“அரசே வழிவிட்டாலும் தற்போது எங்களுக்கு வழியில்லை”- சலவைத் தொழிலாளியின் குமுறல்

“அரசே வழிவிட்டாலும் தற்போது எங்களுக்கு வழியில்லை”- சலவைத் தொழிலாளியின் குமுறல்
“அரசே வழிவிட்டாலும் தற்போது எங்களுக்கு வழியில்லை”- சலவைத் தொழிலாளியின் குமுறல்

கொரோனா வைரஸால் உலகமே ஸ்தம்பித்து போய் நிற்கிறது. பொருளாதாரத்தில் சிறந்து விளங்கும் அமெரிக்காவும் சீனாவுமே சரிவை சந்தித்துள்ளன. அதற்கு காரணம் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, அரசு கையில் எடுத்த தொழிற்சாலைகள் மூடல், மக்களை தனிமைப்படுத்தல், பணி நிறுத்தங்கள், ஆலைகள் மூடல், போக்குவரத்து நிறுத்தம் போன்றவையே.

இந்தியாவை பொருத்தவரை ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட 21 நாட்கள் ஊரடங்கு முடிவுக்கு வந்த நிலையில் வைரஸ் பரவல் கட்டுக்குள் வராததால் மேலும் 19 நாட்கள் ஊரடங்கை நீட்டித்து பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். இந்த ஊரடங்கு காலக்கட்டத்தில் அத்தியாவசிய தேவைகளை தவிர யாரும் வெளியே வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அப்படியே அத்தியாவசிய தேவைக்காக வெளியே வந்தாலும் கட்டாயம் மாஸ்க் அணிந்து கொண்டுதான் வரவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இல்லையென்றால் அதற்கும் அபராதம்தான்.

ஊரடங்கு உத்தரவால் பெரும்பாலான தொழில்கள் முடங்கியுள்ளன. இதில் பெரிதும் பாதிக்கப்படுவது அன்றாட கூலித்தொழிலாளிகளே. வருமானத்திற்கே வழியில்லாமல் தவித்து வருவதாக புலம்புகின்றனர் அவர்கள். ஏழைகளுக்கு அரிசி, 1000 ரூபாய் பணம் போன்றவை அரசு கொடுத்தாலும் அது எத்தனை நாட்களுக்கு பயன்படும் என கேள்வி எழுப்புகின்றனர் சாமானிய மக்கள். இத்தகைய சாமானியர்கள் செய்யும் வேலைகளில் ஒன்றுதான் சலவைத் தொழில். வீதிக்கு வீதி தள்ளுவண்டிகளில் இத்தொழிலைச் செய்பவா்கள் நாள் முழுவதும் நின்று கொண்டே இருப்பதால் முழங்கால் மூட்டுகள் தேய்வதுடன், கழுத்து எலும்புகளால் வலி ஏற்படுவதும் உண்டு.

இந்தக் கடினமான சூழலிலும் தொடா்ந்து இத்தொழிலில் ஈடுபட்டு வந்த சலவைத் தொழிலாளா்களின் வாழ்க்கை, ஊரடங்கு உத்தரவு காரணமாக பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இந்த தொழில் செய்பவர்களுக்கு அரசே அனுமதி கொடுத்தாலும் அவர்களின் வேலையை செய்ய முடியாத சூழ்நிலைதான் தற்போது நிலவி வருகிறது. அதற்கு காரணம் மக்கள் யாரும் தற்போது டிப்டாப்பாக உடை அணிந்து கொண்டு வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் இல்லையே. அப்புறம் எப்படி இவர்கள் வேலையை தொடங்க முடியும்? வருமானத்தை ஈட்ட முடியும்?

சலவைத் தொழிலாளிகளின் தற்போதைய நிலையை அறிய குரோம்பேட்டையில் உள்ள ஒரு சலவைத் தொழிலாளி பெண்மணியிடம் பேச்சு கொடுத்தோம். அப்போது பேசிய அவர் குமுறலை கொட்டினார். “நானும் எனது கணவரும் சலவைத் தொழில்தான் செய்து வருகிறோம். எங்களுக்கு இந்த தொழிலை விட்டால் வேறு தொழில் தெரியாது. இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள பெரும்பாலானோருக்கு வேறு தொழில் கிடையாது. எங்கள் 2 பேரில் யாராவது ஒருத்தர் படித்திருந்தால் கூட பரவாயில்லை. ஆனால் இரண்டு பேருமே படிக்காதவர்கள். ரேஷன் கடையில் அரிசி, கோதுமை, ஒருலிட்டர் பாமாயில், 1000 ரூபாய் பணம் கொடுத்தார்கள். அதை வைத்து எவ்வளவு நாளைக்கு சமாளிக்க முடியும். வீட்டில் எங்கள் பிள்ளைகளோடு சேர்த்து 4 பேர் உள்ளோம். தினமும் துணி சலவை செய்து கொடுத்தால்தான் எங்களுக்கு வருமானம். ஆனால் தற்போது ஊரடங்கால் எங்கள் தொழில் முற்றிலும் முடங்கியுள்ளது.

கையில் காசே இல்லை. கடனை வாங்கி காலத்தை தள்ளிக்கொண்டு இருக்கிறோம். தற்போது எங்கள் தொழிலை தொடர முடியாத சூழலும் நிலவுகிறது. காரணம், அனைவரும் வேலைக்கு சென்றால்தான் துணி சலவைக்கு கொடுப்பார்கள். பெரும்பாலானோர் வீட்டில் இருந்தே வேலை பார்க்கின்றனர். அல்லது வேலைக்கே போக முடியாத நிலையும் உள்ளது. இதனால் அவர்கள் சலவைக்கு துணி கொடுக்க மாட்டார்கள். எங்கள் வீட்டருகில் உள்ள கடைகளில் பொருட்களின் விலைகளில் எந்த ஏற்றமும் இல்லை. அது சற்று ஆறுதலாக உள்ளது.

எங்களது வீட்டின் அருகே எங்களுக்கு வாடிக்கையாளர்கள் கிடையாது. அதனால் பெரிதாக தெரிந்தவர்கள் என்று யாரும் கிடையாது. ஒவ்வொரு நாளையும் ஓட்டுவது சிரமமாகத்தான் உள்ளது. சில வாடிக்கையாளர்களிடம் கடன் வாங்கியுள்ளேன். நிலமை சரியானதும் அதை எப்படியாவது துணி தேய்த்து கொடுத்தோ அல்லது வருமானம் வருவதை வைத்தோ கழித்துவிடுவேன்” என முட்டிக்கொண்டு வந்த கண்ணீரை அடக்கிக்கொண்டு தெரிவித்தார் அந்த சலவைத் தொழிலாளி பெண்மணி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com