ஓயாத அழுகை; சூழும் இயலாமை - ‘பாகிஸ்தான் ஆதரவு‘க்காக நிற்கதியாக தவிக்கும் மாணவர்கள்

ஓயாத அழுகை; சூழும் இயலாமை - ‘பாகிஸ்தான் ஆதரவு‘க்காக நிற்கதியாக தவிக்கும் மாணவர்கள்
ஓயாத அழுகை; சூழும் இயலாமை - ‘பாகிஸ்தான் ஆதரவு‘க்காக நிற்கதியாக தவிக்கும் மாணவர்கள்

''என் கணவர் இறந்துவிட்டார். எனக்கு அவன் ஒரே மகன் தான். எங்கள் குடும்பத்தின் எல்லாமுமே அவன் தான். எனக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். அவன் தவறு செய்திருக்கலாம். என் மகனை மன்னித்து விடுவிக்குமாறு அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளேன்'' நடுங்கும் கைகளை ஏந்தியபடி 45 வயதான ஹனிஃபா பேசும் வார்த்தைகள் இவை. அரசாங்கத்திடம் தன்னுடைய மகனை விடுவிக்குமாறு கண்ணீர்மல்க கோருகிறார். 

அவரது மகன் அர்ஷத் யூசுஃப்க்கு 21 வயதுதான். உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள தனியார் கல்லூரியில் இன்ஜினியரிங் படித்துவரும் அவர் மீது, இந்திய தண்டனைச்சட்டம் 153ஏ (மதம், இனம், பிறந்த இடம், வசிப்பிடம், மொழி போன்றவற்றின் அடிப்படையில் பல்வேறு குழுக்களிடையே பகைமையை வளர்த்து, நல்லிணக்கத்தைப் பேணுவதற்குத் தீங்கு விளைவிக்கும் செயல்களைச் செய்தல்) கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.

அத்தோடு 505 (1) (b) அதாவது பொதுமக்களிடையே அச்சம் அல்லது எச்சரிக்கையை ஏற்படுத்தும் நோக்கத்தையோ அல்லது ஏற்படுத்தக்கூடியவர்களையோ அல்லது பொதுமக்களின் எந்தப் பிரிவினரோ அரசுக்கு எதிராகவோ அல்லது பொது அமைதிக்கு எதிராகவோ குற்றம் செய்யத் தூண்டப்படுபவர்களைத் தண்டிக்கும் பிரிவின் கீழும் வழக்கு பதியப்பட்டுள்ளது. தவிர, இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2008 இன் பிரிவு 66F (சைபர் பயங்கரவாதத்திற்கான தண்டனை) கீழும் ஒரு வழக்கு. 21 வயதான காஷ்மீரின் குக்கிராமத்தைச் சேர்ந்த அர்ஷ்த அப்படி என்ன பயங்கரமான தேச விரோத செயலை செய்துவிட்டார் என கேள்வி எழலாம்.

டி20 உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தானின் வெற்றிக்கு ஆதரவாக குரல் கொடுத்தது அர்ஷத் செய்த மோசமான செயல் என கருதுகிறது உத்தரப் பிரதேச அரசு. இந்த வழக்கில் மத்திய காஷ்மீரைச் சேர்ந்த இனாயத் அல்தாப் ஷேக் மற்றும் வடக்கு காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தைச் சேர்ந்த ஷோகத் அகமது கனாய் ஆகிய மேலும் இரண்டு மாணவர்களை உ.பி. காவல்துறை கைது செய்துள்ளது.

கல்லூரி வளாகத்திலிருந்து பாகிஸ்தான் வெற்றி பெற்றதற்கு ஆதரவான குரல்களை காஷ்மீர் மாணவர்கள் எழுப்பியதாக உள்ளூர் பாஜக பிரமுகர் ஒருவர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். பல்வேறு முக்கிய புகார்கள் நிலுவையில் இருந்தபோதும், காவல்துறைக்கு பாஜக பிரமுகர் கொடுத்த இந்த புகாரை அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாக கருதிய காவல்துறை உடனே அந்த மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. காவல்துறைக்கு ஆதரவாக கல்லூரி நிர்வாகம் 3 பேரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது.

பாகிஸ்தானக்கு ஆதரவாக குரல் எழுப்பியதால், சம்பந்தப்பட்ட மூன்று மாணவர்களின் மீது தேசத்துரோக வழக்கு பதிவது குறித்து உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியிருப்பது காஷ்மீரில் உள்ள மாணவர்களின் பெற்றோர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது."அவன் எங்கிருக்கிறார் என்பது எங்களுக்குத் தெரியாது," என்று அர்ஷாத்தின் மாமா, ஹிலால் அகமது கூறுகிறார்., "நாங்கள் ஃபேஸ்புக் மூலம் தான் அவனது கைது குறித்து அறிந்துகொண்டோம். தொடர்ந்து அர்ஷாத்துக்கு போன் செய்தால் ஸ்விட்ச் ஆஃப் என வந்தது'' என்று கவலையுடன் தெரிவிக்கிறார் அவர்.

கைது செய்யப்பட்ட மூன்று மாணவர்களும் மிகவும் பின்தங்கிய காஷ்மீரி குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். 2010 இல் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட பிரதமரின் சிறப்பு உதவித்தொகை திட்டத்தின் கீழ் படித்து வருகின்றனர். அர்ஷாத்தை பொறுத்தவரை அவரது குடும்பத்தில் அவர் தான் முதல் தலைமுறை பட்டதாரி. "அவன் குடும்பத்தில் ஒரு முன்மாதிரியாக பார்க்கப்பட்டான். அவனால் தற்போது மீண்டும் படிப்பை தொடர முடியுமா? என தெரியவில்லை. அவனது வாழ்க்கை முடிந்துவிட்டது'' என்கிறார் அவரது மாமா.

காஷ்மீரிலிருந்து உத்தரப் பிரதேசம் சென்று மகனை தேடி அலைந்து சந்தித்து, அவரை சட்டரீதியாக காப்பாற்றுவதற்கு அவர்களிடம் நிதி இல்லை. ''நாங்கள் தினசரி கூலிகள். எங்கள் அப்பாவும் மாமாவும் கூலி வேலை செய்து வந்தனர். நாங்களும் தினக்கூலிகள் தான். எங்களிடம் நிலம் இல்லை. நாங்கள் ஏழைகள் எதைப்பற்றியும் எங்களுக்கு தெரியாது'' என்கிறார் ஹிலால்.

14நாட்கள் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டிருக்கும் 3 மாணவர்களும், ஆக்ரா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கு முன்பு காவல்துறையினரால் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். ''நாங்கள் அந்த வீடியோவைப் பார்த்தோம். ஆனால் எங்களால் என்ன செய்திருக்க முடியும்?'' என்று ஹிலால் கேட்டுக்கும் கேள்வி எல்லோரையும் உலுக்கிறது.

தகவல் உறுதுணை: தி வயர் இணையதளம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com