சிஎஸ்கே-வின் வெற்றிக்கு முற்றுப்புள்ளி! பிளே ஆப் வாய்ப்பை தக்க வைத்தது ராஜஸ்தான்!

சிஎஸ்கே-வின் வெற்றிக்கு முற்றுப்புள்ளி! பிளே ஆப் வாய்ப்பை தக்க வைத்தது ராஜஸ்தான்!

சிஎஸ்கே-வின் வெற்றிக்கு முற்றுப்புள்ளி! பிளே ஆப் வாய்ப்பை தக்க வைத்தது ராஜஸ்தான்!

நடப்பு ஐபிஎல் சீசனின் 47-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி சென்னையை முதலில் பேட் செய்ய பணித்தது. அதனால் சென்னை அணி முதலில் பேட் செய்தது. 

பவர் பிளேயில் சென்னை அசத்தல்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டூப்ளசிஸ் இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர். இருவரும் வழக்கம் போல நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். அதனால் பவர் பிளே ஓவர்கள் முடிவில் சென்னை 44 ரன்களை எடுத்திருந்தது. 

இதன் மூலம் தொடர்ச்சியாக நான்கு போட்டிகளாக பவர் பிளேயில் விக்கெட்டுகளை இழக்காமல் சென்னை அணி விளையாடி உள்ளது. 59, 52, 47 மற்றும் 44 (இந்த போட்டி) ரன்களை விக்கெட் இழப்பின்றி சென்னை எடுத்துள்ளது. டூப்ளசிஸ் 25 ரன்களில் அவுட்டானார். மூன்றாவது பேட்ஸ்மேனாக வந்த ரெய்னா மூன்றே ரன்களில் வெளியேறினார். 

மொயின் அலி - ருதுராஜ் அசத்தல்!

மிகக் குறைந்த பந்துகளில் அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை சென்னை அணி இழந்து தடுமாறியது. அதை பயன்படுத்தி ராஜஸ்தான் அணி ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மொயின் அலி - ருதுராஜ் இணையர் ரெட்டை குழல் துப்பாக்கி போல பேட்டிங்கில் வெடித்து சிதறினார்கள். இருவரும் இணைந்து 57 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். மொயின் அலி 21 ரன்களில் அவுட்டானார். 

ருதுராஜ் அசத்தல்! 

24 வயதான சென்னை அணியின் இளம் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் 60 பந்துகளில் 101 ரன்களை எடுத்திருந்தார். 9 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்கள் இதில் அடங்கும். கடைசி பந்தில் சிக்சர் அடித்து சதம் பதிவு செய்தார் ருதுராஜ். இது ஐபிஎல் கிரிக்கெட்டில் அவர் பதிவு செய்துள்ள முதல் சதம். இந்த சீசனில் 508 ரன்களை எடுத்து லீடிங் ரன் ஸ்கோரராகி உள்ளார் அவர். 

சென்னை அணி சார்பில் ஐபிஎல் களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள 9-வது சதம் இது. 

ஜடேஜா அதிரடி!

ராயுடு வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பி இருந்தாலும் சென்னை அணியின் ஆல் ரவுண்டர் ஜடேஜா 15 பந்துகளில் 32 ரன்களை எடுத்திருந்தார். அதன் மூலம் 22 பந்துகளில் 55 ரன்களுக்கு ருதுராஜ் உடன் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தார். 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 189 ரன்களை எடுத்தது சென்னை. 

அதிரடி தொடக்கம் கொடுத்த ராஜஸ்தான்!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டியது. அந்த அணிக்காக எவின் லூயிஸ் மற்றும் யாஷ்ஸ்வி ஜெய்ஸ்வால் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். 5 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 75 ரன்களை குவித்தது ராஜஸ்தான். கிட்டத்தட்ட அந்த அணி ரன் குவிக்க அது அடித்தளம் அமைத்துக் கொடுத்தது. 

எவின் லூயிஸ் 12 பந்துகளில் 27 ரன்களை குவித்து அவுட்டானார். 

சென்னையை மிரட்டிய ஜெய்ஸ்வால்! 

19 வயதான இளம் வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 19 பந்துகளில் தனது முதல் ஐபிஎல் அரை சதத்தை பூர்த்தி செய்தார். ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிவேகமாக அரை சதம் அடித்த Uncapped பிளேயர் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார் ஜெய்ஸ்வால். ஆறு பவுண்டரி, மூன்று சிக்ஸர்கள் இந்த இன்னிங்ஸில் அடங்கும். அவரது ஆட்டம் சென்னைய மிரள வைத்தது. 

பட்டாஸாக வெடித்து சிதறிய ஷிவம் தூபே!

அமீரகத்தில் நடைபெறும் இரண்டாவது பாதி ஆட்டத்தில் தனது முதல் போட்டியில் களம் இறங்கினார் ஷிவம் தூபே. 42 பந்துகளில் 64 ரன்களை குவித்து இறுதி வரை அவுட்டாகாமல் இருந்தார் அவர். 31 பந்துகளில் தனது முதல் ஐபிஎல் அரை சதத்தை பதிவு செய்தார். ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் அவுட்டான பிறகு ஆட்டம் சென்னை பக்கமாக திரும்பும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தூபே பட்டாஸாக வெடித்து சிதறியதால் ஆட்டம் ராஜஸ்தான் வசமே இருந்தது. 

முடிவில் 15 பந்துகள் எஞ்சியிருக்க 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது ராஜஸ்தான் அணி. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை உயிர்ப்புடன் வைத்துள்ளது. 

சென்னை அணியின் தோல்விக்கு காரணம் என்ன?

“டாஸை இழந்தது துரதிர்ஷ்டவசம். 190 ரன்கள் நல்ல ஸ்கோர் தான். Dew ஆட்டத்தை மாற்றியது. அது தவிர ராஜஸ்தான் அணி பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடி பவுலர்கள் மீது அழுத்தம் செலுத்தினர். இந்த ஆட்டத்தில் செய்த தவறுகளில் இருந்து நிச்சயம் திருத்திக் கொள்வோம். ஏனென்றால் பிளே ஆப் சுற்றில் ஆட்டதை இழந்த பிறகு தவறுகளை திருத்திக் கொள்வதில் எந்த உபயோகமும் இருக்காது. ருதுராஜ் மிகச்சிறப்பாக விளையாடி இருந்தார்” என தோனி தோல்விக்கு பிறகு சொல்லி இருந்தார்.  

பிராவோ மற்றும் தீபக் சஹார் இல்லாதது சென்னை அணி பவுலிங்கில் ஜொலிக்க தவறியதற்கு முக்கியக் காரணம். 

மூன்று ஓவர்களில் ஹேசல்வுட் 50 ரன்களை விட்டுக் கொடுத்திருந்தார். சாம் கரன் நான்கு ஓவர்களில் 55 ரன்களை விட்டுக் கொடுத்திருந்தார். சுழற் பந்து வீச்சும் பெரிய அளவில் சென்னைக்கு கைகொடுக்கவில்லை. இந்த ஆட்டத்தில் ‘மேன் ஆப் தி மேட்ச்’ விருதை ருதுராஜ் கெய்க்வாட் வென்றிருந்தார். “இந்த ஆட்டத்தில் சென்னை வெற்றிப் பெற்றிருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும்” என அந்த விருதை பெற்று பொது ருதுராஜ் சொல்லி இருந்தார். 

இந்த ஆட்டத்தில் சென்னையை வென்றதன் மூலம் ஆறாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது ராஜஸ்தான். கொல்கத்தா, பஞ்சாப், ராஜஸ்தான், மும்பை என 12 போட்டிகளில் விளையாடி 10 புள்ளிகளை பெற்று 4, 5, 6 மற்றும் 7-வது இடத்தில் உள்ளன. இந்த நான்கு அணிகளும் இப்போது பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பு உள்ளது. இந்த நான்கு அணிகளில் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவது எந்த அணி என்பது அடுத்தடுத்த போட்டிகளில் தெரிந்துவிடும்.   

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com