பென்னிகுவிக் பயன்படுத்திய நூற்றாண்டுகால கலவை எந்திரம்: காப்பாற்றுமா தமிழக அரசு?

பென்னிகுவிக் பயன்படுத்திய நூற்றாண்டுகால கலவை எந்திரம்: காப்பாற்றுமா தமிழக அரசு?
பென்னிகுவிக் பயன்படுத்திய நூற்றாண்டுகால கலவை எந்திரம்: காப்பாற்றுமா தமிழக அரசு?

முல்லைப்பெரியாறு அணை கட்ட பயன்படுத்திய லண்டன் “கலவை இயந்திரம்” வெயிலிலும் மழையிலும் கிடந்து சிதிலமாகி வருகிறது. 

முல்லைப்பெரியாறு அணையில், அணை கட்டுவதற்காக லண்டனில் இருந்து கொண்டுவரப்பட்டு பயன்படுத்தப்பட்ட“காங்கிரீட் கலவை” இயந்திரம், அணையின் ஒரு ஓரத்தில் வெயிலிலும் மழையிலும் கிடந்து துருப்பிடித்து உருத்தெரியாமல் அழியும் நிலைக்கு வந்துள்ளது. பொக்கிஷமாக பாதுகாக்கப்பட வேண்டியதை இப்படி சிதிலமடைய வைத்திருப்பது வேதனைக்குரிய விஷயமாகியிருக்கிறது.

தமிழக மக்களின், குறிப்பாக தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய ஐந்து மாவட்ட மக்களின் நீராதாரமாக, வாழ்வாதாரமாக முல்லைப்பெரியாறு அணை திகழ்கிறது. 1885ம் ஆண்டு கர்னல் ஜான் பென்னிகுவிக் என்ற ஆங்கிலேய பொறியாளரால் கட்டப்பட்ட இந்த அணை நூற்றாண்டுகளைக் கடந்தும் தனது கம்பீரம் மாறாமல் அந்தக்கால கட்டிடக்கலையின் உறுதித்தன்மையை உலகமெங்கும் பறைசாற்றி வருகிறது.

அணையின் உறுதியை பரிசோதிக்க நிபுணர் குழுக்கள், “அணையை சல்லடையாய் துளாவி ஆய்வு நடத்தியும் கட்டுமானத்தில் எந்தக் குறையும் கண்டுப்பிடிக்க முடியாத அளவிற்கு அணையின் பலம் நூற்றாண்டுகளைக் கடந்து பல ஆண்டுகளானாலும் நிலைத்து நிற்கிறது. இந்தக்கால கைதேர்ந்த நிபுணத்துவம் பெற்ற பொறியாளர்கள் கூட மூக்கில் விரல் வைத்து பார்க்கும் அளவிற்கு ஆச்சர்யம் அளிக்கிறது முல்லைப்பெரியாறு அணையின் கட்டிடக்கலை” என்று புகழ்ந்து தள்ளினர்.

அத்தனை முக்கியத்துவம் வாய்ந்த கட்டிடத்திற்கு அச்சாணியாக இருந்தது, சிமெண்ட் இல்லாத காலத்தில் கலக்கப்பட்ட சுண்ணாம்புக்கல் மற்றும்  “சுர்க்கி” கலவைதான். அந்தக் கலவைக்காக கர்னல் ஜான் பென்னிகுவிக், இங்கிலாந்தின் லண்டனிலிருந்து “காங்கிரீட் கலவை” இயந்திரத்தை கொண்டுவந்தார். அணை கட்ட பயன்படுத்தப்பட்ட 80 ஆயிரம் டன் சுண்ணாம்புக்கல் மற்றும் சுர்க்கி கலவைக்கு, அந்த லண்டன் கலவை இயந்திரம்தான் பயன்படுத்தப்பட்டது.

அந்த லண்டன் இயந்திரம் அதன் முக்கியத்துவத்தை இழந்து முல்லைப்பெரியாறு அணையின் ஒரு ஓரத்தில் கேட்பாரற்றுக் கிடக்கிறது. அணையின் கட்டுமானப்பணிக்கு ஆணி வேரான அந்தக் கலவை இயந்திரத்தை பாதுகாக்க பென்னிகுவிக், இரு தனி அறையை கட்டியிருந்தார். அந்த அறைக்குள்தான் அந்த இயந்திரம் முன்பு வைக்கப்பட்டிருந்தது.

தற்போது அந்தச் சிறிய அறையும் பராமரிப்பின்றி, கதவுகள் இன்றியும், சுற்றுப்புறச்சுவர்கள் பாதி இடிந்த நிலையிலும் பாழடைந்து கிடக்கிறது. அறைக்குள் இருந்த லண்டன் கலவை இயந்திரம், தற்போது அறைக்கு வெளியே அநாதையாக புதர்களுக்குள் புதைந்திருக்கிறது. ஆண்டுக்கணக்கில் வெயிலும், மழையும் கொண்டதால், பழைய இரும்புக்கடை பொருட்களைப்போல் துருப்பிடித்து அழியும் நிலையை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

தமிழக மக்கள் முல்லைப்பெரியாறு அணையை கோயிலாக போற்றுகின்றனர். அணையை கட்டிய கர்னல் ஜான் பென்னிகுவிக்கை கடவுளாக பூஜிக்கின்றனர். ஆனால் இந்தப் போற்றுதலுக்கும், பூஜித்தலுக்கும் மூலமாய் இருந்த அணை கட்டப்பயன்படுத்திய இந்தக் “கலவை இயந்திரம்” மட்டும் அநாதையாய் கிடப்பது கவலைக்குரியதாகியுள்ளது.

ஆண்டுதோறும் முல்லைப்பெரியாறு அணையின் பராமரிப்பு பணிக்கு தமிழக அரசு லட்சக்கணக்கில் நிதி ஒதுக்குகிறது. அந்த நிதியில் ஒரு துளியை செலவளித்தாவது, அணையின் கலவை இயந்திரத்தை பாதுகாக்கும் அறையை சீரமைத்து, அந்த அறைக்குள் முல்லைப்பெரியாறு அணை கட்ட பயன்படுத்திய கலவை இயந்திரத்தை வண்ணம் பூசி பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. 

அதைவிடவும், அந்தக் கலவை இயந்திரத்தை தேனி மாவட்டம் லோயர்கேம்ப்பில் உள்ள பென்னிகுவிக் நினைவு மண்டபத்தில் கொண்டு வந்து வைத்து காட்சிப்பொருளாக்கினால், அணையின் கட்டுமானப்பணிக்கு உதவிய இயந்திரம் தமிழக மக்கள் மதிப்பளிக்கும் நிலை உருவாகும் என்பதும் பலரின் கருத்தாக உள்ளது. இது குறித்து தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, லண்டன் கலவை இயந்திரம் பராமரிப்பு, தனி அறை சீராக்குவது குறித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com