அன்னையர் தின பதிவுகளால் அன்பால் நிறைந்திருக்கும் சமூக வலைதளங்கள்!

அன்னையர் தின பதிவுகளால் அன்பால் நிறைந்திருக்கும் சமூக வலைதளங்கள்!
அன்னையர் தின பதிவுகளால் அன்பால் நிறைந்திருக்கும் சமூக வலைதளங்கள்!

''ஒரு குடும்பம், 4 நபர்கள், 3 கேக் துண்டுகள்'' 

''எனக்கு கேக் பிடிக்காது - அம்மா'' 

இது வைரலான ஒரு ஆங்கில பதிவின் தமிழாக்கம். அம்மாவின் அன்பை இதற்குமேல் அழுத்தமாகவும், எளிமையாகவும், ஆழமாகவும் பதிவு செய்ய முடியாது. குடும்பத்துக்காக என்றும் உழைக்கும் ஒரு ஜீவன் அம்மா. தொடக்கம் முதல் கடைசி வரை குடும்பத்துக்காக எதாவது ஒன்றை விட்டுக்கொடுத்துக்கொண்டே இருக்கிறார் அம்மா. 

அம்மாக்களுக்கு வயதானாலும் அவர்களின் மனம் என்றும் வயதாவதில்லை. கைக்குழந்தையாய் இருந்தபோதும் சரி, வளர்ந்துவிட்ட பின்பும் சரி, தங்கள் பிள்ளைகள் மேல் பொழியும் அம்மாக்களின் அன்பு மழையானது ஒரு சொட்டும் குறைந்துவிடுவதில்லை. என்றுமே குடும்பத்துக்காகவே ஓய்வுன்றி உழைக்கும் அம்மாவை போற்ற ஒரு நாள். 'அன்னையர் தினம்'.

இன்று ஒருநாள் வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டா, ட்விட்டர் என எந்தப்பக்கம் திரும்பினாலும் அன்னையர் தின வாழ்த்துகள் நிரம்பி வழிகின்றன. அம்மா பாடல்கள் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்களை அலங்கரித்துக்கொண்டு இருக்கின்றன. கேஜிஎப்பின் அம்மா தீம், 'நூறு சாமிகள் இருந்தாலும்', 'ஆராரிராரோ', 'அம்மாவென்று அழைக்காத', 'தாயே தாயே' போன்ற பல பாடல்கள் இன்று ட்ரெண்டிங். வியாபார மொழியில் சொல்ல வேண்டுமென்றால் இந்த பாடல்களுக்கெல்லாம் இன்று செம கிராக்கி.

மறுபக்கம் அம்மாவுடனான செல்ஃபிக்களை பகிர்ந்து சமூக வலைதளங்களில் வாழ்த்துகள் பகிரப்படுகின்றன. அம்மாவுக்காக சில கவிதைகள், அம்மாவின் சில நினைவுகள் என பல பதிவுகள் நெகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றன. சமூக வலைதளங்கள் இன்று அம்மாக்கள் மீதான அன்பால் மூழ்கியிருக்கின்றன.

சமூக வலைதளங்களில் இன்னுமொரு குழு சுற்றிக்கொண்டு இருக்கிறது. ''அன்னையரை கொண்டாட நாள் எதுக்கு?'', ''தினம் தோறும் அன்னையர் தினம் தானே?'', ''வீட்டில் இருக்கும் அம்மாவுக்கு வாழ்த்து சொல்லாமல் வெறும் லைக்குக்காக போட்டோ போடும் போலிக் கும்பல்'' என பதிவுகளை தூவிக்கொண்டு இருக்கிறார்கள். அது ஒரு சிலருக்கு பொருந்தும் என்றாலும் அன்பை கொண்டாடுவதில் என்ன தவறு இருக்கிறது? இன்று ஒரு நாள் அம்மாவை கூடுதலாக, நெகிழ்ச்சியாக, பெருமையாக கொண்டாடுவோமே, அதில் தவறேதும் இல்லை தானே என்று பலரும் பதில் கேள்வி எழுப்பவும் தயங்குவதில்லை.

பரபரப்பான வாழ்க்கையில் வெறும் பதிவுகளாய் மட்டும் அம்மா மீதான அன்பு இருந்துவிடக்கூடாது என்பதுதான் அனைவரின் விருப்பம். யாரோ எழுதியது போல, ''பெற்றோருக்கு நேரம் ஒதுக்கி அவர்களுடன் உரையாடுங்கள். ஒரு வேளை உங்களுக்கு பேச எதுவும் இல்லை என்றாலும் அவர்கள் சொல்வதை கேட்க நிறைய இருக்கும்''. அம்மாக்கள் என்றுமே எதிர்பார்ப்பில்லாத அன்பைத்தான் விதைத்துக்கொண்டு இருக்கிறார்கள். அந்த அன்பை நாம் பலமடங்கு திருப்பித் தருவதே அன்பின் நியதி. தினம் தினம் அன்னையர் தினத்தை கொண்டாடுவோம். தவறில்லை, இன்று ஒருநாள் கூடுதலாகவே கொண்டாடுவோம்.

அன்னையர் தின வாழ்த்துகள்! 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com