நெருங்கிவிட்டது, ஐபிஎல் திருவிழா! இன்னும் 14 நாள்தான். வரும் 23 ஆம் தேதி முதல், பொழியப் போகிறது ரன் மழை. இந்த வருட ஐபிஎல் போட்டியிலும், கணிக்க முடியாத பல வீரர்கள் சத்தமில்லாமல் சாதிக்க இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர், சந்தீப் லமிச்சானே
(Sandeep Lamichhane). இன்னும் 19 வயதை நிரம்பாத சந்தீப், நேபாளத்தின் இளம் சுழல்!
கடந்த ஐபிஎல் தொடரில் டெல்லி அணியில் இடம்பிடித்திருந்த இவர், அதிக விக்கெட் வீழ்த்தவில்லை என்றாலும் வருங்காலம் அவருக்குக் காத்திருக்கிறது என்று கணித்திருந்தார்கள் கிரிக்கெட் வல்லுனர்கள். நேபாளத்தில் இருந்து ஐபிஎல்-லுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே வீரரும், இவர் தான்!
‘’14 வயசுலயே சந்தீப்கிட்ட திறமை இருப்பதைக் கண்டு பிடிச்சவர் கோச், புபுடு தசநாயகே. பிறகுதான் ஸ்பின்ல அதிகமாக பயிற்சி பெற்றார் சந்தீப். இன்னைக்கு கவனிக்கத்தக்க அளவுல வளர்ந்திருக்கார்’’ என்கிறார் நேபாள கிரிக்கெட் வீரர் ஒருவர்.
2016 ஆம் ஆண்டு ஹாங்காங்கில் நடந்த டி20 தொடரில் பங்கேற்ற சந்தீப்பை, கவனித்தார், ஆஸ்திரேலியே அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க். ‘’ஆஹா... உங்கிட்ட என்னமோ இருக்குப்பா. சிட்னி வர்றியா? கிளப் கிரிக்கெட்ல விளையாடினா முன்னேறலாம்’’
என்று அழைத்திருக்கிறார்.
நேபாள அணியின், 19 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் சேர்க்கப்பட்ட சந்தீப், பங்களாதேஷில் 2016 ஆண்டு நடந்த உலகக் கோப்பை தொடரில் பங்கேற்றார். இதுதான் சந்தீப்புக்கு டர்னிங் பாயின்ட். அந்த தொடரில் அதிக விக்கெட் வீழ்த்தியவர் சந்தீப் மட்டுமே. 6 போட்டிகளில் 14 விக்கெட்! பிறகு சீனியர் அணியில் இடம் பிடித்தார்.
நேபாளம், இன்னும் கத்துக்குட்டி அணியாக இருந்தாலும் சந்தீப் அந்த அணியின் ஹீரோவாகி இருக்கிறார். உலகம் முழுவதும் நடக்கும் லீக் போட்டிகளுக்காக பறந்து கொண்டே இருக்கிறார், இப்போது!
கரீபியன் லீக் போட்டி, பங்களாதேஷ் பிரீமியர் லீக், பாகிஸ்தான் பிரிமீயர் லீக், குளோபல் டி20 கனடா, ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் என இந்தச் சுழல் இப்போது பிசி! ஆஸ்திரேலியாவின் பிக்பாஷ் தொடரில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்காக, ஒப்பந்தம் செய்யப்பட்ட சந்தீப், அங்கும் திறமையை நிரூபிக்க, கிரிக்கெட் வீரர்களின் கவனிப்பு இவர் பக்கம் திரும்பியிருக்கிறது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் வக்கார் யூனிஸ் கூறும்போது, ‘’2017ஆம் ஆண்டு சந்தீப்பை சந்தித்தபோது, அவருக்கு கண்டிப்பாக வாய்ப்புக் கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன். அதன்படி அந்த வருடமே பாகிஸ்தான் பிரீமியர் லீக் தொடரில் பங்கேற்க அழைத்தேன். அப்போது தேசிய அணியில் விளையாட வேண்டியிருந்ததால் பங்கேற்கவில்லை. அவர் தனித்துவமாக பந்துவீசும் ஸ்பெஷல் பவுலர். அவரிடம், திறமை, உறுதி, ஈடுபாடு, விக்கெட் வீழ்த்த வேண்டும் என்கிற வெறி எல்லாமே இருக்கிறது’’ என்கிறார் அவர்.
’’எங்க வீட்டுல நான் நல்லா படிச்சு, ஏதாவது வேலைக்கு போயி சம்பாதிக்கணும்னு எதிர்பார்த்தாங்க. ஆனா எனக்கு வேற ஐடியா இருந்தது. கிரிக்கெட் அகாடமியில சேர்ந்து பயிற்சி பெற்றேன். அங்க நிறைய பேர் பயிற்சிக்கு வருவாங்க. அதனால அங்க எனக்கு வாய்ப்பு அதிகம் கிடைக்காது. அதனால அதிக நேரம் பயிற்சி பெறலாம்னு மதியம் 12 மணிக்கே மைதானத்துக்குப் போயிருவேன். அப்படித்தான் ஆரம்பத்துல விளையாடினேன். எங்க அக்கா வீட்டு முன்னால நின்னு பக்கத்துவீட்டு பையனோட எப்பவும் கிரிக்கெட் விளையாடுவேன். அந்த பையனோட அம்மா வந்து, ‘கிரிக்கெட், கிரிக்கெட்டுன்னு என் பையன் வாழ்க்கையை கெடுத்திராத’ன்னு சொல்லிட்டுப் போவாங்க. இப்ப ’அதே அம்மா
என்கிட்ட வந்து அவங்கூட கிரிக்கெட் விளையாடுப்பா’ன்னு சொல்லிட்டுப் போறாங்க. இதுதான் கிரிக்கெட் தந்த மாற்றம்’’ என்று புன்னகைக் கிறார் சந்தீப் லமிச்சானே.
இந்த ஐபிஎல் தொடரில் சந்தீப் அடுத்தக் கட்டத்துக்கு பாய்வார் என்கிறார்கள் கிரிக்கெட் விமர்சகர்கள்.
திறமைக்கு மரியாதை!