"என்னோட லவ் பிரேக்-அப் ஆகிடுச்சி: ஆனால், கடவுள்?”- சீரியல் நடிகை நட்சத்திரா பேட்டி

"என்னோட லவ் பிரேக்-அப் ஆகிடுச்சி: ஆனால், கடவுள்?”- சீரியல் நடிகை நட்சத்திரா பேட்டி
"என்னோட லவ் பிரேக்-அப் ஆகிடுச்சி: ஆனால், கடவுள்?”- சீரியல் நடிகை நட்சத்திரா பேட்டி

”யாரடி நீ மோகினி சீரியலில் அழுது அழுது நடித்துவிட்டு தற்போது அதிரடியாக நடிப்பது ரொம்ப புதுசா வித்தியாசமா இருக்கு. கலகலப்பாக நடிப்பது பிடித்திருக்கிறது" என்று உற்சாக சிரிப்புடன் பேசுகிறார் சீரியஸ் சாரி சீரியல் நடிகையாக இருந்த நட்சத்திரா. 'யாரடி நீ மோகினி' யில் அப்பாவிப் பெண்ணாய் ஈர்த்தவர், தற்போது கலர்ஸ் தமிழ் சேனலில் புதிதாக ஒளிபரப்பாகும் 'வள்ளி திருமணம்' சீரியலில் 'அடேங்கப்பா' என்று அடாவடி பெண்ணாய் நடித்து ஆச்சர்யமூட்டுகிறார். நட்சத்திராவிடம் பேசினோம்…

உங்களைப் பற்றி?

“என்னோட சொந்த ஊர் கொல்லம் மாவட்டத்திலுள்ள அயத்தில். சென்னை என்றப் பேரைக்கேட்டாலே துபாய் மாதிரி எல்லோரும் நினைச்சிக்குவோம். இப்போக்கூட சென்னையில் இருந்து யாராச்சும் வந்தால் அப்படிப் பார்ப்பாங்க. அப்படி வியந்துப் பார்க்கும் சென்னையிலேயே வந்துத் தங்கி நான் நடித்துக்கொண்டிருப்பது கடவுள் ஆசிர்வாதம்தான். தியேட்டர் சென்று படம் பார்ப்பதைத் தவிர எனது குடும்பத்தில் யாரும் நடிப்புத் துறையில் இல்லை. எங்க அப்பா ஒரு ஆட்டோ டிரைவர். அதோட, அம்மாவோட சேர்ந்து சின்ன பேக்கரி கடையும் நடத்தினாங்க. இந்த சூழலில் வளர்ந்த எனக்கு சினிமா மீதெல்லாம் ஆர்வம் இருந்தது கிடையாது. சிறு வயதில் நமக்கு ஏதாவது வேண்டும் என்று ஆழமாக நினைத்துக்கொண்டே வந்தால், அது கண்டிப்பா நடக்கும். ஆனால், அப்படி நினைத்தது நான் கிடையாது என் அம்மா ஷைலஜாதான். ’என் பொண்ணு நடிகையாகணும்’னு அம்மா எங்கப் போனாலும் சொல்லிக்கிட்டே இருப்பாங்க. அதைக்கேட்டு எல்லோரும் என் முகத்தைப் பார்த்து சிரிப்பார்கள். ‘உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு’ன்னு அம்மாக்கிட்ட நானே கோபப்பட்டிருக்கேன். ஆனால், அம்மா நினைத்ததுதான் நடந்தது. முதலில் குறும்படத்தில் நடித்துக் கொண்டிருந்தேன். அதில், நடிக்கும்போதுதான் 2016 ஆம் ஆண்டு தமிழில் ’கிடா பூசாரி மகுடி’ பட ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு வந்தது. அப்படத்தில், கேரக்டர் ரோலில் நடித்த சுகுமார் சார் மூலம் ’யாரடி நீ மோகினி’ வாய்ப்பு கிடைத்தது. அதிலிருந்து, சீரியலிலேயே கவனம் செலுத்திக்கொண்டிருக்கிறேன்”.

மீண்டும் ஏன் சினிமாவில் நடிக்கவில்லை?

“எனக்கு சரியான வாய்ப்பு வரலைங்கிறதுதான் உண்மை. சீரியலில் நடிக்கும்போது ஒன்னு ரெண்டு படம் மட்டும் வந்தது. ஆனால், சீரியலில் பிசியானதால் வாய்ப்பை மறுத்துவிட்டேன். இதுவே, எனக்கு ஹேப்பியாகத்தான் இருக்கிறது. மாதத்தில் 21 நாட்கள் ஷூட்டிங் போகிறேன். மற்ற நாட்களில் என்னுடையப் பணிகளை பார்த்துக்கொள்வேன். இன்னொரு வேலையைத் தேடவேண்டும் என்ற இடைவெளியே வரவில்லை”.

’வள்ளி திருமணம்’ சீரியல் வாய்ப்பு எப்படி வந்தது?

“’யாரடி நீ மோகினி’ சீரியல் முடிந்தபிறகு ’அபி டெய்லர்’ சீரியலில் கெஸ்ட் ரோலில் வந்தேன். அப்போதுதான், கலர்ஸ் தமிழில் இருந்து “ ’வள்ளி திருமணம்’ சீரியல் எடுக்கப்போகிறோம் நீங்கள் நடிக்கிறீர்களா?. ரொம்ப அப்பாவித்தனமாவே நடிச்சிருக்கீங்க. உங்களை வேற மாதிரி காட்டவேண்டும் என்பதால்தான் கேட்கிறோம்” என்றார்கள். நான் முதலில் ஒப்புக்கொள்ளாமல் தவிர்த்துவிட்டேன். பிறகு, கொஞ்சநாள் கழித்து மீண்டும் நானே போன் பண்ணி வாய்ப்புக் கேட்டேன். அவங்களும் சந்தோஷமா ஓகே சொல்லிட்டாங்க. நான் மட்டும் மிஸ் பண்ணியிருந்தா பெரிய வாய்ப்பை இழந்திருப்பேன். வெண்ணிலா கதாபாத்திரமும் வள்ளி கதாபாத்திரமும் எனது அதிர்ஷ்டம் என்றுதான் சொல்வேன். கடவுளுக்கும் தயாரிப்பாளர் பிரதீப் சாருக்கும் நன்றி”.

’வள்ளி திருமணம்’ சீரியலில் வட்டி வாங்கும் அடாவடி பெண்ணாக நடிக்கிறீர்களே? வட்டி வாங்குவது தவறில்லையா?

“வட்டி வாங்குவதில் தவறில்லை. ஆனால், அதிக வட்டி வாங்குவதுதான் தவறு. நம்மால் முடியாத நிலையில்தான் ஒருவரிடம் வட்டிக்கு வாங்குகிறோம். அவர்களும் கஷ்டப்பட்டுத்தான் நமக்கு பணம் வட்டிக்குக் கொடுக்கிறார்கள். நாம் ஒரு கஷ்டத்தில் இருக்கும்போது பணம் கொடுக்கிறார்கள். அந்த சூழலில் கொடுக்கிறார்களே, அதைத்தான் பார்க்கவேண்டும். அதற்காக, கொள்ளைக் காசு அடிக்கக்கூடாது. இதில், நான் வட்டிக் கொடுக்கவில்லையென்றால், அடுத்தவாரம் வாங்கிக்கிறேன் என்று ஒப்புக்கொள்ளும் நல்ல கேரக்டர்தான். ரொம்ப அடாவடி இல்லை”.

பெண்கள் திருமண வயது 21 ஆக மத்திய அரசு உயர்த்தியுள்ளதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

“21 வயது மேல் திருமணம் செய்தால் மட்டும் விவாகரத்து வரவில்லை என்று சொல்ல முடியுமா? இல்லையே? 18 வயது ஆனாலும் அதற்கேற்ற மெச்சுரிட்டியில் சரியான லைஃப் பார்ட்னர் கிடைத்தால் 18 வயதில்கூட திருமணம் செய்து கொள்ளலாம். பிரச்சனை இல்லை. சரியான ஒரு பார்ட்னர் கிடைக்கணும். அதுதான் முக்கியம்”.

இன்ஸ்டா காஸ்டியூம் எல்லாம் மார்டன் ட்ரெஸ்ஸாவே இருக்கே... ஆனால்,சீரியலில் தாவணி, புடவையிலேயே வருவதில் வருத்தம் இருக்கிறதா?

“எனக்கு மார்டன் ட்ரெஸ் அவ்வளவா செட் ஆகாது. தாவணி, புடவையில் நடிப்பதுதான் ரொம்ப சந்தோஷம். மார்டன் ட்ரெஸ் வெளியில் போட்டு செல்லத்தான் பிடிக்கும். இதே புடவை என்றால் ஒரேயொரு தோடு, செயின் மட்டும் போதும். ஒன்றையே பலவற்றிற்கும் போட்டுக்கொண்டு நடிக்கலாம். மார்டன் ட்ரெஸ் என்றால் அதற்கேற்ற கலரில் தோடுக்காக அலையவேண்டியிருக்கும்”.

உங்கள் உயிர்த்தோழி சைத்ரா அஜித்தின் ‘வலிமை’ படத்துல நடிச்சிருக்காங்களே?

“ரொம்ப சந்தோஷமா இருக்கு. சைத்ரா என்கூடவே இருப்பவள். அதுவும் தலயோட நடிச்சிட்டா. இதுக்குமேல, அவளுக்கு என்ன வேணும்?. அவ எதிலாவது சாதித்தால், அதில் பாதி கிரெடிட்ஸ் எனக்குதான் தருவாள். நானும் சாதித்தால் அதில் பாதி அவளுடையது. என்னையும் அவளையும் தனித்தனியாக பிரித்துப் பார்க்க முடியாது. நான் அஜித் சார் ஃபேன் எல்லாம் கிடையாது. ஆனால், அவரைப் பற்றி தெரிந்தப்பிறகு பிடிக்க ஆரம்பித்துவிட்டது. சைத்ராவும் அப்படித்தான். ஆனால், ’வலிமை’ படத்தில் நடித்தப்பிறகு அஜித் சாரின் ஒரிஜினல் கேரக்டரைப் பார்த்துவிட்டு ஆச்சர்யத்தில் பாராட்டினாள். அவள் சொன்ன விஷயங்கள் சான்சே இல்ல”.

உங்களுக்குப் பிடித்த சீரியல் நடிகை யாரு?

”சன் டிவியின் ‘சுந்தரி’ சீரியல் கேப்ரில்லா ரொம்பப் பிடிக்கும். சீரியலைவிட இன்ஸ்டாகிராமில் அவள் போடும் வீடியோக்கள் சூப்பர். ரொம்ப டேலண்ட் கேர்ள்”.

‘யாரடி நீ மோகினி’ சீரியலில் நடித்த அனைவரும் ஒவ்வொரு சேனலில் நடித்துக்கொண்டிருக்கிறீர்களே?

“உடனுக்குடன் வேறு சீரியலுக்கு வாய்ப்பு வந்து நடிப்பது நல்ல விஷயம்தானே? நமக்குப் பிடித்த வேலைதானே செய்யமுடியும்? பிரிந்தாலும் நாங்கள் அடிக்கடி பேசிக்கொண்டுதான் இருக்கிறோம். ஆனால், சந்திப்பது குறைவாகிவிட்டது. எல்லோருக்கும் திருமணமாகிவிட்டது. இத்தனைநாள் ஃப்ரண்ட்ஸ் எல்லாம் ஒண்ணா இருந்துட்டோம். இனிமே ஹஸ்பண்ட் கூடத்தான் இருக்கணும். புதுசாதானே திருமணம் ஆகிருக்கு. ஹனிமூன் டைம்ல இருக்காங்க. அதனால, டிஸ்டர்ப் பண்ணக்கூடாது”.

சைத்ரா, ஷபானா, ரேஷ்மான்னு உங்கத் தோழிகள் எல்லோருக்கும் மேரேஜ் ஆகிடுச்சே.. உங்களுக்கு எப்போ?

“எல்லோருக்கும் திருமணம் ஆனதில் ரொம்ப சந்தோஷம். அதனால, அவங்க லைஃப் எப்படி போகுதுன்னு பார்ப்போம். கொஞ்சநாள் நான் ஜாலியா இருந்துட்டுப்போறேன். நானும் என்னுடன் முதல் படத்தில் நடித்தவருடன் காதலில் இருந்து வந்தேன். எங்கள் காதல் விஷயம் எல்லாமே உண்மைதான். ஆனால், பிரேக்கப் ஆகிவிட்டது. அதனால், தற்போது நடிப்பில் மட்டும் கவனத்தைச் செலுத்துகிறேன். கடவுள் நமக்காக இன்னும் நல்லது ஏதாச்சும் கொடுக்கலாம்”.

ஷபானா - ஆர்யன் பிரியப்போகிறார்கள்.. வீட்டில் ஒத்துக்கொள்ளவில்லை என்று தகவல் வருகிறதே ?

“அவள் முன்னணியில் இருப்பதால் இப்படியெல்லாம் வதந்தி பரப்புகிறார்கள். இரண்டுப் ரொம்ப ஜாலியா இருக்காங்க. எந்தப் பிரச்சனையும் இல்லை”.

சீரியலில் மாறவேண்டும் என்று நினைக்கும் விஷயம் எது?

“ஓவர் நெகட்டிவிட்டி காட்டாமல் இருந்தால் கொஞ்சம் நல்லாருக்கும்”. இந்த மந்திரத் தந்திரம் எல்லாம் குறைத்துக்கொள்ளலாம். குழந்தைகள் எல்லோரும் பார்ப்பார்கள்”.

-வினி சர்பனா

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com