'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்!

'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்!

'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்!
Published on

டெல்லிக்கு சென்று பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த பின்னர், "சசிகலாவை 100 சதவீதம் அதிமுகவில் இணைக்க வாய்ப்பில்லை" என கூறியிருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. ஆனால், சசிகலாவை அதிமுகவில் இணைக்கவேண்டும் என்று கட்சியின் மற்றொரு தரப்பும், பாஜகவும் விரும்புவதுதான் இப்போது அரசியல் களத்தை பரபரப்பாக்கியுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலா, வரும் 27 ஆம் தேதி விடுதலையாகிறார். இதன் காரணமாக தற்போதே அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. சில அதிமுக தலைவர்களே சசிகலா மீதான விமர்சனத்தை குறைத்துகொண்ட போக்கையும், சிலர் ஆதரவாக பேசும் போக்கையும் இப்போதே பார்க்க முடிகிறது. இந்தச் சூழலில்தான், திமுகவை வீழ்த்துவதற்காக சசிகலாவையும் அதிமுகவில் இணைத்துக்கொள்ளவேண்டும் என்று 'துக்ளக்' ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி சில நாட்களுக்கு முன்பு சொன்ன கருத்து அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.

குருமூர்த்தியின் கருத்திற்கு பின்னர் அதிமுக - சசிகலா இணைப்பு நடைபெற அதிகளவில் வாய்ப்ப்பு உள்ளது என்ற பேச்சு அடிபட தொடங்கியது.

இந்தச் சூழலில்தான் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு சென்றுள்ளார். டெல்லியில் மோடி மற்றும் அமித் ஷாவுடன், சசிகலா குறித்த பேச்சு நிச்சயமாக இருக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கூறினார்கள். ஆனால், இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகவே எடப்பாடி பழனிசாமி இன்று பேசினார்.

இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும், இன்று பிரதமர் மோடியையும் சந்தித்தார். அதனைத்தொடர்ந்து டெல்லியில் இருக்கும் தமிழ்நாடு இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் அமித் ஷாவுடன் நடந்த ஆலோசனைக் குறித்து கேட்டபோது, “அமித் ஷா உடன் அரசியல் தொடர்பாக எதுவும் பேசவில்லை” என்று கூறினார். சசிகலாவை அதிமுகவில் இணைக்க வாய்ப்பிருக்கிறதா என்ற கேள்விக்கு பதிலளித்த முதல்வர், “ஜெயலலிதா இருக்கும்போது சசிகலா அதிமுகவிலேயே இல்லை. அதனால் இனி சசிகலாவை அதிமுகவில் இணைக்க 100 சதவீதம் வாய்ப்பு இல்லை. தினகரனின் கட்சியில் இருந்த பலரும் அதிமுகவில் இணைந்துவிட்டனர். இப்போது அவரே தனியாகத்தான் இருக்கிறார்” என்று சசிகலா குறித்த தனது நிலைப்பாட்டை உறுதிப்படுத்தினார்.

எடப்பாடி பழனிசாமியின் இந்த அதிரடி முடிவு பற்றி பேசிய மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் “தமிழகத்தில் பலமுறை சசிகலாவை இணைக்க மாட்டோம் என்று சொன்னாலும், டெல்லியில் சென்று அவர் அழுத்தமாக சொல்லக் காரணம், டெல்லியில் சசிகலா இணைப்புப் பற்றி பேசப்பட்டுள்ளது என்பதுதான். டெல்லியில் பாஜக தலைவர்களிடம், சசிகலா இணைப்பு பற்றிய தனது நிலைப்பாட்டை எடப்பாடி பழனிசாமி உறுதிப்படுத்தியுள்ளார் என்பது இதன் மூலமாக தெரிகிறது. ஆனால், பாஜகவின் நிலைப்பாடு சசிகலாவை இணைக்கவேண்டும் என்பதுபோல இருந்திருக்கும் என்பதையும் நம்மால் யூகிக்க முடிகிறது.

அதிமுகவில் இரண்டு பிளவுகள் உள்ளன. ஒன்று கொங்கு மண்டலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் உள்ள குழு, இவர்கள் சசிகலா எதிர்ப்பாளர்களாக உள்ளனர். ஏனென்றால் அவர்களுக்கு சசிகலா ஆதரவு தேவையில்லை. மற்றொரு குழுவினர் தென்மாவட்டங்களை சேர்ந்தவர்கள். சசிகலாவுக்கு தஞ்சை முதல் திருநெல்வேலி வரை தென்மாவட்டங்களில் நல்ல செல்வாக்கு உள்ளது. எனவே அந்தப் பகுதிகளில் வெற்றிபெற அவரின் துணை வேண்டும் என்று அதிமுகவின் மற்றொரு குழு நினைக்கிறது. இதனால் சசிகலாவுடன் சமரசம் செய்துகொள்ளவேண்டும் என்று  அதிமுகவின் ஒரு தரப்பும், சமரசமே வேண்டாம் என்று மற்றொரு தரப்பும் நினைக்கிறது.

கடந்த நாடாளுமன்ற, உள்ளாட்சி தேர்தல்களில் 60 முதல் 70 தொகுதிகள் வரை பல இடங்களில் அதிமுகவின் தோல்விக்கு காரணம் அமமுகவாக இருந்தது. இதனால், சசிகலாவை இணைக்கவேண்டும் என ஒரு தரப்பும், அவரை இணைக்கக்கூடாது என மற்றொரு தரப்பும் விரும்புகிறது. சசிகலா வெளிவந்தவுடன் பல காட்சிகள் மாறும்” என்கிறார்.

"சிறையிலிருந்து வெளிவரும் சசிகலாவிடமிருந்து, தன்னை காப்பாற்றிக்கொள்ளவே, எடப்பாடி பழனிசாலி டெல்லிக்கு சென்று பிரதமர் மற்றும் பாஜக தலைவர்களை சந்தித்துள்ளார்" என்று ஒரு தடாலடி கருத்தை இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

'2017-இல் முதல்வரானது முதல் கட்சியில் இருந்த பல்வேறு சிக்கல்களையும் சமாளித்து, எதிர்த்து குரல்கொடுத்த பலரையும் சரிக்கட்டி, தினகரனையும் கட்சியை விட்டு வெற்றிகரமாக வெளியேற்றி, இறுதியாக முரண்டு பிடித்துக்கொண்டிருந்த ஓ.பன்னீர்செல்வத்தையும் அமைதியாக்கிவிட்டு தன்னை முதல்வர் வேட்பாளராக அதிமுகவினர் அனைவராலும் அறிவிக்க வைத்தார் எடப்பாடி பழனிசாமி. அவர் ஆரம்பம் முதல் சசிகலாவையும், தினகரனையும் துணிந்து எதிர்க்க காரணம் பாஜக உடன் நிற்கிறது என்ற நம்பிக்கைதான். ஆனால் இப்போது அதே பாஜகவே சசிகலாவுக்கு ஆதரவாக மாறியதை எடப்பாடி பழனிசாமியால் ஜீரணிக்க முடியவில்லை. ஒருவேளை குருமூர்த்தி அல்லது பாஜகவின் பேச்சை கேட்டு சசிகலாவை அதிமுகவில் இணைத்தால், இத்தனை நாள் பட்ட அத்தனை கஷ்டங்களும் வீணாகிப்போகும் என்ற ஆதங்கத்தில்தான் எடப்பாடி இன்று டெல்லியில் தனது நிலைப்பாட்டை உறுதிப்படுத்தியுள்ளார்' என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

ஒருவேளை பாஜகவின் பேச்சைக்கேட்டு இப்போது சசிகலாவை அதிமுகவில் இணைத்தால், நாளை ஒட்டுமொத்த அதிமுகவும் சசிகலாவின் வசமாகிப்போகும் என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்தவர்தான் எடப்பாடி பழனிசாமி. சசிகலாவை அதிமுகவுக்கு கொண்டுவரும் நாள், தனது அரசியல் வாழ்க்கைக்கான அஸ்தமன நாள் என்பதை தெரிந்துகொண்டுதான், சசிகலாவை 100 சதவீதம் அதிமுகவுக்குள் கொண்டுவரமாட்டோம் என்கிறார்கள். ஆனால், சுமார் 15 மாவட்டங்களில் அதிமுகவின் வெற்றியை பாதிக்கும் காரணியாக அமமுக அச்சுறுத்தி நிற்கிறது. அதனால் அப்பகுதிகளை சேர்ந்த அதிமுக தலைவர்களின் மனநிலை அவரை கட்சிக்குள் இணைக்கவேண்டும் என்பதாகவே உள்ளது.

சசிகலா சிறைமீண்டு வருவதற்கு முன்பே, அவரை இணைக்க வேண்டும் அல்லது இணைக்கக்கூடாது என்று அதிமுகவில் இரு பிரிவுகள் செயல்பட தொடங்கிவிட்டது. இணைக்கவேண்டும் என்பவர்களுக்கு கூடுதல் பலமாக, பாஜகவும் சசிகலா ஆதரவு மனநிலைக்கு வந்துள்ளது. சசிகலாவின் விடுதலைக்கு பிறகு பல காட்சிகளும் மாறும் என்பதற்க்கு முன்னோட்டமே இந்த சலசலப்புகள்.

- வீரமணி சுந்தர சோழன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com