தொண்டை வலி, தலைவலி, கண்ணீர்... அதிகம் தென்படும் 'சீசன்' காய்ச்சலும் எளிய தீர்வும்!
குளிர் குறைந்து கொஞ்சம் கொஞ்சமாக வெயில் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. கூடவே, இந்தக் கால மாற்றத்துக்கே உரித்தான சீசன் காய்ச்சல்களும் வரத் தொடங்கிவிட்டன. ஆனால், சமீப காலமாக மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் காய்ச்சல் அறிகுறிகள் சற்று வித்தியாசமானதாக இருக்கிறது.
தொண்டை வலி, அதிக தலைவலி, கண்களில் கண்ணீர் வடிதல் போன்ற அறிகுறிகளுடன் வரும் இந்தக் காய்ச்சலால் மக்கள் கடுமையாக அவதியுற்று வருகின்றனர். ஆகையால் இந்தக் காய்ச்சல் வருவதற்கான காரணம் என்ன? இதனை எதிர்கொள்ள நாம் என்ன விதமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்? இந்த காய்ச்சல் மூலம் கொரோனா வருவதற்கான வாய்ப்பு இருக்கிறதா?
- இந்தக் கேள்விகளை பொது நல மருத்துவர் A.B. ஃபரூக் அப்துல்லாவிடம் முன்வைத்தோம்.
“குளிர்காலமும் வெயில் காலமும் இணையும் காலங்களில் இதுபோன்ற காய்ச்சல் வருவது இயல்புதான். இது ப்ளூ (flu) என்ற வைரஸால் பரவுகிறது. பொது மருத்துவரை அணுகி சிகிச்சைப் பெற்று, ஓய்வு எடுத்துக்கொண்டாலே எளிதாக இந்தக் காய்ச்சலை குணப்படுத்த முடியும்.
ஆனால், இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்தக் காய்ச்சல் வழியே கொரோனாத் தொற்று ஏற்படுவதற்கான
வாய்ப்பு இருக்கிறது. ஆகையால் 2, 3 நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருப்பின், காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவது மட்டுமல்லாமல்
கொரோனா பரிசோதனையையும் மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக, 40 வயதிற்கு மேல் உள்ளவர்கள் மிக கவனமாக இருந்தல் அவசியமாகும். ப்ளூ வைரஸூம் முதியவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
இந்தக் காய்ச்சல் வைரஸ் மூலம் பரவுவதால், மக்கள் அதிகமாக கூடும் இடங்களை தவிர்த்தல், முகக் கவசம் அணிதல், கைகளை
அடிக்கடி கழுவுதல், வெவ்வேறு இடங்களில் தண்ணீரை அருந்துதலை தவிர்த்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
இவைத் தவிர்த்து தண்ணீரை கொதிக்கவைத்து ஆற வைத்து குடித்தல், விட்டமின் சி கொண்ட பழ வகைகளை எடுத்துக்கொள்ளுதல் போன்றவற்றின் மூலம் வ்ளூ வைரஸில் இருந்து நம்மை காத்துக்கொள்ள முடியும்” என்றார் மருத்துவர் A.B. ஃபரூக் அப்துல்லா.