சட்டையை கழட்டி சுழற்றிய கங்குலியை மறக்க முடியுமா..!

சட்டையை கழட்டி சுழற்றிய கங்குலியை மறக்க முடியுமா..!

சட்டையை கழட்டி சுழற்றிய கங்குலியை மறக்க முடியுமா..!
Published on

கடந்த 2002ல் லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஆக்ரோஷமாக சட்டையை கழட்டி சுற்றிய கங்குலியை இன்றும் இந்திய ரசிகர்களால் மறக்க முடியாது.

இந்திய அணி பல்வேறு விதமான வீரர்களையும், கேப்டன்களையும் பார்த்துள்ளது. ஒவ்வொரு வீரரும் ஒவ்வொரு விதமாக இருப்பார்கள். அதேபோல தான் கேப்டன்களும். இந்திய அணியின் கேப்டன்களில் பெரும்பாலானோர் மென்மையான போக்கை கொண்டவர்களாக தான் இருந்தார்கள். அந்த போக்கை முதலில் உடைத்தவர் சவுரவ் கங்குலி. தன்னுடைய ஆக்ரோஷமான பண்புக்காகவே பல ரசிகர்களால் அவர் ஈர்க்கப்பட்டார். 

கங்குலியின் இந்த ஆக்ரோஷமான குணம் லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் தான் உச்சத்தை தொட்டது. இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு ஆட்டத்தில் வெற்றிபெற்ற போது கங்குலி தனது சட்டையை கழட்டி வெறும் உடலோடு கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினார்.

இதற்கும் ஒரு குட்டி முன் கதை உண்டு. 2002ம் ஆண்டு இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டது. அப்பொழுது இரு அணிகளுக்கு இடையே 6 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்றது. முதல் போட்டியில் இந்திய அணியும், இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றன. 3, 4 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று 3-1 என்ற முன்னிலை வகித்தது. இதனால், இந்திய அணி தொடரை எளிதில் வென்றுவிடும் என்று எதிர்ப்பு இருந்தது. ஆனால், அடுத்த இரண்டு போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது. 6வது ஒருநாள் போட்டி மிகவும் விறுவிறுப்பாக சென்று இறுதியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இந்தப் போட்டியில் ஃபிலிண்டாப் 3 விக்கெட்டுகளையும் ஒரு ரன் அவுட்டை செய்து வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். இங்கிலாந்து அணி வெற்றி பெற்ற போது ஃபிலிண்டாப் தனது சட்டையை கழட்டி மைதானத்தில் சுற்றினார். 

இதனையடுத்து, அதே ஆண்டில் கங்குலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு நாட்வெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்தியா - இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இந்த தொடர் நடைபெற்றது. இதில் இந்தியா இங்கிலாந்து அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. இறுதிப்போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 325 ரன்கள் எடுத்தது. 326 ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு சேவாக், கங்குலி நல்ல அடித்தளம் கொடுத்தார்கள். அதிரடியாக விளையாடிய கங்குலி 43 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, சேவாக்கும் 45 ரன்னில் நடையைக் கட்டினார். கங்குலி, சேவாக் ஆட்டமிழந்த உடனே அடுத்த மூன்று விக்கெட்டுகள் வீழ்ந்தன. இதனால், 146 ரன்களுக்கு 5 விக்கெட் வீழ்ந்து இந்திய அணி தடுமாறியது. இதனால், இந்திய அணி வெற்றி பெறுமா என்ற அச்சம் இருந்தது. இக்கட்டான அந்த நேரத்தில் யுவராஜ் சிங்கும், முகமது கைஃபும் இணைந்து இந்திய அணிக்கு வெற்றிக்கு இட்டுச் சென்றனர். இந்தப் போட்டியும் மிகவும் பரபரப்பாக சென்றது. 267 ரன்கள் எடுத்திருந்த போது யுவராஜ் 69 ரன்னில் ஆட்டமிழந்த போது, பரபரப்பு உச்சத்துக்கு சென்றது. அவரை தொடர்ந்து ஹர்பஜன் 15, கும்ளே 0 ரன்னில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஆனால், கைஃப் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து இந்திய அணியை வெற்றி பெற செய்தார். 49.3 ஓவரில் 3 பந்துகள் மட்டுமே மீதமிருந்த நிலையில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. 

இந்தப் போட்டியை கேலரியில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த கங்குலி, இந்திய அணி வெற்றி பெற்றதும் தனது சட்டையை கழற்றி சுழற்றினார். பிளிண்டாபிற்கு பதிலடி கொடுக்கும் வகையிலே அவர் இவ்வாறு செய்தார். கங்குலி என்றாலே பலருக்கும் அந்த காட்சிகள் தான் நினைவுக்கு வரும். கங்குலியின் வாழ்வில் மறக்க முடியாத தருணம். 

தன்னுடைய ஆக்ரோஷம் குறித்து அவரே கூறுகையில், “ஆக்ரோஷம் என்பது என்னுள் கலந்த ஒன்று. என்னுடைய போட்டியில் இருந்து எப்பொழுதும் அதனை பிரிக்க மாட்டேன்” என்றார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com