25 ஆண்டுகளுக்கு பின் செங்கோட்டை-மயிலாடுதுறை விரைவு ரயில் சேவை - சிறப்பம்சங்கள் என்ன?

25 ஆண்டுகளுக்கு பின் செங்கோட்டை-மயிலாடுதுறை விரைவு ரயில் சேவை - சிறப்பம்சங்கள் என்ன?
25 ஆண்டுகளுக்கு பின் செங்கோட்டை-மயிலாடுதுறை விரைவு ரயில் சேவை - சிறப்பம்சங்கள் என்ன?

தென்காசி மாவட்ட மக்களுக்கு தீபாவளி பரிசாக 25 ஆண்டுகளுக்கு பின் செங்கோட்டை - மயிலாடுதுறை விரைவு ரயில் சேவை தொடங்கியது.

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள செங்கோட்டையில் இருந்து, பாண்டிய நாடான மதுரை வழியாக சோழமண்டலமான தஞ்சை வழியாக மயிலாடுதுறைக்கு, இந்த ரயில் இன்று முதல் பயணத்தை துவக்கியுள்ள நிலையில் பயணிகள் எல்லையில்லா ஆனந்தம் அடைந்துள்ளனர்.

தென்காசி மாவட்டத்தில் இருந்து டெல்டா மாவட்டங்களை இணைக்கும் வகையில் பகல் நேர ரயில் வேண்டும் என்று விடுக்கப்பட்ட தொடர் கோரிக்கையின் வாயிலாக தற்போது இந்த இணைப்பு நிகழ்ந்துள்ளது. அதன்படி மயிலாடுதுறை - திண்டுக்கல் இடையே இயங்கி வரும் 16847/16848 ரயிலையும், மதுரை - செங்கோட்டை 06665/06662 ரயிலையும் ஒன்றாக இணைத்து ஒரே ரயிலாக இயக்க முடிவு செய்யப்பட்டது.

நேற்று தீபாவளி முதல் மயிலாடுதுறை - செங்கோட்டை விரைவு ரயில் சேவை (வண்டி எண் -16847) மயிலாடுதுறையிலிருந்து காலை 11.30 மணிக்கு தொடங்கப்பட்டு, இரவு 09.30 மணிக்கு செங்கோட்டையை வந்தடைந்தது. மறு மார்க்கத்தில் செங்கோட்டை - மயிலாடுதுறை விரைவு ரயில் (16848) செங்கோட்டையிலிருந்து இன்று காலை 07.00 மணிக்கு புறப்பட்டு மாலை 05.10 மணிக்கு மயிலாடுதுறை சென்று சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‌

இந்த ரயில்கள் குத்தாலம், ஆடுதுறை, கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூர், பூதலூர், திருவெறும்பூர் மஞ்சத்திடல், திருச்சி, மணப்பாறை, வையம்பட்டி, திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு, மதுரை, திருப்பரங்குன்றம், திருமங்கலம், கள்ளிக்குடி, விருதுநகர், திருத்தங்கல், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன் கோவில், பாம்பகோவில் சந்தை, கடையநல்லூர், தென்காசி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

தற்போது 14 பெட்டிகளுடன் இந்த ரயில்கள் இயக்கப்படுகிறது. குறிப்பாக, 25 ஆண்டுகளுக்கு முன்பு இதே வழித்தடத்தில் டெல்டா மாவட்டங்களையும், தென் மாவட்டங்களையும் இணைத்து இந்த ரயில் சேவையானது இயக்கப்பட்டது. ஆனால், அந்த சேவையானது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், பல்வேறு தரப்பு பொதுமக்கள் மற்றும் பயணிகளின் கோரிக்கையை ஏற்று 25 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது இந்த மயிலாடுதுறை - செங்கோட்டை விரைவு ரயில் சேவையானது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

இதனால் டெல்டா மாவட்ட மக்களும், தென் மாவட்ட மக்களும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணமுரளி, ரயில் பயணிகள் நலச்சங்கத்தினர் திமுக நகர செயலாளர் ரஹீம் உள்ளிட்ட ஏராளமான அதிமுக, திமுக கட்சி நிர்வாகிகள் இந்த தொடக்க விழாவில் கலந்து கொண்டு கொடி அசைத்து ரயில் சேவையை தொடங்கி வைத்தனர்.

தொடர்ந்து, 25 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த சேவை மீண்டும் தொடங்கப்பட்டதை கொண்டாடும் விதமாக பயணிகள், லோகோ பைலட், பொதுமக்கள் உள்ளிட்டவர்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. தற்போது, திரையில் வெளிவந்த வரலாற்று காவியமான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் கதைக்களம் கொண்ட தஞ்சை பகுதியை தென்காசியுடன் இந்த செங்கோட்டை - மயிலாடுதுறை ரயில் இணைப்பதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த செங்கோட்டை - மயிலாடுதுறை ரயில் பயணிக்கும் வழித்தடம் அனைத்தும் வரலாற்று சிறப்புமிக்க கோயில்களும், சுற்றுலா தலங்களும் அமைந்துள்ளன.

செங்கோட்டையை சுற்றியுள்ள நீர்வீழ்ச்சிகள் மற்றும் சுற்றுலாத்தலங்கள், பராக்கிரம பாண்டியனால் கட்டப்பட்ட தென்காசி காசி விஸ்வநாதர் கோயில், சங்கரநாராயண சுவாமி கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில், திருப்பரங்குன்றம் முருகன் கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல்லில் இறங்கி பழனி முருகன் கோயில் செல்ல வாய்ப்பு, திருச்சி மலைக்கோட்டை மற்றும் சுற்றுலா தலங்கள், தஞ்சை பெரிய கோயில், கும்பகோணம் சுற்றி உள்ள கோயில்கள், மயிலாடுதுறை அருகே அமைந்துள்ள ஆன்மிகத் தலங்கள் என பல்வேறு சிறப்புகள் கொண்ட ஊர்கள் செங்கோட்டை மயிலாடுதுறை இடையே அமைந்துள்ளதால் இந்த ரயில் நீட்டிப்பு பயணியர் இடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கெனவே செங்கோட்டையில் இருந்து டெல்டா மாவட்டங்கள் வழியாக தாம்பரத்திற்கு பகல் நேரத்தில் அறிவிக்கப்பட்ட அந்தியோதயா ரயில் இயக்கப்படாமல் கைவிடப்பட்டது. தற்போது பகல் நேரத்தில் டெல்டா மாவட்டங்களுக்கு இணைப்பு கிடைத்ததை மினி அந்தியோதயா ரயிலாக மக்கள் கருதுகின்றனர். இதில் செங்கோட்டையில் இருந்து மயிலாடுதுறைக்கு கட்டணமாக 150 ரூபாய் கட்டணமாக உள்ளது.

25 ஆண்டுகளுக்கு முன்பு மெயின் லைன் ரயில் பாதையில் சென்னை- செங்கோட்டை பயணிகள் ரயிலுக்கு பெரும் முக்கியத்துவம் இருந்தது. மீட்டர் கேஜ் ரயில் பாதைகள் அகல பாதையாக மாற்றும் பணிக்காக இந்த ரயில் 25 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டது. சென்னை -தஞ்சை- திருச்சி- மதுரை -ராஜபாளையம்- தென்காசி - ஆகிய வழித் தடங்களில் பகுதி- பகுதியாக அகல ரயில் பாதையாக மாற்றும் பணி நடைபெற்றதால், இந்த ரயில் தொடர்ந்து இருபத்தைந்து ஆண்டுகளாக இயக்கப்படவில்லை.

தற்பொழுது இந்த வழித்தடம் முற்றிலும் அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டு விட்டதால் இன்று முதல் மயிலாடுதுறையிலிருந்து செங்கோட்டைக்கு விரைவு ரயில் இயக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com