நந்திகிராம் மட்டுமல்ல... மேற்கு வங்க 2-ம் கட்ட தேர்தல் முக்கியத்துவம் பெறுவது ஏன்?

நந்திகிராம் மட்டுமல்ல... மேற்கு வங்க 2-ம் கட்ட தேர்தல் முக்கியத்துவம் பெறுவது ஏன்?
நந்திகிராம் மட்டுமல்ல... மேற்கு வங்க 2-ம் கட்ட தேர்தல் முக்கியத்துவம் பெறுவது ஏன்?

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாளை மறுநாள் (ஏப்.1) நடைபெற உள்ள நிலையில், இன்றுடன் பிரசாரம் நிறைவடைந்தது. இரண்டாம் கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள தொகுதிகள், அவற்றின் அரசியல் முக்கியத்துவத்தை சற்றே விரிவாகப் பார்ப்போம்.

எட்டு கட்டங்களாக நடைபெற உள்ள மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் முதற்கட்ட வாக்குப்பதிவு ஏற்கெனவே நிறைவடைந்துவிட்ட நிலையில், ஏப்ரல் 1-ல் நடக்கும் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 30 தொகுதிகளுக்கு நடைபெறுகிறது. 171 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் மேற்கு வங்க மட்டுமல்லாது, ஒட்டு மொத்த நாடும் உன்னிப்பாக கவனிக்கும் மிக முக்கியமான தொகுதி நந்திகிராம்.

'முடிந்தால் ஜெயித்து காட்டட்டும்' என பாஜக விடுத்த சவாலை ஏற்று தனது சொந்த தொகுதியான பவானி தொகுதியை விட்டுவிட்டு நந்திகிராமில் முதல்வர் மம்தா பானர்ஜி களம் காண்கின்றார். மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து, '50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மம்தா பானர்ஜி தோற்கடிக்கவில்லை என்றால் அரசியலை விட்டே விலகுவேன்' என சவால்விட்ட சுவேந்து அதிகாரி எதிரில் களம் காண்கின்றார்.

பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி பாஜகவின் அத்தனை முக்கிய தலைவர்களும் நந்திகிராம் தொகுதியில் சூறாவளி பிரசாரங்களில் ஈடுபட்டிருந்தனர். காரணம், இந்தத் தொகுதியின் வெற்றியை பாஜக கெளரவ விஷயமாக பார்க்கிறது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தொகுதிக்கு தான் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

அதேபோல் மேற்கு வங்க திரைப்பட நடிகரான ஹிரோன்மோய் சாட்டர்ஜி கரக்பூர் சதார் தொகுதியில் களம் காண்கின்றார். இவருக்கு ஆதரவாக பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் தீவிரமான பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தனர். எனவே, மிகவும் முக்கியமான தொகுதியாக பார்க்கப்படுகின்றது. முன்னாள் இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் அசோக் டிண்டா போட்டியிடும் மோய்னா தொகுதி, நாடாளுமன்ற உறுப்பினர் தீலீப் கோஷின் சோஹன்பால் தொகுதி ஆகியவையெல்லாம் முக்கியத்துவம் வாய்ந்த தொகுதிகளாக உற்று நோக்கப்படுகின்றன.

இவை ஒருபுறம் இருக்க, களத்தில் இருக்கும் 171 வேட்பாளர்களில் 43 பேர், அதாவது 25 சதவீதமான வேட்பாளர்கள் தங்களுக்கு எதிராக கடுமையான கிரிமினல் குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதில் 17 பேர் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள்; 8 பேர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள்; ஏழு பேர் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல 26 வேட்பாளர்கள் கோடீஸ்வரர்கள் ஆகவும், 101 வேட்பாளர்கள் பட்டபடிப்பு படித்தவர்களாகவும் உள்ளனர். மொத்த 171 வேட்பாளர்களின் 152 பேர் ஆண்களாகவும், வெறும் 19 பேர் மட்டும்தான் பெண்களாகவும் உள்ளனர். இதில் முதல்வர் மம்தா பானர்ஜியும் ஒருவர்.

வாக்குப்பதிவு நடைபெற உள்ள 30 தொகுதிகளில் ஆறு தொகுதிகள் அதிக பதற்றம் நிறைந்ததாக கண்டறியப்பட்டிருப்பதாலும், முதல்வர் மம்தா பானர்ஜி நேரடியாக களம் காணக்கூடியதாலும் அதிக முக்கியத்துவம் பெற்றிருக்கிறது, மேற்கு வங்கத்தில் இரண்டாம் கட்ட சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு.

முதற்கட்ட வாக்குபதிவின்போது குண்டுவெடிப்பு, வாக்குசாவடியைக் கைப்பற்றப்படுதல் ஆகியவை நடைபெற்றதால், கூடுதல் கவனத்துடன் தேர்தலை நடத்தும் முனைப்பில் இருக்கிறது தேர்தல் ஆணையம்.

- நிரஞ்சன் குமார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com