இன்னும் 4 வருஷம்... கனவுகளில் கரைகிறார் ’கருப்புத் திறமை’ ஜோஃரா ஆர்ச்சர்!

இன்னும் 4 வருஷம்... கனவுகளில் கரைகிறார் ’கருப்புத் திறமை’ ஜோஃரா ஆர்ச்சர்!

இன்னும் 4 வருஷம்... கனவுகளில் கரைகிறார் ’கருப்புத் திறமை’ ஜோஃரா ஆர்ச்சர்!
Published on

இந்த ஐபிஎல்-லில், அறிமுகமான போட்டியிலேயே, அசத்தியிருக்கிறார்கள் சில வீரர்கள். அந்த சிலரில் குறிப்பிடத்தக்கவர், ஜோப்ரா ஆர்ச்சர் (Jofra Archer). இந்தக் ’கருப்புத் திறமை’யை பாதுகாத்து வைத்திருக்கிறது, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி! 

மும்பைக்கு எதிரான போட்டியில் இவர் அடுத்தடுத்து எடுத்த அந்த மூன்று முக்கிய விக்கெட்டுகள்தான், ராஜஸ்தான் வெல்ல காரணம். இவரின் எதிர்பாராத தாக்குதலில் நிலை குலைந்தவர்கள், ஹர்திக் பாண்ட்யா, குணால் பாண்ட்யா, மேக்லனஹன். இதையடுத்தே 167 ரன்களுக்குள் கட்டுப்படுத்த முடிந்தது மும்பையை. ஆட்டநாயகன் விருதும் ஆர்ச்சருக்குத்தான்.

இந்த ஐபிஎல்-லில் அதிக விலைக்கு வாங்கப்பட்டவர்களில் இவரும் ஒருவர். ரூ.7.2 கோடிக்கு வாங்கிவிட்டு, ஆரம்ப போட்டிகளில் களமிறக்காமல் வைத்திருந்தார்கள் இவரை. ‘ஏன் இப்படி?’ என்று யோசித்துக் கொண்டிருக்கும்போது, ‘நேரம் வரணும்ல’ என்று சரியாகவே களமிறக்கினார்கள் மும்பைக்கு எதிராக. இனி அடுத்தடுத்தப் போட்டிகளில் இந்த 23 வயது ஆர்ச்சரின் ஆச்சரியங்களை பார்க்க முடியும், சுகமாக!

‘நான் அதிகமான அதிர்ஷ்டத்தோட பிறந்தவன் இல்லை. ஐபிஎல்-லில் கிடைச்ச பணம் என் குடும்பத்தோட தரத்தை உயர்த்த உதவியிருக்கு. என் அம்மா, தங்கை பார்படாஸ்ல இருக்காங்க. நான் இங்கிலாந்துல இருக்கேன்’ என்கிறார் ஆர்ச்சர்.

இங்கிலாந்தின் கவுண்டி கிரிக்கெட்டில் சுசக்ஸ் அணிக்காக 2016- முதல் ஆடிவரும் ஆர்ச்சர் பிரிட்டீஷ் குடியுரிமை பெற்றிருக்கிறார். அங்கிருந்து ஆஸ்திரேலியாவின் பிக்பாஷ் போட்டிக்கு அழைக்கப்பட்டார். இந்த வருட பிக்பாஷ் போட்டியில் ஆர்ச்சர்தான் அதிகம் பேசப்பட்ட கிரிக்கெட் வீரர். அங்கு 17 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிற ஆர்ச்சரின் எக்கனாமி ரேட் 7.88. 

இவரது அடுத்த ஆசை, இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்காக ஆட வேண்டும் என்பது. ஏன் இந்த இங்கிலாந்து ஆசை? 2014-ம் ஆண்டு 19 வயதுக்கு உட்பட்டோருக்கான அணியில் ஆர்ச்சரை சேர்க்கவில்லை, வெஸ்ட் இண்டீஸ்! கோபமடைந்த ஆர்ச்சர் பிளைட் பிடித்துவிட்டார் இங்கிலாந்துக்கு.

அந்த நாட்டு அணியில் எளிதாக சேர்ந்துவிட முடியுமா என்ன? இங்கிலாந்து குடியுரிமை பெற்று அங்கு ஏழு வருடம் வாழ்ந் தால் மட்டுமே, தேசிய அணிக்காக கிரிக்கெட் ஆட முடியும் என்பது அங்குள்ள, லா. அந்த ஏழு வருடம் பூர்த்தியாக, ஆர்ச்ச ருக்கு இன்னும் நான்கு வருடம் இருக்கிறது, பாக்கி. அதாவது 2022-ல்தான் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும். அதுவரை அவர் ஃபார்மில் இருக்க வேண்டும் என்பது இன்னும் முக்கியம்.

‘உடனடியா எதுவும் செஞ்சிட முடியாதுன்னு தெரியும். எனக்கு அவசரம் இல்லை. இந்த காலகட்டத்துல கவுண்டி கிரிக்கெட், டி20 லீக் போட்டிகள்ல விளையாடி அனுபவத்தை அதிகமா வச்சுக்கணும்’ என்கிற ஆர்ச்சர், ஐபிஎல் போட் டியில் ஒரு டார்க்கெட் வைத்திருக்கிறார்.

‘முதல்ல சில போட்டிகள்ல விளையாட முடியாம போச்சு. ஆனா, இந்த வருட ஐபிஎல் போட்டியில் அதிக விக்கெட் வீழ்த்தியவனா நான் இருக்கணும்னு முடிவு பண்ணியிருக்கேன். இது முடியுமான்னு தெரியல. அடுத்து நடக்கிற ஒவ்வொரு போட்டியிலயும் இரண்டு அல்லது மூணு விக்கெட்டை கண்டிப்பாக வீழ்த்தணுங்கறதுதான் என் டார்க்கெட்’ என்கிறார்.

’மும்பைக்கு எதிரான போட்டிக்குப் பிறகு உங்க மேல எதிர்பார்ப்பு அதிகரிச்சிருக்கே?’ என்று கேட்டால், ’இது ஒண்ணும் புதுசில்ல. இது என்னை பாதிக்காது. டி20 போட்டிகள்ல நிறைய விஷயங்கள் அதிரடியா மாறியிருக்கு. ஆனா, என் நோக்கம் ராஜஸ் தான் அணியை வெற்றி பெற வைக்கணும். அதோட என் பிட்னஸ்லயும் கவனம் செலுத்தணும்’ என்கிறார் இந்த ஆர்ச்சர்! 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com