11-வது நாளாக முடங்கிய நாடாளுமன்றம்: என்னதான் பிரச்னை? எம்.பி ஜோதிமணி சொல்வது என்ன?

11-வது நாளாக முடங்கிய நாடாளுமன்றம்: என்னதான் பிரச்னை? எம்.பி ஜோதிமணி சொல்வது என்ன?

11-வது நாளாக முடங்கிய நாடாளுமன்றம்: என்னதான் பிரச்னை? எம்.பி ஜோதிமணி சொல்வது என்ன?
Published on

ஜூலை 19-ஆம் தேதி தொடங்கிய மழைகாலக் கூட்டத்தொடர் தொடர்ந்து முடங்கி வருகிறது. பெகாசஸ் உளவு விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் 11-வது நாளாக நாடாளுமன்றம் முடங்கியது. விரிவான விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் ஒரே குரலில் ஒலித்து வருகின்றனர்.

பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அவையை முடக்கி வருகின்றன. இந்த சூழலில் டெல்லியில் ராகுல்காந்தி முன்னெடுப்பில் 15 எதிர்க்கட்சிகள் ஆலோசனை நடத்தின. திமுக, திரிணாமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா, கம்யூனிஸ்ட், சமாஜ்வாதி , ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளின் எம்பிக்கள் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி எதிர்க்கட்சிகள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும், ஒற்றுமையாக இருந்தால் நமது குரலை அரசால் ஒடுக்க முடியாது என்று கூறினார். கூட்டத்தில் ஆம் ஆத்மி மற்றும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி கலந்து கொள்ளவில்லை. விரைவில் அவர்களும் தங்களுடன் இணைவார்கள் என்கிறது காங்கிரஸ். அடுத்த ஆண்டு பஞ்சாப், உத்தரப் பிரதேச மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் மாநிலங்களில் நடைபெற உள்ள நிலையில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் நடவடிக்கைகளை காங்கிரஸ் தீவிரப்படுத்தி வருகிறது.

கூட்டத்தில் பங்கேற்ற பிறகு பேசிய திமுக எம்.பி. கனிமொழி, எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு மத்தியிலும் மசோதாக்களுக்கு ஒப்புதல் பெற முடியும் என்ற மனநிலையுடன் மத்திய அரசு செயல்படுவதாக குற்றம்சாட்டினார். எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு, பெட்ரோல்-டீசல் விலை உயர்வுக்கு எதிராக ராகுல்காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்றம் நோக்கி சைக்கிள் பேரணி சென்றனர். பேரணியில், மதுரை எம்பி சு.வெங்கடேசன், காங்கிரஸ் எம்பிக்கள் மாணிக்கம் தாகூர், கார்த்தி சிதம்பரம், விஜய் வசந்த் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

இதனிடையே நாடாளுமன்றத்தை முடக்கிவரும் எதிர்க்கட்சிகளை எதிர்கொள்வது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் பாஜக எம்பிக்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, தினமும் முழக்கங்களை எழுப்பி அவையை முடக்குவது நாடாளுமன்றத்துக்கு எதிர்க்கட்சிகள் செய்யும் அவமரியாதை என்று விமர்சித்தார்.

இதைத்தொடர்ந்து 11 மணிக்கு மக்களவை தொடங்கிய உடன் எதிர்க்கட்சி எம்பிக்கள் அவை நடுவே வந்து பெகாசஸ் விவகாரத்தை எழுப்பி முழக்கமிட்டனர். மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மாநிலங்களவையும், அதனைத்தொடர்ந்து மக்களவையும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. பெகாசஸ் விவகாரத்தில் விவாதம் வேண்டும் என்ற நிலைப்பாட்டில் எதிர்க்கட்சிகள் பிடிவாதமாக இருக்கின்றன. குறிப்பாக எதிர்க்கட்சி எம்பிக்கள் கூட்டத்துக்கு பிறகு, ஒற்றுமையுடன் அரசை எதிர்க்க தொடங்கியுள்ளனர்.

நாடாளுமன்றம் தொடர்ந்து 11-வது நாளாக முடங்கி வரும்நிலையில் அதற்கு தீர்வுதான் என்ன? என்னதான் பிரச்னை என்பது குறித்து காங்கிரஸ் கட்சியின் எம்.பி ஜோதிமணி புதியதலைமுறையில் பேசினார். அப்போது பேசிய அவர், “ஒரு நாட்டின் பிரதமர் விவசாயிகளை ஒழிக்கக்கூடிய சட்டங்களை கொண்டு வருகிறார். சாதாரண ஏழை, எளிய மக்கள் பெட்ரோல் போட முடியாத அளவிற்கு விலை உயர்வு இருக்கிறது.

கொரோனா இரண்டாவது அலைக்கு நாட்டை தயார்படுத்தாமல் ஏராளமானோர் ஆக்சிஜனுக்கு அலைந்து உயிரிழந்த சடலங்கள் ஆற்றில் மிதக்கிறது. முதல் அலையில் சொந்த நாட்டுக்காரர்கள் அகதிபோல நடந்தே சென்று அதில் சிலர் இறந்தே போனார்கள். அன்றெல்லாம் பார்த்து வருத்தப்படாத பிரதமர், இன்று வருத்தப்படுகிறார் என்பதை நல்ல விஷயமாக பார்க்கிறேன். மனசுல ஏதோ கொஞ்சம் ஈவு, இரக்கம் இருக்குபோல என்று நினைக்க தோன்றுகிறது. அந்த அளவில்தான் இன்று ஆட்சி இருக்கிறது.

ஒரு நாடாளுமன்றம் எதற்கு இருக்கிறது. விவாதிப்பதற்குத்தான் நாடாளுமன்றம். அதற்காகத்தான் மக்கள் எங்களுக்கு ஓட்டு போட்டு அனுப்பியுள்ளார்கள். மக்கள் வரிப்பணத்தில் தினமும் ரூ.4 கோடி செலவு செய்து நாடாளுமன்றம் நடக்கிறது. முக்கியமான பிரச்னைகளை நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும். நான் விவாதிக்கவே மாட்டேன் என்றால் அது எந்தமாதிரியான ஜனநாயம்.

நேரு காலத்தில் இருந்து மன்மோகன்சிங் காலம் வரை எத்தனையோ பிரதமர்கள் இருந்திருக்கிறார்கள். வாஜ்பாய் உட்பட அனைத்து பிரதமர்களும் நாடாளுமன்றத்திற்கு வந்து அமர்ந்து விவாதங்களை கேட்டு, அந்த விவாதங்களுக்கு பதில் சொல்லும் வழக்கம் இருக்கிறது. அதுதான் உண்மையான நாடாளுமன்ற ஜனநாயகம்.

ஆனால் பிரதமர் மோடி பதவியேற்ற 7 ஆண்டுகளில் ஒருநாளும் மசோதாக்கள் குறித்து விவாதித்து, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவதை கேட்டு, அவசியம் ஏற்பட்டால் பதில் சொல்வது என எதுவும் கிடையவே கிடையாது. பிரதமர் நரேந்திர மோடி மீடியாவுக்கு மட்டும் பயந்து பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தாமல் தவிர்த்து வருகிறார் என யாரும் நினைக்க வேண்டாம். நாடாளுமன்றத்திற்கும் வந்து உட்காந்து கருத்துகளை கேட்டு அவர் பதில் சொன்னது இல்லை. வாரத்தில் ஒருநாள் மக்களவையிலும் மாநிலங்களவையிலும் ஒரு மணிநேரம் இருக்க வேண்டும் என்பது விதி. ஆனால் அவர் அதைக்கூட பலநேரங்களில் பின்பற்றுவது இல்லை. இதுதான் பிரதமர் மோடி நாடாளுமன்றத்தை மதிக்கிற முறை.

அரசுக்கு பதில் சொல்லும் வாய்ப்பை கொடுங்கள் என பிரதமர் கேட்கிறார். ஆனால் விவாதம் நடந்தால்தானே பதில் சொல்ல முடியும். விவாதமே நடக்காமல் அரசு என்ன பதில் சொல்லும். நடைமுறைப்படி ஆளுங்கட்சி உறுப்பினர்கள் 5 மணிநேரம் பேசுவார்கள். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 35 நிமிடங்கள் பேசுவோம். அதேநேரத்தில் விவாதியுங்கள். நாங்கள் கேள்வி கேட்கிறோம். நீங்கள் பதில் சொல்லுங்கள். விவாதிப்பதில் அரசுக்கு என்ன பிரச்னை?

இஸ்ரேல் நாட்டிலிருந்து பெகாசஸ் என்ற உளவு ஆயுதத்தை பயன்படுத்தி முக்கியமான தூண்கள் எனப்படுகின்ற ஊடகம், உச்சநீதிமன்றம், தேர்தல் ஆணையம், அரசியல் கட்சி தலைவர்கள் ஆகியோரின் செல்போன்கள் ஒட்டுக்கேட்கப்பட்டுள்ளது. தேர்தல் கமிஷனர் லவாசா, மக்களின் சார்பாக குரல் கொடுத்த ஊடகவியலாளர்கள், மம்தா பானர்ஜியின் உறவினர், பிரசாந்த் கிஷோர், ராகுல்காந்தி, கொரோனா தடுப்பூசிக்கு மருந்து கண்டுபிடிக்கும் வைராலஜிஸ்ட், உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகாய் ஆகியோர் போன்கள் ஒட்டுக்கேட்கப்பட்டுள்ளன.

ரஞ்சன் கோகாய் மீது பாலியல் குற்றசாட்டு இருந்தது. குற்றச்சாட்டை சுமத்திய பெண் மற்றும் அவரின் குடும்பத்தினர் அனைவரது செல்போனும் ஒட்டுக்கேட்கப்பட்டுள்ளது. இதனிடையேதான் ரஞ்சன் கோகாய் பாஜகவுக்கு சாதகமான சில வழக்குகளில் சாதகமான தீர்ப்புகளை வழங்கியுள்ளார். பொதுவாக ஸ்பைவேரை தீவிரவாதிகளுக்கு எதிராகத்தான் பயன்படுத்துவார்கள். ஆனால் இந்த பட்டியலில் ஒரு தீவிரவாதி பெயர் கூட கிடையாது. ஸ்மிருதிராணியின் செல்போனை கூட உளவு பார்த்துள்ளனர்.

அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை என அமைச்சர் விளக்கம் கொடுக்கிறார். ஆனால் இது விளக்கம் கொடுக்கக்கூடிய பிரச்னையா? இது தேசத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக்கூடிய விஷயம். இது தேசதுரோக குற்றம். இந்த குற்றத்தை யார் செய்தது? இஸ்ரேல் கம்பெனி அரசாங்கத்திற்கு மட்டுதான் இந்த சாஃப்ட்வேரை தருவார்கள். வெளியில் இருந்து யாரும் வாங்க முடியாது.

பிரதமர் அனுமதி இல்லாமல் எப்படி வாங்க முடியும். அமித்ஷா அதை பயன்படுத்தியிருக்க வேண்டும். அப்படியும் இல்லாமல் நமக்கு எதிராக இருக்கும் நாடுகள் பயன்படுத்திவிட்டார்களா? அதை விசாரியுங்கள் என கேட்கிறோம். இந்தக் குற்றம் இந்தியா மட்டுமில்லாமல் பல நாடுகளில் நடந்துள்ளது. பல நாடுகள் விசாரணைக்கு உத்தவிட்டுள்ள நிலையில் இந்தியா மட்டும் தயங்குவது ஏன்?

மூன்று விதமாக நாங்கள் விவாதத்தை கேட்கிறோம். ஒன்று நாடாளுமன்றத்தில் விவாதியுங்கள். இரண்டு நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்துங்கள். அதுவும் இல்லையென்றால் உச்சநீதிமன்ற மேற்பாற்வையில் ஒரு விசாரணை குழுவை அமையுங்கள் என கேட்கிறோம். இது எதுவுமே செய்ய மாட்டோம் என்கிறது பாஜக அரசு. நாடாளுமன்றத்தை பிரதமர் மோடியும் அவர்களின் உறுப்பினர்களும்தான் முடக்குகின்றனர். நாங்கள் விவாதத்தைதான் கேட்கிறோம். நாங்கள் நாடாளுமன்றத்தை முடக்கவில்லை” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com