ஸ்டார்ட் அப் இளவரசிகள் 3: சாண்டி லெர்னர் - வலைப்பின்னல் மகாராணியின் எழுச்சி, வீழ்ச்சி!

ஸ்டார்ட் அப் இளவரசிகள் 3: சாண்டி லெர்னர் - வலைப்பின்னல் மகாராணியின் எழுச்சி, வீழ்ச்சி!
ஸ்டார்ட் அப் இளவரசிகள் 3: சாண்டி லெர்னர் - வலைப்பின்னல் மகாராணியின் எழுச்சி, வீழ்ச்சி!

தொழில்நுட்ப உலகின் முக்கிய நிறுவனங்களில் ஒன்று 'சிஸ்கோ' (Cisco) என்பது பெரும்பாலனோருக்கு தெரிந்திருக்கும். விஷயம் அறிந்தவர்களுக்கு ரவுட்டர் (Router) உள்ளிட்ட வலைப்பின்னல் (Network) விஷயங்களில் சிஸ்கோ முன்னணி நிறுவனம் என்பதும் தெரிந்திருக்கும். ஆனால், இணைய வளர்ச்சியில் சிஸ்கோவின் எத்தனை முக்கியமானது என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் என்று தெரியவில்லை.

இணைய வரலாற்றில் சிஸ்கோவின் இடம் முக்கியமானது என்பது மட்டும் அல்ல, இணைய வளர்ச்சியில் வேறு எந்த நிறுவனத்தையும் விட அதிக பங்களிப்பை செய்த நிறுவனமாகவும் அது விளங்குகிறது. அதிலும் குறிப்பாக, இணையத்தின் பரவலாக்கத்தில் சிஸ்கோவின் பங்கு கணிசமானது.

இணையம் பரவலாகத் துவங்கிய காலத்தில் அறிமுகமான சிஸ்கோ, இணையத்தோடு சேர்ந்து தானும் வளர்ந்து மாபெரும் தொழில்நுட்ப நிறுவனமாக உருவாகியுள்ளது. இன்று வர்த்தக உலகின் ஜாம்பவான்களில் ஒன்றாக அறியப்படும் 'சிஸ்கோ' ஒரு ஸ்டார்ட் அப் ஆக துவங்கியது என்பது பலரும் அறியாதது. அதேபோல அந்த ஸ்டார்ட் அப் நிறுவனத்தை உருவாக்கிய சாண்டி லெர்னர் (Sandy Lerner) கதையும் பலரும் அறியாதது.

ஸ்டார்ட் அப் துறையினருக்கான வாழ்க்கைப் பாடத்தையும் கொண்டுள்ள லெர்னரின் வெற்றிக்கதை ஊக்கம் அளிப்பது மட்டும் அல்ல, சுவாரஸ்யமான காதல் கதையும் கொண்டிருப்பதோடு, கிளைக்கதையாக சர்ச்சை வரலாற்றையும் உள்ளடக்கியிருக்கிறது.

லெர்னரின் தொழில்முனைவு பயணம், காதல் கதை இரண்டுமே அவரது கல்லூரி காலத்தில் இருந்து துவங்குகிறது. அமெரிக்காவின் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் ஒன்றான ஸ்டான்போர்டில் முதுகலை படித்துக்கொண்டிருந்த போதுதான் அவர் தனது காதலரை சந்தித்தார். அதன் பிறகு இருவரும் வாழ்க்கைப் பயணத்தில் மட்டும் அல்ல, தொழில்முனைவு பயணத்திலும் இணைந்து செயல்பட்டனர்.

1981-ம் ஆண்டு ஸ்டான்போர்டு பல்கலை.யில் புள்ளியியல் மற்றும் கம்ப்யூட்டர் அறிவியல் பாடத்தில் முதுகலைப் படிப்பில் சேர்ந்தார் லெர்னர். அதற்கு முன் அவர் அரசியில் விஞ்ஞான பாடத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றிருந்தார். அரசியல் விஞ்ஞானத்தில் ஆர்வம் இருந்ததால் இதே துறையில் கல்வியாளராக விரும்பினார். ஆனால், பொருளாதார நோக்கில் அது பலனளிக்காது என உணர்ந்து, பொருளாதாரம் சார்ந்த துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

முதுகலைப் பட்டத்தின்போதுதான் லெர்னருக்கு கம்ப்யூட்டர் உலகம் அறிமுகமாக, அது அவரை சொக்க வைத்தது. அந்த காலகட்டம் (1970கள்) தான் பர்சனல் கம்ப்யூட்டர்கள் அறிமுகம் துவங்கி பயன்பாட்டிற்கு வரத் தொடங்கியிருந்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். கம்ப்யூட்டர்கள் மீதிருந்த ஈடுபாடு காரணமாக அவர் கம்ப்யூட்டர் லேபிற்கு அடிக்கடி சென்று வந்தார். இந்த ஆர்வம் அவருக்கு லேபின் மேலாளர் எனும் பொறுப்பை பெற்றுத் தந்தது.

கம்ப்யூட்டர் ஆர்வத்தை தனது முதுகலை படிப்பிற்கான ஆய்வுக்கும் பயன்படுத்திக்கொண்டார். கம்ப்யூட்டர் உலகில் மேலும் மூழ்கும் விருப்பதோடு, அடுத்ததாக ஸ்டான்போர்டு பல்கலை.யில் சேர்ந்தார். இதுபோன்ற படிப்புகளில் மாணவிகள் சேர்வது அரிதாக இருந்த நிலையில், லெர்னர் கம்ப்யூட்டர்கள் செயல்பாட்டில் ஆர்வத்தையும் திறமையையும் வெளிப்படுத்தினார்.

அந்தக் காலகட்டத்தில் பேராசிரியர்கள் பலருக்கே கம்ப்யூட்டர் இயக்கம் பற்றி தெரியாமல் இருந்தது. இத்தகைய பேராசிரியர்களுக்கு கம்ப்யூட்டர் நுட்பங்களை சொல்லிக் கொடுப்பதிலும் அவர் ஆர்வம் காட்டினார். இதன் பயனாக அங்கிருந்த கம்ப்யூட்டர் மையத்தின் இயக்குனராக வேலை கிடைத்தது.

இதனிடையே லியோனார்டு போஸாக் (Leonard Bosack) எனும் சக மாணவரை காதலிக்கத் துவங்கியிருந்தார். போஸாக்கிற்கு வேறு ஒரு துறையின் கம்ப்யூட்டர் பிரிவில் வேலை கிடைத்தது.

பணிச் சூழலில் இருவரது காதலும் வளர்ந்தாலும், அதில் ஒரு சின்ன சிக்கல் இருந்தது. இருவரும் பணியாற்றிய துறைகள் ஒரே வளாகத்தில் இருந்தாலும், இரண்டும் 500 அடிகள் தொலைவில் அமைந்திருந்தன. எனவே, பேசிக்கொள்வதாக இருந்தாலும் சரி, கம்ப்யூட்டர் செயல்பாடு தொடர்பான விஷயங்களை பரிமாறிக்கொள்வதாக இருந்தாலும் சரி, ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு சென்றாக வேண்டும். அதோடு, இ-மெயில் பரிமாற்றத்திலும் சிக்கல் இருந்தது.

இரண்டு மையங்களிலும் பயன்படுத்தப்பட்ட கம்ப்யூட்டர் வலைப்பின்னல் வேறு வேறாக இருந்ததால், இரண்டுக்கும் இடையே இமெயில் அனுப்புவது கடினமாக இருந்தது. லெர்னரும், போஸாக்கும் கருத்துப் பரிமாற்றம் செய்துகொள்ள விரும்பியதோடு, மென்பொருள்களையும் எளிதாக பரிமாறிக்கொள்ள விரும்பினர். இருவருக்குமே கம்ப்யூட்டரில் ஆர்வமும், திறமையும் இருந்ததால் இந்த நடைமுறை பிரச்னைக்கு தொழில்நுட்பம் மூலம் தீர்வு காண முற்பட்டனர்.

1980-களில் இணைய வசதி அறிமுகம் ஆகியிருந்ததே தவிர இன்னமும் பரவலாகியிருக்கவில்லை. கம்ப்யூட்டர்களின் வலைப்பின்னலான இணையம் அப்போது பெரும்பாலும் ஆய்வுப் பணிகளுக்காக மட்டுமே பயன்பட்டு வந்தது. கல்வி நிறுவனங்களில் இருந்த கம்ப்யூட்டர் வலைப்பின்னல்கள் தனித்தீவுகள் போலவே இருந்தன.

இணையம் என்பதே வலைப்பின்னல்களின் வலைப்பின்னல்தான் என்றாலும், வேறு வேறு அமைப்புகளை கொண்ட வலைப்பின்னல்களை இணைப்பது எளிதாக இருக்கவில்லை. கம்ப்யூட்டர் வலைப்பின்னல்களை பரஸ்பரம் இணைக்கும் 'டிசிபி' எனும் தொழில்நுட்ப வழிமுறை கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும், நடைமுறையில் சிக்கல்கள் இருந்தன. அதோடு, ஒரு வலைப்பின்னலில் கம்ப்யூட்டரை இணைப்பதும் கூட கடினமாக இருந்தது.

கம்ப்யூட்டர்களை கையாள்வதில் தனித்திறமை பெற்றிருந்த போஸாக்கிற்கு, இரண்டு வெவ்வேறு கம்ப்யூட்டர் வலைப்பின்னல்களை இணைப்பதை எளிதாக்குவதன் மூலம் இந்த பிரச்னைக்கு தீர்வு காணலாம் எனத் தோன்றியது. இதற்கான மூல தொழில்நுட்பம் ஸ்டான்போர்டு பல்கலை. ஆய்வாளர்களாலேயே உருவாக்கப்பட்டிருந்தது என்பதையும் அறிந்திருந்தார்.

அந்த தொழில்நுட்பத்தை கொண்டு, தங்கள் துறைகளுக்கு இடையே தொடர்பை ஏற்படுத்தினார். இதனால், காதலர்களிடையே இ-மெயில் பரிமாற்றம் எளிதானதோடு, மென்பொருள் கோப்புகளையும் எளிதாக பரிமாறிக்கொள்ள முடிந்தது. அப்படியே பல்கலை. வளாகத்தில் இருந்த நூற்றுக்கணக்கான கம்ப்யூட்டர்களை இணைத்து எல்லாவற்றையும் ஒரு வலைப்பின்னல் கீழ் கொண்டு வந்து, தகவல் பரிமாற்றத்தை எளிதாக்கினார்.

பல்கலைக்கழக வளாகத்தில் இருந்த வெவ்வேறு துறைகள் கம்ப்யூட்டர் வழியே எளிதாக தொடர்புகொள்ள முடிந்ததை சின்ன அற்புதம் என்றே சொல்ல வேண்டும். போஸாக்கும், லெர்னரும் இதை சாதனையாக மட்டும் பார்க்கவில்லை, அருமையான வர்த்தக வாய்ப்பாகவும் பார்த்தனர். கம்ப்யூட்டர் வலைப்பின்னல்களை இணைக்கும் நுட்பம் ரவுட்டர்கள் என்று குறிப்பிடப்பட்டன. இரண்டு வலைப்பின்னல்களை பேசவைக்கும் மென்பொருள் அம்சங்கள் கொண்ட ரவுட்டர்களை தயாரிக்கும் நிறுவனங்களும் சந்தையில் இருக்கவே செய்தன. ஆனால், ஒவ்வொரு ரவுட்டரும் ஒரு வலைப்பின்னலுக்கானதாக இருந்தது.

ஸ்டான்போர்டு ஆய்வாளர்கள் உருவாக்கிய ரவுட்டரோ பலவிதமான வலைப்பின்னல்களை இணைக்கக் கூடிய பல அடுக்குகளை கொண்டதாக இருந்தது. இதை வர்த்தக நோக்கில் கொண்டு வந்தால் பெரிய அளவில் வெற்றி கிடைக்கும் என இருவரும் நினைத்தனர். இதைச் செயலாக்கும் எண்ணத்துடன் சொந்த நிறுவனத்தை துவக்கினர்.

1985-ல் சிஸ்கோ சிஸ்டம்ஸ் (Cisco Systems) எனும் பெயரில் களமிறங்கினர். சிஸ்கோ பெயர் காரணம் தொடர்பாக பல்வேறு சுவாரஸ்யமான கதைகள் இருக்கின்றன. லெர்னர் தான் பிறந்து வளர்ந்த சான்பிரான்சிஸ்கோ மீதான ஈடுபாடு காரணமாக, நகரின் ஒரு பகுதியை நிறுவனப் பெயராக்கிக் கொண்டார் என்பதாக ஒரு கதை அமைகிறது என்றால், இன்னொரு கதையோ, இந்த முழுப் பெயரே தவறுதலாக சுருக்கமாகிவிட்டது என்கிறது.

நிறுவனம் துவங்கிய ஓராண்டில், அதாவது 1986-ல் அதன் முதல் தயாரிப்பான ரவுட்டரை சந்தைக்கு கொண்டு வந்தனர். கம்ப்யூட்டர்களை வலைப்பின்னலை இணைக்கும் ரவுட்டர்களுக்கான தேவையில் சிஸ்கோ நிறுவனர்களுக்கு மிகுந்த நம்பிக்கை இருந்தாலும், மற்றவர்கள் இப்படி நினைக்கவில்லை. குறிப்பாக முதலீட்டாளர்கள் இந்த எண்ணத்தை சந்தேகித்தனர்.

ஆனால், இணைய உலகம் இத்தகைய ஓர் இணைப்பு சாதனத்திற்காக காத்திருந்தது. விளைவு, முதல் ஆண்டிலேயே சிஸ்கோ ரவுட்டர்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. வர்த்தக நிறுவனங்கள் வலைப்பின்னல் அமைப்பதில் ஆர்வம் காட்டின. சிஸ்கோ ரவுட்டர்களுக்கான தேவை பெருகியது. வலைப்பின்னல்களை இணைப்பதிலும், வலைப்பின்னல்களில் கம்ப்யூட்டர்களை இணைப்பதிலும் உதவிய ரவுட்டர் சாதனங்களுக்கான தேவை பெருகியது.

1990களின் துவக்கத்தில், வைய விரிவு வலை (WWW - World Wide Web) அறிமுகமானபோது இணையம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்த நிலையில், வலைப்பின்னல் சாதனங்களுக்கான தேவை உலகமெங்கும் அதிகரித்து சிஸ்கோ நிறுவனத்தின் பெரும் வெற்றிக்கு வழிவகுத்தது. இன்றளவும் வலைப்பின்னல் துறையில் சிஸ்கோ அசைக்க முடியாத நிறுவனமாக இருக்கிறது.

இதனிடையே லெர்னரும், போஸாக்கும் திருமணம் செய்துகொண்டு கணவன், மனைவியாக சிஸ்கோ நிறுவனத்தை நடத்தினர். போஸாக் தொழில்நுட்ப விஷயங்களை கவனித்துக்கொள்ள, நிறுவனத்தின் மற்ற துறைகள் அனைத்தையும் லெர்னர் கவனித்துக்கொண்டார்.

ஆனால், இந்த வெற்றிப் பயணத்தில் எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டு, தான் உருவாக்கிய நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்படும் நிலை வரும் என லெர்னர் நிச்சயம் எதிர்பார்த்திருக்கவில்லை. ஆனால், 1990களின் துவக்கத்தில் அதுதான் நிகழ்ந்தது.

சிறிய நிறுவனமான துவங்கிய சிஸ்கோ வளர்ந்து வரும் ரவுட்டர்களை சந்தையை கைப்பற்றும் அளவுக்கு வேகமாக வளர்ச்சி காணத் துவங்கியிருந்தாலும், அதற்கு ஈடுகொடுக்க கூடிய மூலதனம் இல்லை. எனவே, நிறுவனர்கள் முதலீட்டாளர்களை நாட வேண்டியிருந்தது. சிஸ்கோவின் எதிர்கால வளர்ச்சியால் ஈர்க்கப்பட்ட டான் வேலன்டைன் எனும் வென்சர் கேபிடல் நிறுவனம் 'சிஸ்கோ'வில் முதலீடு செய்தது.

வேலன்டைன் நிறுவனம் அளித்த ஒப்பந்தத்தில் இருந்த கட்டுப்பாடு அம்சத்தை லெர்னரும், அவரது கணவரும் சரியாக கவனிக்கவில்லை. நான்கு ஆண்டுகளுக்கு பின், சிஸ்கோ நிறுவனம் பொது பங்குகளை வெளியிட தயாரானது. அப்போது நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகள் லெர்னர் வசம் ஒப்படைக்கப்பட்டாலும், நிர்வாகம் அவரிடம் ஒப்படைக்கப்படவில்லை. தனியே சி.இ.ஓ நியமிக்கப்பட்டதோடு, அடுத்த சில மாதங்களில் லெர்னர் நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

சிஸ்கோ நிறுவனம் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு பெரிய அளவில் மதிப்பீட்டை பெறும் நிலையில், அதன் நிறுவனரான லெர்னருக்கு அதில் இடமில்லாமல் போனது. இதனால் லெர்னர் மனதுக்குள் உடைந்து போனார். மனைவிக்கு ஆதரவாக போஸாக்கும் நிறுவனத்தில் இருந்து விலகினார். (இருவரும் பின்னர் விவாகரத்து பெற்றனர்).

சிஸ்கோ நிறுவனராக லெர்னர் தொடர்ந்திருந்தால் இன்று பில்கேட்ஸுக்கு நிகராக பேசப்பட்டிருப்பார். ஆனால், முதலீடு நிறுவனத்திடம் தனது பிடியை விட்டுக்கொடுத்ததால் சொந்த நிறுவனத்தில் இருந்தே அந்நியமானார். இந்தப் பின்னடைவில் இருந்து விடுபட்டு, பின்னர் அவர் வேறு ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனத்தை துவக்கியதோடு, பண்ணை - விவசாயம் போன்றவற்றிலும் ஈடுபட்டு வருகிறார். மேலும் ஆங்கில எழுத்தாளர் ஜேன் ஆஸ்டின் மீதான தனது ஈடுபாட்டை வெளிப்படுத்தும் வகையில் அவரது புகழ்பெற்ற நாவலின் தொடர்ச்சியையும் எழுதி வெளியிட்டிருக்கிறார்.

இருப்பினும், சொந்த நிறுவனம் கைநழுவிய வடு அவருக்குள் ஆறாமல் இருக்கவே செய்கிறது. இதைக் கட்டுரை ஒன்றிலும் அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். முதலீட்டாளர்கள் உங்கள் நண்பர் இல்லை எனும் தலைப்பில், 'இன்க்' வர்த்தக பத்திரிகையில் எழுதிய கட்டுரையில் ஸ்டார்ட் அப் நிறுவனர்கள் முதலீடு நாடிச்செல்லும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.

முதலீட்டாளர்கள் மீது இப்படி பாய்ச்சல் காட்டும் லெர்னர் மீதும் ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது. சிஸ்கோவின் ரவுட்டர் உருவாக்கம் தொடர்பான சர்ச்சை கதையாக அது அமைகிறது. கம்ப்யூட்டர்கள் வலைப்பின்னலை இணைக்கும் ரவுட்டர்களை சிஸ்கோ உருவாக்கியதாக பரவலாக கருதப்பட்டாலும், உண்மையில் இந்த நுட்பம் ஸ்டான்போர்டு பல்கலை.யில் உருவாக்கப்பட்டது. இந்த தொழில்நுட்பத்தை மேம்படுத்தி வர்த்தக நோக்கில் கொண்டு வந்ததே சிஸ்கோவின் சாதனையாக கருதப்படுகிறது.

ஆனால், சிஸ்கோவை துவக்கியபோது ஸ்டான்போர்டிடம் இதற்கான அனுமதி கேட்கப்பட்டது. ஸ்டான்போர்டு பல்கலை. இதற்கு மறுத்துவிட்டது. இதையும் மீறி சிஸ்கோ நிறுவனர்கள் பல அடுக்கு ரவுட்டர்களை சந்தைக்கு கொண்டு வந்தனர். இது பெரிய பிரச்னையாகி, இறுதியில் சமர்ச தீர்வு உண்டானது. அதன்படி, சிஸ்கோவிற்கு ஸ்டான்போர்டு ரவுட்டர் நுட்பத்தின் உரிமத்தை அளித்து அதற்கான உரிமத்தொகையையும் பெற்றுக்கொண்டது. ரவுட்டர்களை சலுகை விலையில் அளிக்கவும் ஒப்புக்கொண்டது.

ஸ்டான்போர்டு பல்கலை. ஆய்வாளர்கள் உருவாக்கிய நுட்பத்தை அனுமதி பெறாமல் சந்தைக்கு கொண்டு வந்தனர் என்பதும், இதை தங்கள் சொந்த நுட்பமாக அறிமுகம் செய்தனர் என்பதும் சிஸ்கோ நிறுவனர்கள் மீதான விமர்சனமாக இருக்கிறது.

இந்த விமர்சனம் தொடர்பாக ஒரு பேட்டியில் லெர்னர், ரவுட்டர் தொழில்நுட்பத்தை ஸ்டான்போர்டு பல்கலை. பிணைக்கைதி போல வைத்திருந்தது, அதை நாங்கள் வர்த்தக நோக்கில் விடுவித்தோம் என்று கூறியிருந்தார். நிச்சயம் லெர்னர் மற்றும் சிஸ்கோவின் சாதனை அது தான். ஸ்டான்போர்டு போன்ற பல்கலைக்கழங்கள் ரவுட்டர் நுட்பத்தை வர்த்தக நோக்கில் சந்தைப்படுத்த முடியாது எனும் நிலையில், அந்த நுட்பத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து சரியான நேரத்தில், சரியான முறையில் அதை வர்த்தக உற்பத்திக்கு கொண்டு வந்ததை லெர்னரின் தொலைநோக்கு பார்வை என்றே கருத வேண்டும். அந்த வகையில் அவர் முன்னோடி தொழில்முனைவோராக மின்னுகிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com