நின்று விளையாடிய ருதுராஜ்! மும்பையிடம் கெத்து காட்டிய சென்னை அணி! மேட்ச் ரிவ்யூ!

நின்று விளையாடிய ருதுராஜ்! மும்பையிடம் கெத்து காட்டிய சென்னை அணி! மேட்ச் ரிவ்யூ!
நின்று விளையாடிய ருதுராஜ்! மும்பையிடம் கெத்து காட்டிய சென்னை அணி! மேட்ச் ரிவ்யூ!

சரியாக 140 நாட்களுக்கு முன்னதாக கொரோனா தொற்று பரவல் அபாயத்தால் ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் 2021 சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் இப்போது தொடங்கியுள்ளது. இரண்டாவது பாதி சீசனின் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் விளையாடின. 

ஐபிஎல் அரங்கில் சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் செம வெயிட்டான அணிகள். அதற்கு காரணம் ஆட்டக்களத்தில் அவர்கள் வெளிக்கொணரும் ஆதிக்கம். இரு அணிகளும் ஒன்றுக்கு ஒன்று இமியளவும் சளைத்தது அல்ல. 

நடப்பு சீசனில் இது இரண்டாவது மோதல்!

நடப்பு சீசனில் இரண்டாவது முறையாக இரு அணிகளும் நேருக்கு நேர் என்கவுன்டரில் இறங்கின. இந்த சீசனில் இரு அணிகளும் மோதிய முதல் ஆட்டத்தில் மும்பை அணி வெற்றி பெற்றிருந்தது. 

இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி, பேட்டிங் தேர்வு செய்தார். 

“இந்த ஆடுகளம் ரன் குவிப்புக்கு ஏதுவாக இருக்கும் என கருதுகிறேன். இந்த சீசன் மிகவும் புதுமையாக உள்ளது. ஏழு ஆட்டங்களுக்கு பிறகு ஒரு பிரேக். இப்போது மீண்டும் பிற்பாதி ஆட்டங்கள் தொடங்கி உள்ளன. ஷார்டர் பார்மெட் கிரிக்கெட்டை பொறுத்தவரையில் அன்றைய தினம் நமது செயல்பாடு எப்படி என்பதை பொறுத்து தான் வெற்றி, தோல்வி என்பது இருக்கும்” என தோனி டாஸ் வென்ற பிறகு சொல்லி இருந்தார். 

மும்பைக்கு ஆரம்பமே அமர்க்களமாக அமைந்தது!

சென்னை அணிக்காக டூப்ளசிஸ் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் தொடக்க வீரர்களாக களம் கண்டனர். இருவரும் சிறந்த தொடக்கத்தை கொடுப்பார்கள் என எதிர்பார்த்த நிலையில் முதல் ஓவரில் விக்கெட்டை இழந்தார் டூப்ளசிஸ். அந்த ஓவரை போல்ட் வீசி இருந்தார். 

அதோடு பவர் பிளே ஓவர் முடிவதற்குள் சென்னை அணி நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. டூப்ளசிஸ், மொயின் அலி, ரெய்னா, தோனி என நால்வரும் பெவிலியன் திரும்பி இருந்தனர். ராயுடு பேட் செய்த போது பந்து தாக்கிய காரணத்தினால் ரிட்டயர்ட் ஹெர்ட் முறையில் வெளியேறி இருந்தது குறிப்பிடத்தக்கது. 

மும்பை அணி சார்பில் போல்ட் மற்றும் மில்னே என இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள் பவர் பிளேயில் சென்னை அணியை அப்செட் செய்தனர். 

ருதுராஜ் - ஜடேஜா பார்ட்னர்ஷிப்!

24 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் மற்றும் ராயுடு ரிட்டயர்ட் ஹெர்ட் என சரிவிலிருந்த அணியை மீட்கும் டாஸ்கை ஜடேஜாவுடன் இணைந்து, இன்னிங்ஸை இன்ச் இன்ச்சாக பில்ட் செய்தார் ருதுராஜ் கெய்க்வாட். இருவரும் 81 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர். ஜடேஜா 26 ரன்களில் வெளியேற பின்னர் வந்த பிராவோ 8 பந்துகளில் 23 ரன்களை சேர்த்து அவுட்டானார். அதில் மூன்று சிக்ஸர்கள் அடங்கும்.

நாட்-அவுட் பேட்ஸ்மேன் ருதுராஜ்!

ருதுராஜ் 58 பந்துகளில் 88 ரன்களை சேர்த்து இறுதிவரை அவுட்டாகாமல் களத்தில் இருந்தார். அவரது இன்னிங்ஸில் 9 பவுண்டரிகளும், 4 சிக்ஸர்களும் அடங்கும். தனது திறனை நெருக்கடியான நேரத்தில் டெலிவர் செய்திருந்தார் ருதுராஜ். அதன் மூலம் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 156 ரன்களை எடுத்திருந்தது. 120 பந்துகளில் சென்னை அணி 54 பந்துகளில் ரன் ஏதும் எடுக்கவில்லை. அந்த 54 பந்துகளும் டாட் பால்கள். 

சேஸிங்கில் சொதப்பிய மும்பை!

157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டியது மும்பை இந்தியன்ஸ் அணி. ரோகித், ஹர்திக் பாண்ட்யா என இரண்டு நட்சத்திர வீரர்களை மும்பை இந்த ஆட்டத்தில் மிஸ் செய்தது. அதனால் டிகாக் மற்றும் அறிமுக வீரர் அன்மோல்பிரீத் சிங் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். 

இன்னிங்ஸின் 14-வது பந்தில் டிகாக், LBW முறையில் வெளியேறினார். அவரது விக்கெட்டிற்கு முதலில் அம்பயரிடம் சென்னை அணி அப்பீல் செய்ய, அதற்கு நாட் அவுட் கொடுக்கப்பட்டது. தொடர்ந்து சென்னை அணியின் கேப்டன் தோனி DRS ரிவ்யூ எடுத்தார். அதில் அவுட் உறுதியானது.   

தொடர்ந்து அன்மோல்பிரீத் சிங், சூரியகுமார் யாதவ் என இருவரும் விக்கெட்டுகளை இழந்தனர். பவர் பிளே ஓவர் முடிவில் மும்பை அணி மூன்று விக்கெட்டுகள் இழப்புக்கு 41 ரன்களை எடுத்திருந்தது. 

பொல்லார்ட் அவுட்!

தொடர்ந்து இஷன் கிஷன், பொல்லார்ட், குர்ணால் பாண்ட்யா என மூவரும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர். இதில் குர்ணால் ரன் அவுட்டாகி இருந்தார்.  

இருப்பினும் களத்தில் சவுரப் திவாரி பொறுப்புடன் விளையாடினார். அவருக்கு கைகொடுக்க மறுமுனையில் பேட்ஸ்மேன்கள் யாரும் அணியில் இல்லை. அதனால் பவுலர்களுடன் இறுதி ஓவர்களில் ரன் சேர்க்க முயற்சித்து தோல்வி கண்டார்.

மாஸ் காட்டிய தீபக் சஹார்! 

டி20 கிரிக்கெட் ஸ்பெஷலிஸ்ட் பவுலரான தீபக் சஹார் நான்கு ஓவர்களில் 19 ரன்கள் மட்டுமே கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். மும்பை அணியின் தொடக்க வீரர்கள் இருவரையும் அவர் அவுட் செய்திருந்தார். 

ஹேசல்வுட் (1), தாக்கூர் (1) மற்றும் பிராவோ (3) தங்கள் பங்கிற்கு விக்கெட்டுகளை வீழ்த்தினர். 20 ஓவர் முடிவில் மும்பை அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 136 ரன்கள் எடுத்து ஆட்டத்தில் தோல்வியை தழுவியது. 

சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் நடப்பு சீசனில் 8 போட்டிகளில் விளையாடி 6 வெற்றிகளை பதிவு செய்துள்ளது. அதன் மூலம் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. அடுத்த சுற்றுக்கு முன்னேற சென்னை அணிக்கு இந்த முறை வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com