‘ராகுல் Vs மோடி’ என்பது ‘மம்தா Vs மோடி’ ஆக மாறுகிறதா? - தீதியின் டெல்லி பயணம் சொல்வதென்ன?

‘ராகுல் Vs மோடி’ என்பது ‘மம்தா Vs மோடி’ ஆக மாறுகிறதா? - தீதியின் டெல்லி பயணம் சொல்வதென்ன?
‘ராகுல் Vs மோடி’ என்பது ‘மம்தா Vs மோடி’ ஆக மாறுகிறதா? - தீதியின் டெல்லி பயணம் சொல்வதென்ன?

எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியாக மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி டெல்லியில் முகாமிட்டுள்ளார். பாஜகவுக்கு எதிராக வலுவான கூட்டணியை அமைக்க மம்தா பானர்ஜி, சரத்பவார் உள்ளிட்டோர் திட்டமிட்டுள்ளனர். அதன்படி எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியாக மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி டெல்லியில் முகாமிட்டுள்ளார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார் மம்தா பானர்ஜி.

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த மம்தா பானர்ஜி “சோனியா காந்தி எனக்கு தேனீர் அருந்த அழைப்பு விடுத்தார். அங்கு ராகுல்காந்தியும் இருந்தார். நாங்கள் பொதுவாக அரசியல் நிலைமை, பெகாசஸ், கொரோனா நிலைமை குறித்து விவாதித்தோம். எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை குறித்தும் விவாதித்தோம். இது ஒரு நல்ல சந்திப்பு. எதிர்காலத்தில் நேர்மறையான முடிவு வர வேண்டும் என்று நான் நினைக்கிறேன். பாஜகவைத் தோற்கடிக்க அனைவரும் ஒன்றிணைவது அவசியம். தனியாக, நான் ஒன்றுமில்லை. எல்லோரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியிருக்கும். நான் ஒரு தலைவர் அல்ல, நான் ஒரு சாதாரண தொண்டர். அடிமட்டத்திலிருந்து வந்தவர்தான்” என்றார்.

இதனிடையே, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கமல்நாத், ஆனந்த் ஷர்மா அபிஷேக் மனு சிங்கி உள்ளிட்டோரை மம்தா பானர்ஜி நேற்று சந்தித்தார். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட தலைவர்களையும் சந்திக்க மம்தா திட்டமிட்டுள்ளார். காங்கிரஸ் கட்சி தேசிய அளவில் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கிறது. அதனால் சோனியாகாந்தியுடன் மம்தா நடத்திய இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலுக்கு கிட்டதட்ட 3 வருடங்கள் இருந்தாலும் இப்போதிலிருந்தே முயற்சி செய்தால்தான் முக்கியமான கட்சிகளை ஒன்றிணைக்க முடியும் என்ற கருத்து நிலவி வருகிறது. அதனால்தான் இந்த முயற்சியை மம்தா பானர்ஜி மேற்கொண்டுள்ளார்.

சோனியா காந்தியுடன் மம்தா பானர்ஜிக்கு நல்ல இணக்கம் உள்ளது. ஆனால் ராகுல்காந்தியுடன் இணைந்து செயலாற்ற முடியுமா? எதிர்க்கட்சியுடன் இருக்கும் சிவசேனா போன்ற கட்சி எதிரணியுடனேயே இருக்குமா? அல்லது தனித்து களம் காண விரும்புமா? அதேபோன்று சரத்பவார் போன்றவர்கள் எந்த அளவுக்கு உதவுவார்கள்? பிஜூ ஜனதா தளம் போன்ற கட்சிகள் எதிரணி கட்சியில் இணையுமா? போன்ற பல்வேறு கேள்விகள் உள்ளன. இதற்கெல்லாம் விடை தேடும் முயற்சியில்தான் மம்தா பானர்ஜி இன்று முதல் அடியை எடுத்து வைத்துள்ளார்.

மம்தாவின் முயற்சி குறித்து மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன் கூறுகையில், “மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு எதிராக மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சித்தார். ஆனால் மம்தா பானர்ஜியே பிரதமரை சந்தித்து பேசியிருக்கிறார். மம்தாவின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. 2024 தேர்தல் ராகுல் Vs மோடி என்பதற்கு வாய்ப்பு குறைவு என நினைக்கிறேன். ஏனென்றால் ராகுல்காந்தி தலைவர் என்ற பொறுப்பை ஏற்றுக்கொள்ள முன்வரவில்லை. அதனால் வெற்றிடம் போன்று தோன்றுகிறது. 2019ஆம் ஆண்டு தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணி தலைவர்கள் அனைவரும் பிரதமர் ஆக வேண்டும் என நினைத்தார்கள். மு.க.ஸ்டாலின், பினராயி விஜயனை தவிர, மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், சரத்பவார் உள்ளிட்ட தலைவர் பிரதமர் பதவிக்கு ஆசைப்பட்டனர். அந்தமாதிரி நிலை இப்போது கிடையாது. காங்கிரஸ் தலைமையை ராகுல்காந்தி அடையாளம் காட்டாவிட்டால் அது காங்கிரஸ் கட்சிக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் பின்னடைவாகவே பார்க்கப்படும்” என்றார்.

இந்த விவகாரம் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் துக்ளக் ரமேஷ் கூறுகையில், “எனக்கு இந்த எதிர்க்கட்சி கூட்டணி நீடிக்குமா என்பதிலேயே மிகுந்த சந்தேகம் இருக்கிறது. உத்தரபிரதேச தேர்தலில் அது தெரிந்துவிடும். உத்தர பிரதேசத்தில் மாயாவதி பெரும்பாலும் தனித்து இயங்கதான் ஆசைப்படுவார். அதேபோல் சரத்பவார் என்ன நோக்கத்தோடு இந்த முயற்சியை முதலில் அவர் முன்னெடுத்தார் என்பது குறித்தும் கேள்வி இருக்கிறது. அதேபோல் மேற்குவங்கத்தில் காங்கிரசுடனும் இடதுசாரி கட்சிகளுடனும் இருக்கும் பிரச்னை மம்தாவிற்கு முழுமையாக தீர்ந்துவிட்டதா என்று சொல்லமுடியாது. எதிர்க்கட்சி ஒற்றுமை என்பது அவ்வபோது தலைதூக்கி அவ்வபோது முடிவதாகத்தான் இருக்கிறது. பாஜகவிற்கு இதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்ற வியூகம் அமித்ஷாவிற்கு இருக்கிறது.

தேசிய அளவில் பல மாநிலங்களில் பரவியிருக்கும் காங்கிரஸ் கட்சி குறுகிய மாநிலத்தலைவரின் தலைமையை ஏற்குமா என்பது கேள்விக்குறி. இன்று பலகீனமாக இருப்பதால் மம்தாவின் தலைமையை ஏற்கும் என்பது எனக்கு தோன்றவில்லை. ஆகவே எதிர்க்கட்சிகளின் கூட்டணி எவ்வளவு நாட்கள் தாக்குபிடிக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com