கடைசி பந்தில் சிக்ஸர் விளாசி அதிரடி சதம்! ஆரஞ்சு கேப்பை தட்டி தூக்கிய ருதுராஜ் கெய்க்வாட்

கடைசி பந்தில் சிக்ஸர் விளாசி அதிரடி சதம்! ஆரஞ்சு கேப்பை தட்டி தூக்கிய ருதுராஜ் கெய்க்வாட்
கடைசி பந்தில் சிக்ஸர் விளாசி அதிரடி சதம்! ஆரஞ்சு கேப்பை தட்டி தூக்கிய ருதுராஜ் கெய்க்வாட்

நடப்பு ஐபிஎல் சீசனின் 47-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்த ஆட்டத்தில் சென்னை அணி டாஸை இழந்து முதலில் பேட் செய்தது. 

நடப்பு ஐபிஎல் சீசனில் இந்தப் போட்டியை மறக்க முடியாத ஒரு போட்டியாக மாற்றியுள்ளார். கடைசி பந்தில் சிக்ஸர் விளாசி சதத்தை அவர் பூர்த்தி செய்த விதம் சிஎஸ்கே ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது. கிரிக்கெட் ரசிகர்களையும் தான். ஏனெனில் தொடக்கம் முதலே அவரது கிளாசிக்கான ஆட்டத்திற்கு பலரும் ரசிகர்கள் ஆகிவிட்டார்கள்.

ருதுராஜ் - டூபிளசிஸ் நிதான தொடக்கம்:

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மீண்டுமொரு முறை ருதுராஜ் மற்றும் டூப்ளசிஸ் நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். அதனால் பவர் பிளே ஓவர்கள் முடிவில் சென்னை 44 ரன்களை எடுத்திருந்தது. இதன் மூலம் தொடர்ச்சியாக நான்கு போட்டிகளாக பவர் பிளேயில் விக்கெட்டுகளை இழக்காமல் சென்னை அணி விளையாடி வருகிறது. 59, 52, 47 மற்றும் 44 (இந்த போட்டி) ரன்களை விக்கெட்டுகளை விட்டுக்கொடுக்காமல் சென்னை எடுத்துள்ளது. டூப்ளசிஸ் 25 ரன்களில் அவுட்டானார். தொடர்ந்து வந்த ரெய்னா 3 ரன்களில் வெளியேறினார். 

மொயின் அலி - ருதுராஜ் பார்ட்னர்ஷிப்:

மொயின் அலி உடன் 57 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தார் ருத்துராஜ். 42 பந்துகளில் அரை சதம் பதிவு செய்தார் ருதுராஜ். மொயின் அலி 21 ரன்களில் அவுட்டானார். பின்னர் வந்த ராயுடு 2 ரன்களில் வெளியேறினார். ரெய்னா தொடர்ச்சியாக ஏமாற்றி வருவது போல், ராயுடுவும் பல போட்டிகளில் விரைவில் ஆட்டமிழந்துவிடுகிறார். அடுத்துதோனி களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஜடேஜா களத்திற்கு வந்தார்.

மிரட்டிய ஜடேஜா, சதம் விளாசிய கெய்க்வாட்

ஜடேஜா வந்த வேகத்தில் தொடக்கம் முதலே அதிரடி காட்டினார். சிக்ஸரும், பவுண்டரியுமான விளாசி தள்ளினார். 18 ஓவர்கள் முடிவில் கெய்க்வாட் 93 ரன்கள் எடுத்திருந்தார். சதத்திற்கு அவருக்கு இன்னும் 7 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. 19 ஆவது ஓவரின் கடைசி பந்தை மட்டுமே அவர் எதிர் கொள்ள நேர்ந்தது. முதல் 5 பந்துகளையும் ஜடேஜாவே எதிர்கொண்டு ரன்களை அடித்துக் கொண்டிருந்தார். சரி கடைசி ஓவரிலாவது கெய்க்வாட்டிற்கு வாய்ப்பு கிடைக்கும் என்று பார்த்தால், முதல் பந்தில் பவுண்டரி, இரண்டாவது பந்தில் சிக்ஸர், மூன்றாவது பந்தில் சிக்ஸர் என வானவேடிக்கை காட்டிக் கொண்டிருந்தார். நான்காவது பந்தில்தான் சிங்கிள் எடுத்து கெய்க்வாட்டிற்கு வாய்ப்பு கொடுத்தார். இன்னும் இரண்டு பந்துகள் மட்டுமே இருந்தது. எல்லோரும் கெய்க்வாட் சதத்தை எதிர் நோக்கி இருந்தனர். 5வது பந்தும் டாட் பந்து ஆகிவிட்டது. ஆனால், கடைசி பந்தில் இமாலய சிக்ஸர் விளாசி சதத்தை நிறைவு செய்தார் கெய்க்வாட். 

20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 189 ரன்களை எடுத்திருந்தது. ருதுராஜ் 60 பந்துகளில் 101 ரன்களை எடுத்து இருந்தார். ஜடேஜா 15 பந்துகளில் 32 ரன்களை எடுத்தார். சென்னை இன்னிங்ஸின் கடைசி பந்தில் சிக்சர் விளாசி சதத்தை பதிவு செய்திருந்தார் அவர். ஐபிஎல் அரங்கில் அவரது முதல் சதம் இது. சென்னை அணிக்காக சதம் விளாசிய இளம் வயது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். 

சென்னை அணி 12 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 83 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் கடைசி 8 ஓவரில் 106 ரன்கள் குவித்தது. கெய்க்வாட் கடைசி 30 பந்துகளில் 71 ரன்கள் விளாசி தள்ளினார்.

நடப்பு சீசனில் மொத்தம் 12 ஆட்டங்களில் விளையாடி 508 ரன்களை எடுத்துள்ளார் கெய்க்வாட். இதன் மூலம் நடப்பு சீசனில் அதிக ரன்கள் பதிவு செய்த வீரர்களில் முதலிடம் பிடித்துள்ளார் அவர். அதனால் ஆரஞ்சு நிற தொப்பி தற்போது ருதுராஜ் வசம் உள்ளது. இறுதி வரை அவுட்டாகாமல் களத்தில் இருந்தார் அவர். 

கெய்க்வாட் நடப்பு ஐபிஎல் சீசனின் முதல் மூன்று போட்டிகளில் முறையே 5, 5, 10 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். அதற்கு பிறகு எரிமலையாக வெடித்த கெய்க்வாட் 64, 33, 75, 4, 88*, 38, 40, 45 & 101* ரன்கள் குவித்து அசத்தியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com