48 மணி நேரத்தில் சரிந்த 60சதவித பங்குகள்! திவாலான சிலிக்கான் வேலி வங்கி! என்னதான் நடந்தது?

48 மணி நேரத்தில் சரிந்த 60சதவித பங்குகள்! திவாலான சிலிக்கான் வேலி வங்கி! என்னதான் நடந்தது?
48 மணி நேரத்தில் சரிந்த 60சதவித பங்குகள்! திவாலான சிலிக்கான் வேலி வங்கி! என்னதான் நடந்தது?

அமெரிக்காவின் சிலிக்கான் வேலி வங்கி, திவாலானதற்கு 5 காரணங்கள் சொல்லப்படுகிறது.

வங்கியின் நோக்கம் என்ன?

அமெரிக்காவின் 16வது மிகப்பெரிய வங்கியானது, சிலிக்கான் வேலி வங்கியாகும். இவ்வங்கி, சுருக்கமாக எஸ்.வி.பி. என அழைக்கப்படுகிறது. இது, அமெரிக்காவின் கலிபோர்னியாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவருகிறது. இவ்வங்கி, புதிதாக தொழில் தொடங்கும் நிறுவனங்களுக்கு கடன் வழங்குதல் மற்றும் வெஜ்ஞர் கேப்பிடல் நிறுவனங்களிடமிருந்து அதிகப்படியான டெபாசிட் பெறுவதும், நிதி உதவி வழங்கும் சேவையையும் செய்து வருகிறது. இந்த நிலையில், அவ்வங்கியின் பங்குகள் கடுமையாகச் சரிந்ததைத் தொடர்ந்து சிலிகான் வேலி வங்கி திவாலானதாக தகவல் வெளியாகியுள்ளது.

48 மணி நேரத்தில் சரிந்த 60 சதவித பங்குகள்!

அதேநேரத்தில், அமெரிக்காவின் சிலிக்கான் வேலி வங்கியில், 2022 டிசம்பர் 31ஆம் தேதி நிலவரப்படி மொத்த சொத்து மதிப்பு 209 மில்லியன் டாலராகவும், 174 மில்லியன் பில்லியன் டாலர்கள் டெபாசிட்டாகவும் இருந்தது. இந்த நிலையில், வெறும் 48 மணி நேரத்தில் சிலிக்கான் வங்கி பங்குகளின் மதிப்பு 60 சதவிகிதத்திற்கும் அதிகமாக சரிந்து, திவாலடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. 2008ஆம் ஆண்டுக்கு பின் அமெரிக்காவில் மிகப்பெரிய வங்கி திவாலானது இதுவே முதல்முறையாகும். சிலிகான் வேலி வங்கியின் பங்குகள் தொடர்ந்து சரிவை சந்தித்ததால் பங்குச்சந்தையில் அந்த வங்கி பங்குகளின் விற்பனை நிறுத்தப்பட்டது.

ஒட்டுமொத்த உலக பொருளாதாரத்தை பாதிக்கும் அபாயம்

மேலும், சிலிகான் வேலி வங்கியின் பங்குகளை அமெரிக்க மத்திய டெபாசிட் காப்பீடு நிறுவனம் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளது. இந்த வங்கியின் வீழ்ச்சி ஒட்டுமொத்த உலக பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சிலிகான் வேலி வங்கி தகவல் தொழில்நுட்பத்துறையிலும் அதிக ஆதிக்கத்தை செலுத்தி வந்ததால் தகவல் தொழில்நுட்பத்துறை (ஐடி) தொடர்பான பங்குகளும் சரிவை சந்திக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, நாளை (மார்ச் 13) இந்திய பங்குச்சந்தையில் வங்கி தொடர்பான பங்குகள் பெரும் சரிவை சந்திக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வங்கி தற்போது அமெரிக்க பெடரல் இன்சூரன்ஸ் கழகத்தின் கட்டுப்பாட்டில் சென்றுள்ளது. அவர்கள் வங்கிச் சொத்துக்களை கைப்பற்றி அதனை பணமாக்க உள்ளனர். இந்த வங்கி தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அதிக கடன் கொடுத்ததே திவாலுக்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது.

எஸ்.வி.பி. திவால் அடைந்ததற்கு முக்கியக் காரணங்கள்

விபரீதத்தில் முடிந்த நிதி திரட்டும் முயற்சி

கடந்த மார்ச் 8ஆம் தேதி, வங்கியின் இருப்புநிலையை உயர்த்த 2.25 பில்லியன் டாலர் அளவிற்கு நிதி திரட்ட வேண்டும் என்று எஸ்.வி.பி. தெரிவித்திருந்தது. இதையடுத்து, வங்கியில் இருந்து தங்களது பணத்தை எடுத்துக்கொள்ளுமாறு நிறுவனங்களுக்கு வென்சர் கேப்பிடல் நிறுவனம் அறிவுறுத்தியது.

நஷ்டத்திற்கு விற்கப்பட்ட பங்குகள்

அந்த நிறுவனங்கள் தங்களது பணத்தை திரும்ப எடுத்ததால், வங்கியில் பணம் இருப்பு இல்லாமல் போனது. இதை ஈடுகட்டுவதற்காக சிலிக்கான் வேலி வங்கி தன்னிடம் இருந்த விற்பனை பத்திரங்களை சுமார் 1.8 பில்லியன் டாலர் அளவிற்கு நஷ்டத்திற்கு விற்றது. இதனால், மார்ச் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளின் பங்குச் சந்தைகளில் இந்த வங்கியின் பங்கு மதிப்பு சரிவைச் சந்தித்தது. குறிப்பாக, 10ஆம் தேதி, சிலிக்கான் வேலி வங்கியின் பங்கு விற்பனை முடங்கியது.

நிறுத்தப்பட்ட பங்குகள் விற்பனை

இதையடுத்து, பங்குகளை வாங்க வைப்பதற்கான முயற்சியையும் எஸ்.வி.பி. வங்கி கைவிட்டது. இதையடுத்து, பர்ஸ்ட் ரிபப்ளிக், பேக்வெஸ்ட் பான்கார்ப் மற்றும் சிக்னேச்சர் வங்கி ஆகியவற்றின் பங்குகள் விற்பனையும் நிறுத்தப்பட்டன. இது அட்லாண்டிக்கின் இருபக்கங்களிலும் நிதி நெருக்கடிக்கு இட்டுச் சென்றது. மேலும், பில்லியன் டாலர்கள் பங்குச் சந்தையில் காணாமல் போனது.

கடைசி நேரத்திலும் வங்கி கொடுத்த பொய்யான நம்பிக்கை

வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி கிரேக் பெக்கர், வங்கி திவால் ஆவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பாக வாடிக்கையாளர்களை அழைத்து பணம் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவித்தார். ஆனால், அவர் உறுதியளித்ததுபோல் இல்லாமல் வங்கி தடாலடியாக திவாலானது. கடந்த 9ஆம் தேதி, வங்கியில் இருந்து 42 பில்லியன் டாலர் பணத்தை வாடிக்கையாளர்கள் எடுத்துள்ளனர். இதனால், பங்குச் சந்தையில் பலத்த அடி ஏற்பட்டது.

அமெரிக்க பெடரல் வங்கி கடந்த ஓராண்டாக பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியது. தொடர்ந்து வட்டி விகிதத்தை உயர்த்தி வந்தது. இதனால், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், குறிப்பாக டெக்னாலஜி துறையில் ஈடுபட்டு இருக்கும் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

- ஜெ.பிரகாஷ்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com