தூய்மைப் பணியாளர் டூ துணை கலெக்டர்... 40 வயது பெண்ணின் அசாத்திய பயணம்!

தூய்மைப் பணியாளர் டூ துணை கலெக்டர்... 40 வயது பெண்ணின் அசாத்திய பயணம்!

தூய்மைப் பணியாளர் டூ துணை கலெக்டர்... 40 வயது பெண்ணின் அசாத்திய பயணம்!
Published on

ராஜஸ்தான் மாநிலத்தில் தூய்மைப் பணியாளராக இருந்த கணவரால் கைவிடப்பட்ட பெண்ணொருவர், பணிக்கு இடையில் தனது இரண்டு குழந்தைகளையும் கவனித்துக்கொண்டு அரசுப் பணித் தேர்வுக்கும் விண்ணப்பித்து தற்போது அதில் வெற்றியும் பெற்றுள்ளார். தேர்வில் வெற்றிபெற்றதன்மூலம், மாவட்ட துணை கலெக்டராக உயர்ந்து பலரின் உத்வேகத்துக்கு உதாரணமாகத் திகழ்கிறார், 40 வயது ஆஷா கந்தாரா.

சமீபத்தில் ராஜஸ்தான் மாநில அரசுப் பணித் தேர்வில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரிகள் தேர்ச்சி பெற்ற தகவல் வெளியாகி இருந்தது. இப்போது, அதே ராஜஸ்தான் மாநிலத்தின் அரசுத் தேர்வில் மற்றொரு பெண்ணின் தேர்ச்சி தலைப்புச் செய்தியாக மாறியிருக்கிறது. இந்தப் பெண்ணின் பெயர் ஆஷா கந்தாரா. இவரின் கதை அந்த மூன்று சகோதரிகளை விட சற்று வித்தியாசனமானது. ஜோத்பூரைச் சேர்ந்த இவரின் வயது 40. மிகவும் ஏழ்மையான பின்னணி கொண்ட ஆஷா இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறும் முன்னதாக தனது தாயுடன் இணைந்து, ஜோத்பூர் மாநகராட்சியில் தூய்மைப் பணியாளராக பணியாற்றியவர்.

தனது எட்டு ஆண்டு குடும்ப வாழ்க்கையில் இரண்டு குழந்தைகளுக்கு தாயான ஆஷா, தனது கணவரால் கைவிடப்பட்டிருக்கிறார். இதனால் கையறு நிலையில் இருந்ததால், தனது குழந்தைகளையும், குடும்பத்தையும் காப்பாற்ற ஜோத்பூர் மாநகராட்சியில் தூய்மைப் பணியாளராக தனது தாயுடன் இணைந்து பணியாற்ற தொடங்கியிருக்கிறார். இந்தப் பணியில் இணைவதற்கு முன்னதாக நம்பிக்கை தளராமல், தனது பெற்றோரின் உதவியுடன் கல்லூரியில் பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்கிறார். பின் அரசுப் பணி தேர்வுக்காகவும் தயாராகி வந்துள்ளார்.

2018-ல் பட்டம் பெற்ற நிலையில், அதன்பின் தூய்மைப் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார் அவர். இந்த நிலையில், 2018-ல் அரசுப் பணிக்கான தேர்வு நடைபெற்றபோது, அதில் கலந்துகொண்டுள்ளார். இரண்டு கட்டங்களாக இந்தத் தேர்வு நடந்தது. கொரோனா காரணமாக இந்தத் தேர்வின் முடிவுகள் தாமதமாக அறிவிக்கப்பட்டாலும், இதில் நல்ல மதிப்பெண் எடுத்து தற்போது வெற்றிபெற்றுள்ளார். இதன் காரணமாக தூய்மைப் பணியாளராக இருந்த ஆஷா, தற்போது துணை கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. ஜோத்பூர் மேயர், ஆஷாவை நேரில் அழைத்து வெகுவாக பாராட்டி இருக்கிறார். இதற்கிடையே, அரசுப் பணி கனவு தன்னுள் எப்படி வந்தது என்பதை என்டிடிவி-க்கு பேட்டியாக அளித்துள்ளார் ஆஷா. அதில், ``நான் சில இடங்களில் ஏதேனும் கேள்வி கேட்டால் நீங்கள் என்ன கலெக்டரா என மக்கள் என்னை கேலி செய்வார்கள். உண்மையில் கலெக்டர் என்றால் என்ன என்று எனக்குத் தெரியாது. அதன்பின் கலெக்டருக்கான அர்த்தத்தை கண்டுபிடித்தேன். அப்போதே ஐஏஎஸ் தேர்வில் கலந்துகொள்ள ஆசைப்பட்டேன். ஆனால், சிவில் சர்வீஸ் தேர்வுக்கான வயது வரம்பு முடிந்துவிட்டது என்பதை அறிந்தேன்.

இதன்பின்னர்தான் ராஜஸ்தான் அரசுப் பணி தேர்வாணைய தேர்வுகளில் கலந்துகொள்ள முடிவு செய்தேன். மூன்றாண்டுகளுக்கு முன்பு தயாராக தொடங்கினேன். இடையில் தூய்மைப் பணியாளராகவும் பணிக்குச் சென்றேன். எனது முக்கிய பணி ஜோத்பூரின் மிக முக்கியமான தெருக்களில் ஒன்றான பாட்டா சாலையை சுத்தமாக வைத்திருப்பதாகும். தினமும் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பணியில் இருக்க வேண்டியிருந்தது. எனக்கு இதன்மூலம் ரூ.12,500 சம்பளம் கிடைத்தது.

நான் தூய்மைப் பணியாளர் பணியை தேர்வு செய்ய காரணம்... அது ஒன்றுதான் எனக்கும் என் குழந்தைகளுக்கும் உணவளிப்பதற்கான ஒரே வழியாக இருந்தது. எந்த வேலையும் சிறியது பெரியது என கிடையாது என்பதை உணர்ந்ததாலேயே தூய்மைப் பணியில் என்னை ஈடுபடுத்திக்கொண்டேன். இதனால் மற்றவர்கள் சொன்னதை காதில் வாங்காமல் எனது பணியில் கவனம் செலுத்தினேன்.

மக்கள் உங்கள் மீது கற்களை எறிந்தால், நீங்கள் அவற்றைச் சேகரித்து ஒரு பாலம் கட்ட வேண்டும் என்பது என் எண்ணம். என்னால் அதைச் செய்ய முடியுமெனும்போது, யார் வேண்டுமானாலும் அதை செய்யலாம் என நம்புகிறேன். எனது உத்வேகத்துக்கு முக்கிய காரணம், எனது தந்தைதான். என் தந்தை படித்தவர். அவர்தான் நான் கணவரால் கைவிட்ட பிறகு மீண்டும் படிப்பதற்கு என்னை ஊக்கப்படுத்தினார். என்னைப் போன்றவர்களுக்கு ஏதாவதொருவகையில் நான் ஊக்கம் கொடுக்க விரும்பினேன். அதனாலேயே நான் இதனை தேர்வு செய்தேன். தற்போது நான் தேர்ந்தெடுள்ள பணியின் மூலம் என்னைப்போன்றோருக்கு உதவவும் விரும்புகிறேன்" என்று உணர்ச்சிபெருக்கில் பேசியிருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com