சாதி அடிப்படையில் பாரபட்சம் காட்டுவதாக புகார்: சென்னை ஐஐடி-யில் என்னதான் நடக்கிறது?
சென்னை ஐஐடி கல்லூரியில் படிக்க வேண்டும், பணி புரிய வேண்டுமென்பது பலரின் கனவாக இருக்கிறது. இப்படிப் பலரது கனவுக் கோட்டையாக இருக்கும் சென்னை ஐஐடியில் சமீப காலமாக அரங்கேறி வரும் சில சம்பவங்கள் அவிழ்க்க முடியாத மர்ம முடிச்சுகளாக உள்ளதாகவே கூறப்படுகிறது.
அந்த வகையில், சென்னை ஐஐடியில் சாதியப் பாகுபாடு இருப்பதாகவும் எனவே கல்லூரியில் இருந்து விலகுவதாகவும் அங்கு உதவிப் பேராசிரியராகப் பணி புரியும் விபின் புடியதாத் வீட்டில் என்பவர் ஐஐடி நிர்வாகத்திற்கு மின்னஞ்சல் அனுப்பியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஐஐடியில் பணியாற்றுவோர் எதிர்கொள்ளும் சாதியப் பாகுபாடு குறித்து ஆராய, பட்டியலின மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் மனநல நிபுணர்கள் கொண்ட குழுவை அமைக்க வேண்டும் என அவர் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
2019-ஆம் ஆண்டு மார்ச் மாதம் பணியில் சேர்ந்தது முதல் சாதிய ரீதியிலான பாகுபாட்டை எதிர்கொண்டு வருவதாகவும் அவர் மின்னஞ்சலில் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து சென்னை ஐஐடி நிர்வாகத்திடம் கேட்டபோது, உதவிப் பேராசிரியர் விபின் புடியதாத் வீட்டிலின் மின்னஞ்சல் குறித்து கருத்துத் தெரிவிக்க முடியாது என பதில் அளித்துள்ளது. கல்லூரி மாணவரோ, பேராசிரியரோ முறைப்படி புகார் அளித்தால் அதுகுறித்து விசாரிக்கப்படும் என ஐஐடி நிர்வாகம் கூறியுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு சென்னை ஐ.ஐ.டியில் கேரளாவைச் சேர்ந்த இஸ்லாமிய மாணவி ஃபாத்திமா தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது நினைவுக்கூரத்தக்கது.
சென்னை ஐஐடி-யில் தொடரும் பிரச்னைகள்...
சென்னை ஐஐடி.யில் பல்வேறு கால கட்டங்களில் சாதி மற்றும் மத ரீதியிலான பிரச்னைகள் தொடர்ந்து நிகழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. அது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
பொதுவாகவே ஐஐடி-யில் சேர்ந்து படிப்பதற்கு அதிக அளவிலான மாணவர்கள் ஆர்வம் காட்டுவார்கள். அவர்களில் ஒருவர் தான் கேரளாவை சேர்ந்த ஃபாத்திமா லத்தீஃப். பல கனவுகளோடு ஐஐடியில் நுழைந்த அம்மாணவி, மத ரீதியான பிரச்னையால் 2019ஆம் ஆண்டு தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
ஐஐடி வளாகத்தில் உள்ள பொது உணவுக்கூடத்தில் சைவர்கள், அசைவர்களுக்கு என இரு வழிகளை உருவாக்கி, புதிய சர்ச்சைக்கு வித்திட்டது அந்நிர்வாகம். ஆனால், மாணவர்கள் சிரமமின்றி செல்வதற்காகவே தனி வழிகள் உருவாக்கப்பட்டதாகவும், சாதி வேறுபாட்டிற்காக இல்லை எனவும், விடுதி விவகாரங்கள் செயலாளர் விளக்கம் கொடுத்தார்.
2018 ஆம் ஆண்டு மத்திய அமைச்சர் கலந்து கொண்ட ஒரு நிகழ்வில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை பாடாமல் புறக்கணித்ததும் மற்றுமொரு பெரிய சர்ச்சையாக வெடித்தது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை பாடாமல், மகா கணபதிம் பஜே என்ற சமஸ்கிருத பாடலை பாடினர். இதற்கு தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் கண்டனத்தை பதிவு செய்த நிலையில், மாணவர்களின் விருப்பப்படியே இப்பாடல் பாடப்பட்டதாக ஐஐடி நிர்வாகம் தெரிவித்தது.
நீண்ட வருடங்களாக செயல்பட்டு வந்த அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டம் என்ற மாணவர் அமைப்பின் அங்கீகாரத்தை, 2015-ஆம் ஆண்டு ரத்து செய்தது, சென்னை ஐஐடி. பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்றதை தொடர்ந்து, மீண்டும் அங்கீகாரம் வழங்கப்படுவதாக ஐஐடி நிர்வாகம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
சென்னை ஐஐடி.யில் பணிபுரியும் பேராசிரியர்களில் பட்டியலினத்தவர் மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவை சேர்ந்தவர்கள் 13.1 விழுக்காட்டினர் மட்டுமே என்பது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது. 86.9 விழுக்காட்டினரும் பொதுப்பிரிவை சேர்ந்தவர்கள்.
இதற்கு முன்பும் கூட, சென்னை ஐஐடி-யில் சாதி மற்றும் மத ரீதியிலான பிரச்னைகள் நிகழ்ந்துள்ளதாக மாணவர்கள் தரப்பில் இருந்து கூறப்படுகிறது.
இது தொடர்பாக கல்வியாளர் காயத்ரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிந்தன் ஆகியோர் தங்களது பார்வையையும், கருத்துகளையும் 'நியூஸ் 360' நிகழ்ச்சியில் வெளிப்படுத்தினர்.