ஆர்தர் காட்டன்
ஆர்தர் காட்டன்முகநூல்

ஆங்கிலேய கரிகாலன்: ஆர்தர் காட்டன் பிறந்த நாள்!

இந்திய நீர்ப் பாசனத்தின் தந்தை எனப் போற்றப்படும் சர் ஆர்தர் காட்டனின் பிறந்தநாள் இன்று. கல்லணை கட்டிய பழந்தமிழர்களிடம் அவர் கற்றுத்தேர்ந்த நீரியல் தொழில்நுட்ப பாடம் இந்தியா முழுமைக்கும் பயன்பட்ட வரலாற்றை இந்த கட்டுரையில் பார்ப்போம்..
Published on

ஆர்தர் காட்டன் 1803ஆம் ஆண்டு மே 15ம் நாள் இங்கிலாந்தில் செஸ்ஷைர் என்ற ஊரில் பிறந்தார். தனது 15ஆவது வயதிலேயே ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியில் பொறியியல் பிரிவுக்கு வேலைக்கு சேர்ந்தார். 1821ஆம் ஆண்டு முதல்முறையாக மதராஸ் தலைமை பொறியாளர் அலுவலகத்துக்கு உதவியாளராக பணிக்கு வந்தார். பின்னர் ஏரி பாசனத்துறையில் பணியமர்த்தப்பட்ட ஆர்தர் காட்டன், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நீர்நிலைகளைப் பராமரித்து நீர் விநியோகம் செய்யும் பணிகளைச் செய்து வந்தார்.  

அந்த நிலையில்தான், 1829இல் காவிரி பாசனப் பகுதியின் தனிப் பொறியாளராக பிரிட்டிஷ் அரசாங்கத்தால் நியமிக்கப்படுகிறார். அதுதான் ஆர்தர் காட்டன்வாழ்வில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய காலம். காவேரி பாயும் அன்றைய தஞ்சை டெல்டா பகுதி, மழை பெய்தால் பெரு வெள்ளம், இல்லையேல் கடும் வறட்சி என்று தத்தளித்துக்கொண்டிருந்தது. கரிகாலச் சோழன் கட்டிய கல்லணை பராமரிப்பின்றி மணல்மேடுகளால் சூழப்பட்டதுதான் இதற்கு காரணம் என்பதைக் கண்டறிந்த ஆர்தர் காட்டன், 1830ஆம் ஆண்டு கல்லணையின் சிறு பகுதியை பிரித்து எடுத்து மணல் போக்கிகளை அமைத்தார்.  அப்போது, கல்லணையின் அடித்தளத்தை பார்த்து வியந்த ஆர்தர் காட்டன், `இதுவல்லவோ கிராண்ட் அணைக்கட்’ என்று பிரம்மித்து போய் பெயரிட்டார். ``ஆழம் காண முடியாத மணற்படுகையில் எவ்வாறு அடித்தளம் அமைப்பது என்ற தொழில்நுட்பத்தை தமிழர்களிடம் கற்றுக்கொண்டதாக வரலாற்று குறிப்பெழுதினார்.

கரிகாலன் கட்டிய கல்லணையின் மேலே கட்டுமானம் அமைத்து, அணையைப் புதுப்பித்தார். இதையடுத்து, காவிரியும், கொள்ளிடமும் பிரியும்  திருச்சி முக்கொம்பில் 1836ஆம் ஆண்டில் மேலணையைக் கட்டினார். தொடர்ந்து, 1840இல் அணைக்கரையில் கீழணையையும் கட்டினார். வீராணம் ஏரிக்கு தண்ணீர் செல்லவும் வழிவகுத்தார்.  இதன் விளைவாக, வீணாக கடலில் கலந்துகொண்டிருந்த காவிரி நீர் விவசாயிகளின் வரப்புகளுக்குள் பாய்ந்தது. ஒட்டுமொத்த காவேரி டெல்டாவும் செழித்தோங்கியது.

கல்லணையில் கற்ற பாடத்தை ஆந்திராவிலும் புகுத்தினார் ஆர்தர் காட்டன். 1849இல் விஜயவாடா அருகே கிருஷ்ணா நதியிலும், 1873இல் தவளேஸ்வரம் அருகே கோதாவரி நதியிலும் அணைகளைக் கட்டினார். வானம் பார்த்த பூமியாக இருந்த ஆந்திராவை முப்போகமும் நெல் விளையும் பூமியாக மாற்றினார். தொடர்ந்து, ஒடிசா, மத்திய பிரதேசம் என பல்வேறு மாநிலங்களிலும் நீர்ப்பாசன திட்டங்களை செயல் படுத்தினார். இதன்விளைவாக, இந்தியாவில் 50 லட்சத்துக்கும் அதிகமான ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதிகள் கிடைத்தன.

இதுமட்டுமல்ல, மேட்டூர் அணை உருவாகவும், பென்னி குயிக் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டவும் ஆரம்பப் புள்ளி வைத்தவர் ஆர்த்தர் காட்டன் தான். 1835ஆம் ஆண்டிலேயே முல்லைப் பெரியாறு அணை கட்டுவதற்கான வரைவு திட்டத்தை முன்மொழிந்தார். அதே ஆண்டு மேட்டூர் அணை கட்ட அனுமதி கேட்டு மைசூர் சமஸ்தானத்திடமும் பேச்சுவார்த்தை நடத்தினார். இன்று அனைவரும் வலியுறுத்தும் கங்கை - காவிரி இணைப்பு திட்டத்தை முதல் ஆளாக முன்மொழிந்ததும் ஆர்தர் காட்டன் தான்.

ஆர்தர் காட்டன்
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் எழுதும்|பஹல்காமுக்கு தக்க பதிலடி!

இந்திய நீர் பாசனத்துக்காக இத்தனை அரும்பாடு பட்ட ஆர்த்தரை `இந்திய நீர்ப் பாசனத் தந்தை’ என இந்திய அரசு கொண்டாடுகிறது. அணை கட்டித்தந்த நன்றிக்காக ஆர்த்தருக்கு 3000 சிலைகளை வைத்து, அருங்காட்சியகங்கள் அமைத்து ஆந்திர மக்களும் விழா எடுக்கிறார்கள்.

ஆனால், தமிழனிடம் இருந்து நீர்ப்பாசன தொழில்நுட்பத்தைக் கற்று, தமிழ்மக்களுக்காக பல அணைகளை படைத்த ஆர்தர் காட்டனை தமிழ்நாடு அரசும் மக்களும் கொண்டாட மறந்துவிட்டார்கள் என வேதனை தெரிவிக்கிறார்கள் விவரமறிந்த விவசாயிகள். இனியாவது ஆர்தரின் பிறந்தநாளை  அரசு விழாவாக அறிவித்து, அவரின் வரலாற்றை பாடப்புத்தகங்களில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்பதே விவசாயிகள் நீண்ட கால கோரிக்கையாக இருந்துவருகிறது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com