நெல்லை: 700 ஆண்டுகள் பழமையான பாண்டியர் காலத்து சத்திரத்தை மீட்டெடுத்த சமூக ஆர்வலர்கள்!

நெல்லை: 700 ஆண்டுகள் பழமையான பாண்டியர் காலத்து சத்திரத்தை மீட்டெடுத்த சமூக ஆர்வலர்கள்!
நெல்லை: 700 ஆண்டுகள் பழமையான பாண்டியர் காலத்து சத்திரத்தை மீட்டெடுத்த சமூக ஆர்வலர்கள்!

திருநெல்வேலி மாவட்டம் பணகுடியில் சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பாண்டியர் காலத்து சத்திரம் ஒன்று, கடந்த சில வருடங்களாக சிதிலமடைந்து மண்ணுக்குள் புதைந்து அவலநிலையில் கிடந்தது. தற்போது அதை அப்பகுதி சமூக ஆர்வலர்கள் மீட்டுள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே மகேந்திரகிரி ஐ.எஸ்.ஆர்.ஓ வளாகத்திற்கு முன்பு நான்கு வழி சாலையில் பாழடைந்த கல் மண்டபம் மண்ணில் புதைந்து காணப்பட்டது. பல வருடங்களாகவே பராமரிப்பு இல்லாமல் அந்த மண்டபம் கிடந்துவந்தது. கொஞ்சம் கொஞ்சமாக அழிவை சந்தித்து அதனை யாருமே கவனிக்க முன்வரவில்லை. கட்டப்பட்டு 700 ஆண்டுகளான போதும், சாலையில் பயணம் செல்பவர்கள் - மாட்டுவண்டி, குதிரைகளில் செல்பவர்கள் உள்ளிட்டோர் இரவு நேரங்களில் தங்கி செல்வதற்கும்; பகல் நேரங்களில், குறிப்பாக வெயில் நேரங்களில் ஓய்வு எடுக்க நினைப்பவர்களுக்கும் அது உபயோகப்பட்டு வந்தது.

இந்த சத்திரத்திலுள்ள மண்டபம், பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டதாகும். மண்டபத்தின் பெயர் ஐயமடம். பாண்டிய மன்னர்கள் ஆட்சி செய்த காலத்தில் இந்த சத்திரத்தில் மூன்று வேளையும் இங்கு வருபவர்களுக்கு உணவு வழங்கியதாக கூறப்படுகிறது. மேலும் இந்த சத்திரத்தை சுற்றி காம்பவுண்ட் சுவர்கள் உள்ளன. மாடுகளை கட்டி வைப்பதற்கும் குதிரைகளை கட்டி வைப்பதற்கும் கல்தூண்களும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் சத்திரத்தில் வருபவர்கள் குடிநீருக்காகவும் மாடு மற்றும் குதிரைகள் குடிப்பதற்காகவும் ஒரு ஏக்கர் பரப்பளவில் எப்போதும் வற்றாத அளவிலுள்ள ஊருணி ஒன்றும் அங்கு உள்ளது.

இந்த ஊருணி நான்கு புறங்களிலும் கற்களால் அடுக்கப்பட்ட ஊரணியாகும். வருடத்தின் 365 நாட்களும் தண்ணீர் இருக்கும் படி அப்போதே அமைக்கப்பட்டுள்ளது. நூற்றாண்டுகள் கடந்து ஆட்சியும், நாகரீகமும் மாற மாற நாளடைவில் அந்த சத்திரங்கள் அப்படியே கைவிடப்பட்டன. பின்பு சாலைகள் அனைத்தும் தார் சாலைகளாக மாறின. சாலைகளின் இருப்புறங்களிலும் வைக்கப்பட்டிருந்த ஆலமரங்கள் அனைத்தும் தனது வயதை கடந்து ஒவ்வொன்றாக முறிந்து விழுந்தன. இது சாலையில் செல்லும் வாகனங்களுக்கு மீது விழத்தொடங்கியது. ஆகையால் 15 வருடங்களுக்கு முன்பாகவே அனைத்து ஆலமரங்களும் அகற்றப்பட்டன.

அதன்பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக சத்திரமும் கவனிப்பாரற்று போனது. இதனால் மண்டபத்தில் உள்ள சுவர்களில் மரங்கள் முளைத்தும், செடிகள் முளைத்தும் சிதலமடைந்து போயின. மண்டபத்தின் கூரையில் பெரிய அளவிலான மரங்களும் வளர்ந்து விட்டன. சத்திரம் கவனிக்கப்படாததால் அதன் உள்ளே இருந்த சிவன் சிலையும் மர்ம நபர்களால் திருடப்பட்டதாக கூறப்படுகிறது. அங்கிருந்த ஜன்னல்களும் அனைத்தும் உடைக்கப்பட்டுள்ளன. தற்போது அந்த மண்டபம் கல்தூண்கள், முட்புதர்கள் உடன் மண்ணுக்குள் மங்கியும் காணப்படுகிறது. இதனைக் கண்ட அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் இதனை மீட்டு வேண்டுமென தீர்மானித்தனர். அதைத்தொடர்ந்து, `காவல் கிணறு நீர்நிலை மற்றும் சுற்றுசூழல் பராமரிப்பு’ குழுவினர், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணுவிடம் இந்த சத்திரத்தை மீட்டு புரனமைப்பு செய்ய வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.

அதனையடுத்து அந்த இடத்தை அளவீடு செய்ய உடனடியாக மாவட்ட ஆட்சியர் உததரவு பிரப்பித்தார். இதனையடுத்து இடம் அளவீடு செய்யும் பணி இராதாபுரம் தாலுகா தலைமை தாசில்தார முன்னிலையில் நேற்று நடைபெற்றது. மொத்தம் 1.49 ஏக்கர் இடம் இந்த சத்திரத்திற்கு சொந்தமாக இருப்பதாக அளவீடு செய்யப்பட்டது. அதைத்தொடந்து, அந்த இடங்கள் மீட்கப்பட்டன. மேலும் அளவுகள் குறிக்கப்பட்டு எல்கைகற்கள் நடப்பட்டன.

இந்த நிலையில் இன்று சமூக ஆர்வலர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஜேசிபி இயந்திரம் கொண்டும் அவர்களும் நேரடியாக அந்த சத்திரத்தை தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டனர். தூய்மை செய்வதற்கு முன்பு ஏதோ காடுபோல் இருந்த அந்த சத்திரம், தூய்மை செய்த பின்பு பார்ப்பதற்கு பிரமாண்டமாகவும், அழகாகவும் காட்சியளிக்க துவங்கியுள்ளது.

மேலும் இது குறித்து சமூக ஆர்வலர் விதுபாலாவிடம் கேட்டபோது, “இந்த சத்திரம் பாண்டிய மன்னர் காலத்தில் கட்டப்பட்டது. பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் இருந்தது. தற்போது மாவட்ட ஆட்சித் தலைவரின் அறிவுரைப்படி, இதனை சீரமைத்து இதில் பூங்காக்கள் அமைத்து மக்களுக்கு பயனுள்ளதாக மாற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம். மார்ச 22 உலக தண்ணீர் தினமாக அறிவித்துள்ளனர். அந்த நாள் நெருங்க உள்ள நிலையில், கண்ணுக்கு தெரியாமல் போன நீர்நிலைகளை கண்டரிந்து மீட்பு செய்கிறோம் நாங்கள்” என்று கூறினார்.

மேலும் இது குறித்து ஆர்வலர் இராமராஜா கூறுகையில், “பொக்கிஷமான இந்த பகுதியை மீட்டெடுக்க கலெக்டரிடம் கோரிக்கை வைத்தோம். அதன்படி அவரும் அனுமதி அளித்தார். தற்போது அதனை தூய்மை செய்யும் பணி நடைபெற்று வருகிறது” என்று கூறினார். இவர்களைப் போலவே ஆர்வலர் ஜான்சன் என்பவர் நம்மிடையே கூறுகையில், “முன்னோர்களால் நன்கறியப்பட்ட இந்த இடம், தற்போது பாழடைந்திருப்பதை காண முடிகிறது. அதனை தற்போது இளைஞர்கள் உதவியுடன் மீட்டு எடுத்துள்ளோம். இதனை நன்கு கவனித்து ஒரு பூங்கா அமைத்து மக்களுக்கு பயனுள்ளதாக மாற்ற வேண்டும்” என கோரிக்கை வைத்தார்.

- ராஜீவ்கிருஷ்ணா, வள்ளியூர் செய்தியாளர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com