'ஆற்றல் மிக்கவர் ஓபிஎஸ்', 'இபிஎஸ் ஆணவத்தால் அழியும் அதிமுக' - புகழேந்தி 'டைம்லைன்' டாக்

'ஆற்றல் மிக்கவர் ஓபிஎஸ்', 'இபிஎஸ் ஆணவத்தால் அழியும் அதிமுக' - புகழேந்தி 'டைம்லைன்' டாக்
'ஆற்றல் மிக்கவர் ஓபிஎஸ்', 'இபிஎஸ் ஆணவத்தால் அழியும் அதிமுக' - புகழேந்தி 'டைம்லைன்' டாக்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தபோது கர்நாடக மாநில அதிமுக செயலாளராக நியமிக்கப்பட்டவர் வா.புகழேந்தி. ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்றபோது பெங்களூரில் அவருக்கு பக்கபலமாக இருந்து செயல்பட்டவர். அதுமட்டுமில்லாமல் சசிகலாவின் நன்மதிப்பை பெற்றவர்.

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு சசிகலா மற்றும் தினகரனுக்கு பக்கபலமாக இருந்த புகழேந்தி அதிமுகவை கடுமையாக விமர்சித்தார். ஆனால் காலம் கடந்து செல்ல தினக்கரனை விட்டு பிரிந்த புகழேந்தி, அதிமுகவில் செய்தி தொடர்பாளர் ஆனார். ஆனாலும் பல நேரங்களில் ஓபிஎஸ்க்கு ஆதரவாக செயல்பட்டார். இதனிடையே அதிமுகவில் பல முரண்பாடுகள் ஏற்பட்ட போதும் சசிகலாவுக்கு ஆதரவாக ஓபிஎஸ்சும், எதிராக இபிஎஸ் இருப்பதாக கூறப்பட்டது. இதனால் கூட புகழேந்தி ஓபிஎஸ்க்கு ஆதரவாளராக இருந்திருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.

இதனிடையே அண்மையில் நடந்த சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு எதிர்க்கட்சி தலைவர் யார் என்ற கேள்வி எழுந்தபோது பேசிய புகழேந்தி, “ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது பல நேரங்களில் அவரால் சட்டமன்றத்திற்கு வரமுடியாத சூழல் நிலவியபோது, அவரின் ஆலோசனைப்படி சட்டமன்றத்தை ஓபிஎஸ் நடத்தி சென்றிருக்கிறார். மிகவும் அமைதியானவர். அனுபவம் மிக்கவர். ஆற்றல் மிக்கவர். இது இபிஎஸ்க்கும் நன்றாகவே தெரியும். எனவே இபிஎஸ் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் சேர்ந்து ஓபிஎஸ்சை எதிர்கட்சி தலைவராக தேர்வு செய்ய வாய்ப்பு இருப்பதாக நான் நினைக்கிறேன். அதே நடைபெற வேண்டும் என்றும் நான் ஆசைப்படுகிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.

இதனிடையேதான், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வத்தை நாங்கள் ஒரு பொருட்டாக மதிப்பது இல்லை எனவும் பா.ம.க. மட்டும் கூட்டணியில் இல்லாமல் இருந்தால் அதிமுக 20 இடங்களில் கூட ஜெயித்திருக்காது எனவும் அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி விமர்சித்திருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய புகழேந்தி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை அன்புமணி ராமதாஸ் மரியாதையின்றி பேசியதாகவும் அதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் கூறினார். பா.ம.க. செல்வாக்கு மிகுந்ததாக சொல்லப்படும் பெருவாரியான தொகுதிகளில் திமுக தான் வெற்றி பெற்றிருப்பதாகவும் புகழேந்தி பட்டியலிட்டார். இதனால் அதிமுகவிற்கும் பாமகவிற்கும் இடையே விரிசல் போக்கு நிலவுவதாக பார்க்கப்பட்ட நிலையில் அதிமுகவில் இருந்து புகழேந்தி திடீரென நீக்கம் செய்யப்படுவதாக அக்கட்சியின் தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து ஓபிஎஸ், இபிஎஸ் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கழகத்தின் கொள்கை, குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாகலும் கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழக கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்டதாலும் புகழேந்தி அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் புதிய தலைமுறைக்கு பேட்டியளித்த புகழேந்தி, “ஒரு அகம்பாவம், ஆணவப்போக்கு, திமிர் அனைத்தையும் இடி அமீன் மாதிரி ஆட்களிடம் பார்த்துள்ளோம். இதை தொடர்ந்து என் அன்புக்குரிய பழைய நண்பர் எடப்பாடி பழனிசாமியிடம் பார்க்கிறேன். ஆகவே இந்த கட்சியை அவர் கையில் வைத்து அனைவரையும் அடிமையாக வழிநடத்த நினைக்கிறார். ஜெயலலிதா வளர்த்த இவ்வளவு பெரிய கட்சியை அசிங்கப்படுத்தும் விதமாக பேசியதை கண்டித்து எனது கருத்துக்களை சொன்னேன்.

இந்த கட்சியின் அழிவு எடப்பாடி பழனிசாமியால் ஆரம்பமாகிவிட்டது. அவர் அரசியல் ரீதியாக நம்மையும் மோதலாம் என்று அழைக்கிறார். நான் தயாராக இருக்கிறேன். சசிகலா காலில் விழுந்ததுபோல் நேரடியாக சென்று பழனிசாமி அன்புமணி காலில் விழுந்து விடலாம். அதில் எந்த மாற்றமும் இல்லை. இடி அமீனுக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் வித்தியாசம் இல்லை. நான் சந்திக்க தயாராக இருக்கிறேன். நான் ஊடகங்களை சந்தித்து பல விஷயங்களை வெளியே கொண்டு வருவேன். பார்ப்போம் பழனிசாமி. உங்களுக்கும் எனக்கும் என்ன என்பதை பார்ப்போம்” எனத் தெரிவித்தார்.

புகழேந்தி நீக்கம் சொல்லும் செய்தி என்ன?

பாமகவை விமர்சித்ததற்காக புகழேந்தி நீக்கப்பட்டுள்ளார் என்றால் அன்புமணி ராமதாஸின் விமர்சனத்திற்கு அதிமுக தலைமையில் உள்ள தலைவர்கள் ஏன் பதில் சொல்லவில்லை என்ற கேள்வி எழுகிறது. அதேபோல், ஓபிஎஸ்க்கு ஆதரவாக தொடர்ந்து கருத்து தெரிவித்து வருவதாக அவரை ஓரம் கட்ட நினைத்து இபிஎஸ் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளாரா என்ற கேள்வியும் எழுகிறது. இபிஎஸ் கட்சிக்குள் தனக்கு எதிரான அனைத்து சக்திகளையும் வெளியேற்றி வெற்றிகரமாக ஒற்றைத் தலைமையை நோக்கி பயணப்பட்டு வருவதாகவே பார்க்கப்படுகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com