத் தீ வைத்தல் போன்ற எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் தமிழகம் இயல்பு நிலை மாறாமல் இயங்கிக் கொண்டிருக்கிறது. மொத்தமே நாற்பது பேர் கொஞ்சம் கோஷம் போட்டு விட்டு கைது செய்யப்பட்டு சமூகக் கூடத்தில் உட்கார வைக்கப்பட்டதோடு முடிந்தது பிரச்னை.
பொதுவாக போராட்டங்கள் கொந்தளிப்பு எதுவானாலும் ஒரு கட்சியால் அல்லது அமைப்பால் மட்டுமே கட்டமைக்கப்படுகின்றன. அப்படி ஒரு போராட்டத்தைக் கட்டமைக்க இப்போது அதிமுகவின் எந்த அணியும் தயாராயில்லை.
ஆளும் அணியினர் மத்திய அரசை எதிர்த்தோ அல்லது மத்திய அரசின் வருமான வரித்துறை நடவடிக்கையை எதிர்த்தோ ஒரு துரும்பைக் கூட அசைக்க முடியாத நிலையில் உள்ளனர். அதனால் அவர்கள் அங்கு நடந்த சோதனை ஒரு தூய்மைப் படுத்தும் பணி என்று கூறி முடித்துக் கொண்டார்கள்.
தினகரன் அணியினர் ஏற்கனவே ஏராளமான சோதனைக்குள்ளாகி இருக்கும் நிலையில், அவர்கள் எங்கே போராட்டங்களை மாவட்ட அளவில் கட்டமைப்பது?
இந்த சோதனைகள் குறித்து கருத்துத் தெரிவிப்பவர்கள் இரண்டு ரகமாக இருக்கிறார்கள்.
வருமானத்திற்கு அதிகமான சொத்து குவிக்கப்பட்டிருக்கிறதா? கருப்புப்பணம் இருக்கிறதா? என்று கண்டறிய ரொம்ப நியாயமாக நடக்கும் சோதனைதான் இது என்று பாஜகவும் அதன் கூட்டணியான ஆளும் அதிமுக அணியும் கூறி வருகின்றன. இது ஒரு ரகம்.
அதிமுகவில் ஒரு செல்வாக்கு மிக்க தலைமை எதுவும் உருவாகி விடக் கூடாது என்பதற்காக மத்திய அரசின் உருக்குலைக்கும் முயற்சி.அரசியல் லாபத்திற்காக நடத்தப்படுவது என்பவர்கள் மற்றொரு ரகம்.
ஆனால் இந்த இரண்டு ரகத்தைச் சேர்ந்தவர்களும் தங்களின் கருத்தை ஆழப்படுத்த அல்லது வலியுறுத்த முயற்சிக்கும் போது மற்றொரு உண்மையை தங்களை அறியாமலே மறந்து அல்லது மறைத்து விடுகின்றனர். இது அரசியல் பழிவாங்கலுக்காக நடத்தப்படும் சோதனை என்று சொல்லக் கூடியவர்கள் தங்களை அறியாமல் அதிகாரத்தைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக சொத்து குவிப்பதைக் கண்டு கொள்ளாமல் கடந்து போய் விடும் ஆபத்து இருக்கிறது.
அதே போல, இதை எல்லாம் விடக் கூடாது சட்டத்தின் முன் அனைவரும் சமம். அது போயஸ் தோட்டமாகவே இருந்தால்தான் என்ன? சோதனை நடப்பது நல்லதுதானே? என்று சொல்பவர்கள், அதற்குப் பின்னால் பாஜகவின் மாநில உரிமை மீது மேலாதிக்கம் செலுத்தும் மனோபாவத்தைக் கண்டு கொள்ளாமல் கடந்து போகும் ஆபத்து இருக்கிறது.
சிக்கல்தான். விஷம் வேண்டாம் என்றால் நஞ்சைக் குடி என்கிறார்கள். நஞ்சு வேண்டாம் என்றால் விஷத்தைக் குடி என்கிறார்கள். இரண்டுமே உயிரைக் குடித்து விடும்.