சென்னை புத்தக கண்காட்சியில் 211 வது எண் கொண்ட அரங்காக அமைந்திருக்கிறது ஞானபானு . எப்போதும் உடனிருக்கும் மனிதர் எப்போது வருவார் என அதன் வாசல்கள் காத்திருக்கின்றன. பாவம் அவற்றிற்கு தெரியாது இனி அவர் வரப்போவதில்லை என்று.
ஞாநி அவர்களின் மறைவையடுத்து ஞானபானுவில் இருந்த அனைவரும் கேகே நகர் செல்ல, ஆல்ஸ்டன் மட்டும் தனி ஆளாக ஞானபானுவில் இருக்கிறார். ஞாநியின் மறைவு குறித்த அனைவரின் கேள்விகளுக்கும் தொடர்ந்து பதில் சொல்லிக் கொண்டிருக்கிறார். எப்படி இறந்தார்..? நேற்று பார்த்தோமே என்பதுதான் ஆல்ஸ்டன் அதிகம் எதிர்கொண்டவை.
ஞாநி – எழுத்தாளர், விமர்சகர், பத்திரிகையாளார் என்பதை தாண்டி மக்களோடு நெருங்கி இருத்தல் எப்படி என்பதை கற்ற மனிதராக இருந்திருக்கிறார். அதனை உணர வேண்டுமானால் ஒருமுறை ஞானுபானு சென்று வாருங்கள். பாரதியின் மீசையும் , கண்ணும் கொண்ட ஞாநியின் ஓவியம் உங்களை வரவேற்க காத்திருக்கிறது.
வாசகர்கள் வந்ததும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கேள்விகளை அவர்கள் ஞானபானுவில் எதிர்கொள்கிறார்கள். ஆம், வாசர்களுக்கு தினமும் ஒரு கேள்வி கேட்டு, சர்வே நடத்துகிறது ஞானுபானு. வாசகர்களும் மிக ஆர்வமாக அதில் பங்கேற்கின்றனர். சர்வே முடித்தால் புத்தகங்கள் ஒவ்வொன்றும் எடுத்து படிக்கும் முன் என்ன இருக்கிறது என்பதை உங்களுக்கு சொல்கிறது. புத்தகத்தின் அருகில், அதன் மையப்பொருள் குறித்த விளக்கம் இடம்பெற்றிருக்கிறது. புரட்டிப் பார்க்காமல் வாங்கத்தூண்டும் யுக்தி அது.
ஞாநியின் மறைவையடுத்து அவரது புகைப்படம் ஒன்று ஞானபானுவில் வைக்கப்பட்டுள்ளது. ஞானபானு வரும் அனைவரும் அதனருகே வந்து, வணங்கி புகைப்படம் எடுத்துச் செல்வதை பார்க்க முடிகிறது.
ஏன் புகைப்படம் எடுத்துக் கொள்கிறீர்கள் என கேட்க, ”வெவ்வேறு துறைகளில் ஆர்வம் கொண்ட இளைஞர்களை ஒருங்கிணைத்த ஞாநி அவர்கள் இன்றில்லை, இளைஞர்களோடு நெருங்கி பழகும் அவரின் இழப்பை எப்படி ஈடு செய்ய முடியும் , இருந்த போது வரை பலருக்கும் வழிகாட்டியாய் இருந்தவரிடம் , நானும் மாணவனாக இருந்திருக்கிறேன் என ஞாநியின் நினவுகளுக்கு செல்கிறார் ஆராய்ச்சி மாணவர் கிருஷ்ணா பிரபு.
இப்படி பலரும் ஞாநியையும் அவரது நினைவுகளையும் கொண்டவர்களாக ஞானபானுவை கடக்கின்றனர். ஞாநியின் புகைப்படத்தை நீண்ட நேரமாக பார்த்துக் கொண்டிருந்த முகம்மது ஹாசிமிடம் பேசினோம்.
“ ஞாநி ஒரு தீர்க்கதரிசி, அவர் சொல்வது எப்போதும் நடக்க கூடிய ஒன்றாகவே இருந்திருக்கிறது, ஒ பக்கங்கள் யூடியூப் சேனலில் ரஜினி அரசியலில் தோல்வியடைவார் என்பதை நான் கேட்டிருக்கிறேன், ஆனால் இப்போது அவர் இல்லையே என விம்முகிறார் அவர்.
ஞாநி இல்லாத ஞானபானு எப்போதும் போலே இருக்கிறது. ஆனால் ஞாநி இல்லை என்பதுதானே அதன் இழப்பு..