"அறிவுசார் பிரிவுக்கும் அறிவாளிகளுக்கும் சம்பந்தம் கிடையாது!"- பாஜக ஷெல்வீ சிறப்பு பேட்டி

"அறிவுசார் பிரிவுக்கும் அறிவாளிகளுக்கும் சம்பந்தம் கிடையாது!"- பாஜக ஷெல்வீ சிறப்பு பேட்டி

"அறிவுசார் பிரிவுக்கும் அறிவாளிகளுக்கும் சம்பந்தம் கிடையாது!"- பாஜக ஷெல்வீ சிறப்பு பேட்டி
Published on

பாஜகவிலிருந்து விலகி ரஜினி தொடங்கவுள்ள கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக ஆகியிருக்கிறார் அர்ஜுன மூர்த்தி. இதனால், அவர் பாஜகவில் வகித்து வந்த 'அறிவுசார்' பிரிவின் புதிய தலைவராக்கப்பட்டிருக்கிறார், பிரபல ஜோதிடர் ஷெல்வீ. புதிய தலைமுறை செய்தித் தளத்துக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டி...

’அறிவுசார்’ பிரிவு தலைவராக இருந்த அர்ஜுன மூர்த்தி ரஜினியுடன் சென்றதை எப்படி பார்க்கிறீர்கள்?

"அர்ஜுன மூர்த்தி எங்களுக்கு நல்ல நண்பர். யார் எந்தக் கட்சிக்கும் செல்லலாம். அது அவரவர் விருப்பம். ஒரு கட்சியிலேயே இல்லாமல் பத்து கட்சிக்கு சென்றவர்கள் எல்லா கட்சிகளிலும் இருக்கிறார்கள். யார் எந்தக் கட்சிக்கு சென்றாலும், அவர்கள் நல்லா இருக்கவேண்டும் என்று நினைப்பதுதான் பாஜகவினரின் விருப்பம்."

அறிவுசார் பிரிவின் தலைவர் பொறுப்பு கொடுத்திருப்பது எப்படி இருக்கிறது?

"பாஜகவில் பல பிரிவுகள் இருப்பதுபோல, இதுவும் ஒரு பிரிவு. பாஜகவில் மட்டும்தான் எல்லாவற்றிற்கும் பிரிவுகள் ஏற்படுத்தி, அதற்கு முக்கியத்துவமும் கொடுக்கப்படுகின்றன. எங்கள் அறிவுசார் பிரிவின் சார்பாக வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்காக கட்சி வளர்ச்சிக்காக பாடுபடும் எத்தனையோ தொண்டர்களில் நானும் சாதாரண தொண்டனாக உழைத்துக் கொண்டிருக்கிறேன். தலைவர் பதவி தலைக்கணத்துக்கு போகக்கூடாது. அதனை மீறவே மாட்டேன். கொடுத்திருக்கும் பொறுப்பை பொறுப்புடன் செய்வேன்.

எங்கள் பிரிவில் தொழிலதிபர்கள், பெரிய மருத்துவர்கள் சாதித்தவர்கள், சாதனை படைத்தவர்கள் என எல்லோரும் இருக்கிறார்கள். இன்னும் அறிவுசார் பிரிவுக்கு பெரிய பெரிய விஞ்ஞானிகள் எல்லாம் வருகிறார்கள். வரக்கூட்டிய காலகட்டங்களில் மக்களுக்கு எதில் முன்னுரிமை கொடுக்கவேண்டும்? மத்திய அரசின் திட்டங்கள் ஏன் தமிழகத்தில் சரியாக வெளியில் வரவில்லை? அத்திட்டங்களில் அரசியல்வாதிகள் பயன்பெறுகிறார்களா? மக்கள் பயன்பெறுகிறார்களா? அரசுக்கு எதிரான எதிர்கட்சிகளின் போராட்டங்களை எப்படி முறியடிக்கலாம்? மருத்துவமனைகளில் என்ன நடந்துகொண்டிருக்கிறது? எங்கு லஞ்சம் வாங்குகிறார்கள் என்று அனைத்தையும் கண்காணிக்கும் பணிகளில் ஈடுபடவுள்ளோம். குறிப்பாக, தமிழகத்தில் லஞ்ச ஊழலை ஒழிக்க இனிமேல் அதிக முன்னுரிமை கொடுத்து லஞ்சத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கவிருக்கிறோம். ஜனவரி 5 ஆம் தேதிக்குப்பிறகு, அதற்கான மீட்டிங்கிலும் கவனம் செலுத்தவுள்ளோம்."

 பாஜகவில் சேர்ந்து இத்தனை வருடங்கள் ஆகியும் நீங்கள் கட்சியில் இருப்பதே தெரியவில்லையே?

"பாஜகவில், கடந்த 2014 ஆம் ஆண்டிலிருந்தே இருக்கிறேன். அர்ஜுன மூர்த்தி சென்றதால், துணைத் தலைவரான என்னை பொறுப்பிற்கு போட்டுள்ளார்கள். என் நண்பர் சக்ரவர்த்தி மூலம்தான் பாஜகவில் இணைந்தேன். எல்லோருடனும் எனக்கு நெருங்கிய தொடர்பு உண்டு. தேமுதிகவையும் பாட்டாளி மக்கள் கட்சியையும் கூட்டணிக்கு வரவைத்ததில் எனக்கும் நண்பர் ஸ்ரீராம் முரளிக்கும் பங்குண்டு. அப்போதுகூட, நான் மேடைகளில் ஏறவில்லை. பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் சென்சார் உறுப்பினராக என்னை நியமித்தார்கள். அதனைக்கூட சமூக வலைதளங்களில் பகிர்ந்துகொண்டதில்லை. நண்பர்களுக்கும் தெரியப்படுத்தவில்லை. ஏனென்றால், அரசியல் பொறுப்பில் இருப்பதையெல்லாம் எனக்கு மிகைப்படுத்த பிடிக்காது. ஏற்கெனவே, அறிவுசார் பிரிவில் துணைத் தலைவராக இருந்ததையும் யாருக்கும் தெரிவிக்கவில்லை. அர்ஜுன மூர்த்தி சென்றதால் உடனடியாக மீட்டிங் போட்டு பொறுப்பை கொடுத்தார்கள். அது போட்டப்பிறகுகூட நான் யாருக்கும் தெரியப்படுத்தவில்லை. பாஜகவில் எந்தப் பதவிகளை எதிர்பார்த்தும் நான் இணையவில்லை."

’அறிவுசார் பிரிவுக்கும் பாஜகவுக்கும் என்ன சம்மந்தம் உள்ளது’ என்று சமூக வலைதளங்களில் விமர்சனம் வைக்கப்பட்டதே? அதனையெல்லாம் பார்த்தீர்களா?

"அறிவுசார் என்பது அறிவாளிகள் பிரிவு என்று பலர் தவறாக நினைத்துவிட்டார்கள். இது அறிவாளிகள் பிரிவு கிடையாது. கட்சியை வலுப்படுத்த என்ன மாதிரியான நடவடிக்கைகளைச் செய்யலாம் என்பதே அறிவுசார் பிரிவின் பணிகள். பல சர்வேக்களை எடுத்து, அதன் உண்மைத் தன்மையை தீர விசாரித்து மாவட்ட வாரியாக உள்ள பிரச்னைகள் என்ன? எங்கள் தலைவர்கள் மாவட்ட ரீதியாக என்ன பேசவேண்டும்? போன்றவற்றையெல்லாம் கொடுக்கிறோம். அதனால், அறிவுசார் பிரிவு என்பது அறிவாளிகள் பிரிவு கிடையாது. அறிவாளிகளுக்கும் அறிவுசார் பிரிவுக்கும் சம்பந்தம் கிடையாது. எல்லோரும் இந்த உலகத்தில் ஒரே அளவு மூளைதான் இருக்கிறது. அந்த மூளையை எப்படி பயன்படுத்துகிறோம் என்பதுதான் அறிவுசார். ஆனால், இதனை அறிவோடு இருப்பவர்கள் என்று சமூக வலைதளங்களில் இருப்பவர்கள் நினைத்துக்கொண்டது மிக மிகத் தவறு."

அறிவுசார் பிரிவுக்கு ஜோதிடரான உங்களை நியமித்தது குறித்த விமர்சனங்களை எப்படி பார்க்கிறீர்கள்?

"ஜோதிடராக இருந்தாலும் நான் வழக்கறிஞர். எம்.எல் பட்டம் அறிவில்லாமல் பெற்றிருக்க முடியுமா? வழக்கறிஞர் பணியையும் செய்துகொண்டே தனிப்பட்ட முறையில் ஜோதிடமும் பார்க்கிறேன். ஜோதிடம் என்பதே ஒரு ஆராய்ச்சிதான். அதற்கும் படிப்புகள் உள்ளன. ’கடவுளே இல்லை. ஜோதிடம் பொய்’ என்று வெளியில் சொல்லிவிட்டு எங்களிடமே வந்து ஜோதிடம் பார்க்கும் குடும்பங்கள் நன்கு தெரியும். ஜோதிடம் என்பதே அறிவு சம்மந்தப்பட்ட விஷயம்தான். ஜோதிடமும் அறிவியல்தான். வான சாஸ்திரத்தின் உட்பட்ட விஷயங்கள்தான் சாஸ்திரத்தின் அமைப்பு. அறிவியல் முன்னேறினாலும் அந்தக் காலகட்டத்திலேயே நம் முன்னோர்கள் பஞ்சாங்கக் கணக்கை சரியாக கணித்து வைத்துள்ளார்கள். மறைந்த முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் முதல், ரஜினி அரசியலுக்கு வருவதுவரை அனைத்தையும் நான் முன்கூட்டியே ஆராய்ந்து கூறியுள்ளேன். அத்தனையும் நடக்கவில்லையா? அதனால், இந்த அறிவாளிகளைவிட நாங்கள் பெரிய அறிவாளிகள்தான். கார்ப்பரேட் கம்பெனிகளிலேயே ஜோதிடத்திற்கென்று தனி ஜோதிடர்கள் இருக்கிறார்கள். அரசியல் தலைவர்கள் உட்பட பல துறையினர் ஜோதிடர்களைத்தான் நம்புகிறார்கள். அரசியல் என்பது வேறு. எனது தனிப்பட்ட; விருப்பப்பட்ட பணி என்பது வேறு."

தமிழகத்தில் 70 தொகுதிகள் வரை வெற்றிபெறும் என்று எல்.முருகன் கூறியிருக்கிறாரே?  ஆனால், தமிழகத்தில் பாஜகவுக்கு தொடர் தோல்விகள்தானே ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது?

"கேரளாவிலேயே எங்களது வெற்றிகள் சபரிமலை பிரச்சனையிலிருந்தே ஆரம்பித்துவிட்டது. ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளிலேயே நாங்கள் வென்றிருக்கிறோம். எங்கள் தலைவர் சொன்னதுபோல் அத்தனை இடங்களிலும், அதற்குமேலும் வெற்றி பெற்றுவோம். கருப்பர் கூட்டத்திற்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன். அவர்களால்தான், இந்து மக்கள் ஒன்றிணைந்துள்ளார்கள். பிரதோசஷத்திற்குகூட வாழ்த்து சொல்லும் நிலை உருவாகும். யார் யாரெல்லாம் கேலி செய்கிறார்களோ அவர்களே பட்டையும் கொட்டையுமாக வருவார்கள்.  2022 ஆம் ஆண்டு இந்துக்களுக்கு இருக்கும் எல்லா தடைகளும் ஒழிந்துபோகும். அதன்பிறகு முனேற்றம்தான். பாஜகவுக்கும் 2022-க்குப் பிறகு தமிழகம் மட்டுமல்ல, தென்னிந்தியா முழுக்கவே பெரிய வளர்ச்சி இருக்கும்."

- வினி சர்பனா

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com