சித்துவா, சன்னியா? - பஞ்சாப் முதல்வர் வேட்பாளராக யாரை தேர்ந்தெடுக்க போகிறார் ராகுல்காந்தி?

சித்துவா, சன்னியா? - பஞ்சாப் முதல்வர் வேட்பாளராக யாரை தேர்ந்தெடுக்க போகிறார் ராகுல்காந்தி?
சித்துவா, சன்னியா? - பஞ்சாப் முதல்வர் வேட்பாளராக யாரை தேர்ந்தெடுக்க போகிறார் ராகுல்காந்தி?

பஞ்சாப் மாநிலத்தில் வரும் பிப்ரவரி 20-ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பிப்ரவரி 6-ஆம் தேதி காங்கிரஸ் தனது முதல்வர் வேட்பாளரை அறிவிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பஞ்சாப் காங்கிரஸ் கட்சியின் முகமாக தற்போதைய முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி இருப்பாரா அல்லது மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து இருப்பாரா என்ற சஸ்பென்ஸுக்கு 6-ஆம் தேதி வெளியாகவுள்ள அறிவிப்பு முற்றுப்புள்ளி வைக்கும்.

கடந்த ஜனவரி 27-ஆம் தேதி ராகுல் காந்தி தனது பஞ்சாப் பயணத்தின்போது, ஒரு முதல்வர் முகத்துடன் காங்கிரஸ் கட்சி தேர்தலில் போட்டியிடும் என்றும், கட்சித் தொண்டர்களுடன் கலந்தாலோசித்த பிறகு விரைவில் இதுகுறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் உறுதிப்படுத்தினார். இருவரில் யாரை முதல் வேட்பாளராக அறிவித்தாலும், சன்னி மற்றும் சித்து இருவரும் ஒருவருக்கொருவர் ஆதரவளிப்பதாக தன்னிடம் உறுதியளித்ததாகவும் அவர் கூறியிருந்தார்.

பரப்புரையின்போது தேர்தலுக்கான முதல்வரை கட்சி அறிவிக்க வேண்டும் என்று சித்துவும் கோரிக்கை வைத்திருந்தார். இதனைத்தொடர்ந்து வரும் பிப்ரவரி 6 ஆம் தேதி முதல்வர் வேட்பாளர் யார் என பஞ்சாப்பில் நடக்கவுள்ள நிகழ்ச்சியில் ராகுல் காந்தி அறிவிக்கவுள்ளார்.

முதல்வர் வேட்பாளர் தேர்வுக்கு ஆலோசனை:

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஏற்கெனவே கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் முதல்வர் வேட்பாளர் தேர்வு குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார். மேலும், காங்கிரஸ் கட்சி தனது 'சக்தி செயலி' மூலமாகவும் தலைவர்கள், பொதுமக்கள் மற்றும் தொண்டர்களிடம் இருந்து இது தொடர்பாக கருத்தினை கேட்டுள்ளது. ராகுல்காந்தியும் யாரை முன்னிறுத்தலாம் என்பது குறித்து பல தரப்பிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

கடந்த சில வாரங்களாக, சன்னி மற்றும் சித்து இருவரும் தங்களை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்த பல வகைகளில்  முயன்று வரும் சூழலில், முதல்வரை வேட்பாளர் அறிவிப்பின் மூலமாக இந்த குழப்பம் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்க்கப்படுகிறது.

யாருக்கு வாய்ப்பு இருக்கும்?

பஞ்சாப் மாநிலத்தின் சம்கவுர் சாஹிப் மற்றும் பதாவுர் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த சரண்ஜித் சிங் சன்னிக்கு முதல்வர் வேட்பாளராக வாய்ப்பு அதிகம் உள்ளதாகவே அரசியல் விமர்சகர்கள் கணிக்கின்றனர்.

பஞ்சாபில் காங்கிரஸின் பாரம்பரிய வாக்கு வங்கியாக பட்டியல் சமூகத்தினர் இருந்து வருகின்றனர், ஆனால் பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் சில சிறிய கட்சிகளால் அந்த வாக்குவங்கி சரிந்து வருகிறது. எனவே, இப்போது சரண்ஜித் சிங் சன்னியைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் பஞ்சாப்பின் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கைக் கொண்ட பட்டியல் சமூக வாக்கு வங்கியை ஒருங்கிணைக்க முடியும் என காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது

சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட மேல்மட்ட தலைவர்களிடம் செல்வாக்கு மற்றும் மக்களிடம் பரந்துபட்ட அறிமுகம் காரணமாக சித்துவுக்கும் வாய்ப்பு உள்ளதென்றே பேசப்படுகிறது. இதற்கான விடை பிப்ரவரி 6 ஆம் தேதி தெரியும்

பரபரப்பான பஞ்சாப் தேர்தல் களம்:

வரும் பிப்ரவரி 20-ஆம் தேதி பஞ்சாப்பில் ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் கட்சியாக உள்ள காங்கிரஸ் தனித்தே களம்  காணுகிறது. முக்கிய எதிர்க்கட்சியாக உள்ள ஆம் ஆத்மி கட்சியும் தனித்தே களம் காணுகிறது. பஞ்சாபை பலமுறை ஆண்டுள்ள சிரோன்மணி அகாலிதளம் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது.

காங்கிரஸ் கட்சியின் முதல்வராக இருந்து சில மாதங்களுக்கு முன்பு பதவி விலகிய அமரீந்தர் சிங், தொடங்கிய பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து பாஜக போட்டியிடுகிறது. இந்த கூட்டணியில் சன்யுக் சிரோன்மணி அகாலிதளம் கட்சியும் 15 தொகுதிகளில் போட்டியிடுகிறது. பஞ்சாபில் உள்ள 117 தொகுதிகளில் இந்த கூட்டணியில் பாஜக 66 இடங்களிலும், அமரீந்தர் கட்சி 36 இடங்களிலும் போட்டியிடுகிறது.

பஞ்சாபில் தேர்தலை சந்திக்கும் கட்சிகளில் இதுவரை ஆம் ஆத்மி கட்சி மட்டுமே பகவந்த் மானை முதல்வர் வேட்பாளராக அறிவித்துள்ளது. இந்த சூழலில் காங்கிரஸ் முதல்வர் வேட்பாளரும் அறிவிக்கப்பட்டால் பஞ்சாப் தேர்தல் களம் இன்னும் தகிக்க ஆரம்பிக்கும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com