'கிரிக்'கெத்து 11: சச்சினின் பேட்டிங் சம்பவங்களை ரசித்திருப்போம்... இது பவுலிங் 'கெத்து'!

'கிரிக்'கெத்து 11: சச்சினின் பேட்டிங் சம்பவங்களை ரசித்திருப்போம்... இது பவுலிங் 'கெத்து'!
'கிரிக்'கெத்து 11: சச்சினின் பேட்டிங் சம்பவங்களை ரசித்திருப்போம்... இது பவுலிங் 'கெத்து'!

இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான், உலக கிரிக்கெட்டின் பேட்டிங் மாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் எத்தனையோ போட்டிகளில் தனதுகெத்தான பேட்டிங்கால் பல முறை வெற்றிகளை தேடிக் கொடுத்து இருக்கிறார். ஆனால், அதே சச்சின் பவுலிங்கிலும் கெத்து காட்டிய தருணங்கள் நிறைய இருக்கிறது. ஆனால், காலப்போக்கில் சச்சினின் பேட்டிங் பேசப்பட்ட அளவுக்கு, அவர் பந்துவீச்சால் இந்தியா வெற்றிப்பெற்ற தருணங்களை அவரது தீவிர ரசிகர்கள் மட்டுமே இன்னமும் நினைவு வைத்திருப்பார்கள். அப்படியொரு அசாத்திய தருணம் 1993-இல் நிகழ்ந்தது.

சச்சின் தன்னுடைய சிறுவயதில் ஒரு வேகப்பந்துவீச்சாளராக விரும்பினார் என்பது நாம் அனைவரும் அறிந்தது. ஆனால், பேட்டிங்கில் அபார திறமை இருந்ததால், அந்த ஆசையை அவர் ஓரம்கட்டிவிட்டார். ஆனலும், பவுலிங் மீது ஒரு கண் இருந்தது. சச்சினின் பந்துவீச்சு சிறப்பே அவரால் மீடியம் ஃபாஸ்ட், ஆஃப் ஸ்பின், லெக் பிரேக் மற்றும் கூக்லி வகை பந்துவீச்சை செய்ய முடியும் என்பதுதான். அதனால்தான் அசாருதீன், கங்குலி முதலான கேப்டன்கள் சச்சினை சில இக்கட்டான தருணங்களில் பந்துவீச அனுமதித்தனர். அது பல நேரங்களில் நல்ல பலனையும் கொடுத்தது. அது முதல்முறையாக 1993-இல் ஹீரோ கோப்பை ஒருநாள் தொடரில் நிகழ்ந்தது.

1993 - ஹீரோ கோப்பை அரையிறுதிப் போட்டி

இந்தியா, தென்னாப்பிரிக்கா, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே நாடுகள் இடையே ஹீரோ கோப்பை ஒருநாள் போட்டித் தொடர்நடைபெற்றது. இதன் அரையிறுதிப் போட்டி, இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் இடையே கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் விளையாடிய இந்தியா 195 ரன்களை மட்டுமே எடுத்தது. மனோஜ் பிரபாகர், அஜய் ஜடேஜா, காம்ப்ளி, சச்சின் எல்லோரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஆனால், கேப்டன் அசாருதீன் மட்டுமே 90 ரன்களை சேர்த்தார். அவருக்கு துணையாக பிரவீன் ஆம்ரே 48 ரன்கள் எடுத்தார்.

195 என்ற எளிதான இலக்கை அசால்ட்டாக எடுக்கலாம் என பேட்டிங் செய்ய களமிறங்கிய தென்னாப்பிரிக்காவுக்கு ஷாக் கொடுத்தது இந்தியா. இந்தியாவின் அசத்தலான பந்துவீச்சின் காரணமாக தென்னாப்பிரிக்காவின் முக்கிய பேட்ஸ்மேன்களான கெப்லர் வெசல்ஸ், ஹான்சி குரோனியே, கல்லினன், ரோட்ஸ் எல்லோரும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். ஆண்ட்ரூ ஹட்சன் மட்டுமே நிலையாக விளையாடி 62 ரன்களை எடுத்தார். ஆனால், அவரும் கும்பளேவின் சுழலில் அவுட்டானார். ஆனால், பிரையன் மெக்மில்லன் தென்னாப்பிரிக்காவை வெற்றிப் பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும் எனப் போராடினார்.

ஆட்டம் பரபரப்பானது. இறுதி ஓவரில் தென்னாப்பிரிக்கா 6 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை. அப்போது அசாருதீன் 20 வயதே ஆன சச்சின் மீது நம்பிக்கை வைத்து அவரை பந்து வீசுமாறு கூறினார். இளம் சச்சினும் நம்பிக்கையுடன் பந்து வீசி அந்த ஓவரில் வெறும் 3 ரன்கள் மட்டுமே கொடுத்தார். இதையடுத்து, இந்தியா 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மெக்மில்லின் போன்ற சிறந்த பேட்ஸ்மேனை ரன் அடிக்கவிடாமல் அசத்தலாக பந்துவீசினார் சச்சின். கிரிக்கெட் வரலாற்றில் அதி அற்புதமான பந்துவீச்சு அது. ஒரு தேர்ந்த பந்துவீச்சாளர் வீசியிருந்தால் கூட அந்த இறுதி ஓவரை அத்தனை பிரமாதமாக வீசியிருக்கமாட்டார். ஆம், இந்தப் போட்டியில்தான் பவுலிங்கிலும் கெத்து என சச்சின் நிரூபித்த தருணம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com